சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த
விசாரிப்பதற்கான குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இன்னமும் நியமிக்கவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இந்த விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், கடந்த வாரம் பலரது பெயர்கள் ஆராயப்பட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு, இன்னமும் இந்த விசாரணைக் குழுவின் நியமனம் குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் அடுத்தவாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில், இந்த விசாரணைக்குழு பற்றிய அறிவிப்பு இந்த வாரம் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வரும் 10ம் நாள் உரையாற்றவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா குறித்து கருத்து வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தமது உரையில் விசாரணைக்குழுவின் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதுடன், சிறிலங்கா அரசாங்கம் அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கவுள்ளது.