தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்
என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள், டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது என்றார்.
தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வலியுறுத்தினோம் என்று கூறிய சம்பந்தன், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சி்ங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன என்றும், சிங்கள குடியேற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் உடனான சந்திப்பை தொடர்ந்து அவர்கள், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகின்றனர். இந்த சந்திப்புகளின்போது, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
குறிப்பாக, 13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும், தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை அகற்றவும் இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி கொடுக்க, அவர்கள் வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.
இதேபோன்று, போர்க்குற்றப் புகார் குறித்த ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கை மற்றும் இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாகவும் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கோரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரையும் இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.