18வயது பெண் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டது. இதனடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்ட தகவல்
சேகரிப்புகளில் இதுவரை பின்வரும் விவரங்கள் கிடைத்துள்ளன.
வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண் (18 வயது), முள்ளி, அரியாலை, யாழ்ப்பாணம். தாய் தந்தை மற்றும் ஐந்து சகோதரர்கள் (நான்கு பெண்கள், ஒரு ஆண்) கொண்ட குடும்பம். இவர் மூன்றாவது மகள்.
வல்லுறவுக்குட்படுத்திய ஆண் (32வயது) அதே இடத்தைச் சேர்ந்தவன். பாதிக்கப்பட்ட குடும்பத்தவருக்கு தூரத்து உறவினன்,
அயலவன் மற்றும்; வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்ணின் அண்ணனின் நண்பன்; ஏற்கனவே திருமணமானவன். டிராக்றரில் மண் ஏத்தும் தொழில் செய்பவன்.
இது ஒரு முற்திட்டமிடப்பட்ட பாலியல் பலாத்காரம் மற்றும் பாரதூரமான உடலியல் ரீதியான வன்முறை.
தீபாவளிக்கு 2 தினங்களுக்கு முன் (திகதி) வன்முறையாளனுக்கும் பெண்ணினது குடும்பத்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பெண்ணின் சகோதரனை வன்முறையாளன் அடித்த போது இந்தப் பெண் முறைத்துள்ளார். “உனக்கு செய்கிறேன் பார்”; என்று
வன்முறையாளன் மிரட்டி அடித்துள்ளான். இது பற்றி பெண்ணின் தாயாரால் யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆயினும் வன்முறையாளன் பற்றிய அச்சம் காரணமாகத் தாயார் பெண்ணை அதே ஊரிலுள்ள மாமன் வீட்டில் ஒளித்து வைத்துள்ளார்.
22..10.2014 அன்று பெண் அரியாலை பூம்புகாரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அக்காவின் வீட்டில் இவரது அக்காவும் இரண்டு சிறுபிள்ளைகளுமே இருந்துள்ளனர்.
வன்முறையாளன் தனது நண்பனுடன் குறித்த அக்காவின் வீட்டிற்கு இரவு 8.30 – 9 00 மணியளவில் வந்துள்ளான். அக்காவின் பிள்ளைகளினை கொல்லப் போவதாக மிரட்டி 18வயதுப் பெண்ணை தன்னுடன் வரும்படி வற்புறுத்தியுள்ளான். இதன் போது
அக்காவும் இப்பெண்ணும் சத்தமிட்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
சத்தம் கேட்டு அயலில் உள்ளவர்கள் வந்தும் 18வயதுப் பெண் தன்னைக் காப்பாற்றும்படி அவர்களது காலில் விழுந்து கெஞ்சியும்; மேற்படி வன்முறையாளன் தொடர்பாக உள்ள அச்சம் காரணமாக யாரும் உதவி செய்யவில்லை.
வன்முறையாளன் பெண்ணை மோசமாக அடித்து வற்புறுத்தி பலவந்தமாக நண்பனின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளான்.
இப்பெண் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது இருதடவை தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் வன்முறையாளன் அவரை மீண்டும் இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளான். அதன்போது நண்பர் கீழேவிழ அவரை விட்டுவிட்டு பெண்ணை
மட்டும் கொண்டு சென்றுள்ளான். முதலாவதாக அரியாலையில் மண்வெட்டி எடுக்கப்படும் பற்றைக்காடாக உள்ள ஒரு பகுதிக்கும் பின்னர் அருகில் உள்ள வேறு இரு இடங்களிற்கும் இழுத்துச் சென்று பெண்ணை பலதடவை கொடூரமாக வன்புணர்வு செய்துள்ளார்.
மேலும், இரும்புக்கம்பி கயிறு போன்றவற்றால் அடிக்கப்பட்டு உடல்ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பெண்ணைக் கடத்திச் சென்ற நேரத்திலிருந்து அவரது குடும்பத்தினர் அவரைத் தேடியுள்ளனர். அவரது அக்கா உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இப்பெண்ணைக் காணவில்லை என பெண்ணின் தாயாரினாலும், சகோதரியினாலும் போடப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் அடிப்படையில் 23.10.2014 காலை 10.00 மணியளவில் பொலிஸ் முள்ளி-அரியாலைக்கு சென்று
பாதிக்குப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்ணினை வன்முறையாளனது வீட்டில் கண்டுபிடித்துள்ளனர். பின் இப்பெண் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது. அதன்பின் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27.10.2014 அன்று பொலிஸ் குறித்த வன்முறையாளனைக் கைதுசெய்ய முயற்சித்த வேளை பொலிஸும் ஊர் மக்களும் அவனை விரட்டிச் சென்ற போது அவன் ஓடி ஒளித்ததாகவும் பின்னர் ஒரு சட்டத்தரணியின் உதவியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளான்.
குறித்த வன்முறையாளன் தொடர்பாகவும், வன்முறை தொடர்பாகவும் ஊர்pலுள்ளவர்களுடன் சில பெண்களுடன் கலந்துரையாடிய போது இவன் வேறு பல தொடர் வன்முறைகளில் ஈடுபட்டிருப்பதும் வெளிப்படுத்தப்பட்டன.
மேலும் இவனுக்கு அனுசரணையாகவோ இவன் போன்றோ ஒரு கும்பல் இருப்பதும் இவனது குற்றங்களுக்கு அவர்கள உடந்தையாக
இருப்பது போன்று அவர்களும் மோசமான குற்றங்களைப் புரிவதாகவும் கூறப்படுகின்றது.