தமிழ் மக்கள் தேசிய இனம் என்று சொல்லாத வகையில் இராணுவத்தின் செயற்பாடுகள் உள்ளன!– செல்வம் எம்.பி - TK Copy தமிழ் மக்கள் தேசிய இனம் என்று சொல்லாத வகையில் இராணுவத்தின் செயற்பாடுகள் உள்ளன!– செல்வம் எம்.பி - TK Copy

  • Latest News

    தமிழ் மக்கள் தேசிய இனம் என்று சொல்லாத வகையில் இராணுவத்தின் செயற்பாடுகள் உள்ளன!– செல்வம் எம்.பி

    வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட முறையில் மண்ணை அபகரிக்கின்றனர்.
    மக்களை சுதந்திரமாக வாழவிடவில்லை. பூர்வீகமாக வாழுகின்ற பிரதேசங்களை இராணுவத்தினர் உடைத்து நொறுக்குகின்றனர். தமிழினத்தை தேசிய இனம் என்று சொல்லாத வகையில் இவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
    மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள துளசி மண்டபத்தில் சனிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய அனைத்துலக சமூகமும், தமிழ் தேசிய அரசியலும் சமகால பார்வை எனும் அரசியல் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தொடர்ந்து உரையாற்றிய அடைக்கலநாதன் எம்.பி,
    இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் அடக்குமுறையும் அவர்களின் அட்டகாசமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்றார்.
    தேசிய இனம் என்று சொல்கிறாயா? தேசிய இனம் என்று சொல்வதை அழித்து விடுகின்றேன் என கங்கனம் கட்டி திட்டமிட்ட முறையில் தமிழர்கள் அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட அழிக்கப்படுகின்றனர்.
    வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட முறையில் மண்ணை அபகரிக்கின்றனர். மக்களை சுதந்திரமாக வாழவிடவில்லை. பூர்வீகமாக வாழுகின்ற பிரதேசங்களை இராணுவத்தினர் உடைத்து நொறுக்குகின்றனர். தமிழினத்தை தேசிய இனம் என்று சொல்லாத வகையில் இவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
    வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மலசலகூடங்களின் கதவை திறந்தால் அதற்குள்ளும் இராணுவத்தினர்தான் இருக்கின்றனர். திருமண வீடென்றாலும், மரண விடென்றாலும் இராணுவத்தினருக்கு அழைப்புக் கொடுத்தேயாக வேண்டும். எழுந்து நின்று உரிமைக்காக அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதவாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
    ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நமக்கு 33 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ் மக்களின் அவலக்குரல் ஐக்கிய நாடுகள் சபையின் கதவைத் தட்டி திறக்க வைத்துள்ளது.
    இந்தியாவில் இன்று வலுவான அரசாங்கம் உருவாகியுள்ளது. இந்திய பிரதமரின் சத்தியப்பிரமாணத்துக்கு சென்றவர்களிடம் இராணுவம் வெளியேற வேண்டும், 13க்கு அப்பால் சென்று பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது.
    தமிழ் நாட்டில் 37 ஆசனங்களை ஜெயலலிதா பெற்றுள்ளார். இதனால் நமக்கு இன்று சாதகமே ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்பெறச் செய்யும் வகையில் அனைவரும் அணி திரள வேண்டும் என்று அவர் கூறினார்.
    அபிவிருத்தியின்பால் இனப்பிரச்சினையை தீர்;த்து விடமுடியாது. இன்று கிராமப்புறங்களில் எமது நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றன. எமது வட மாகாண சபையின் நடவடிக்கைகளை முடக்கி விடப்பட்டுள்ளது. சுதந்திரமாக செயற்பட முடியவில்லை. 


    மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் வந்து விடுவார்கள் எனக் கூறி கூறியே இந்த அடக்கு முறையினை மேற்கொள்கின்றனர். போர்ச் சூழலில் வாழுவது போன்றே இன்றும் வாழந்து கொண்டிருக்கின்றோம்.

    இந்தியாவுக்குச் சென்றால் 13க்கு அப்பால் சென்றும் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் இலங்கையில் பாராளுமன்றத்தெரிவுக்குழுவில்தான் பிரச்சினையை தீர்ப்போம் என்கின்றனர். தென்னாபிரிக்கா தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.
    சரியான சந்தர்ப்பம் இன்று நமக்கு கிடைத்துள்ளது. இதை தவற விடக்கூடாது. தவற விட்டால் தந்தை செல்வா சொன்னது போல தமிழ் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கும். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணைத்து தமிழ் மக்களும் அணி திரள வேண்டும்.
    இன்று இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ள மக்களின் பலம், வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த உறவுகளின் பலம், தமிழ் நாட்டின் பலம் ஆகிய மூன்று சக்திகளும் தமிழ் மக்களின் ஒரு மித்த குரலாக ஒன்று சேர்ந்துள்ளது. அடக்கு முறைகளுக்கு எதிராக எமது ஜனநாயக போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.
    தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனைத்தையும் செய்யட்டும் என்று நாம் பார்த்துக் கொண்டு இருந்துவிடக் கூடாது. அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். காணியினை பறித்தெடுக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்வதாக கூறி கைது செய்கின்றனர். உரிமையைப் பற்றி பேசமுடியாது. இவ்வாறான சூழ்நிலையே இன்று காணப்படுகின்றன.

    உலகில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழர்களின் சக்தியாக உள்ளது. நமது தேசத்தை வென்றெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும். இராணுவ அட்டூழியம் என்பது ஒரு கூட்டத்தை நடாத்த முடியாமலுள்ளது. கூட்டத்தை நடத்தினால் இராணுவ புலனாய்வுத்துறையினர் 25 பேர் அக்கூட்டத்தில் இருப்பார்கள்.
    இவர்கள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை தனி தனியே புகைப்படமெடுத்து அதை பார்த்து அன்றிரவே அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை கூட்டத்திற்கு செல்லக் கூடாது என அச்சுறுத்துகின்றனர்.
    புனர்வாழ்வு பெற்றவர்களை ஒவ்வொரு நாளும் இராணுவத்தினரை சந்திக்க வருமாறு கோருகின்றனர். சந்திக்க தவறினால் அவர்களை அடித்து எச்சரிக்கின்றனர். அவர்களின் வீட்டில் என்ன நடந்தாலும் இராணுவத்தினருக்கு அழைப்பு கொடுத்தே ஆகவேண்டும்.
    ஒரு முறைதான் நமக்கு மரணம் வரும். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு சமஸ்டியே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது என அடைக்கலநாதன் எம்.பி இங்கு மேலும் தெரிவித்தார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தமிழ் மக்கள் தேசிய இனம் என்று சொல்லாத வகையில் இராணுவத்தின் செயற்பாடுகள் உள்ளன!– செல்வம் எம்.பி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top