தென்கிழக்கு ஆசியத் தீவு நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா
பசிபிக் கடலின் புவியியல் டெக்டானிக் பிளவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் அங்கு பூகம்பங்களும், எரிமலை சீற்றங்களும் அடிக்கடி காணப்படும் நிகழ்வுகளாகும். கடந்த பிப்ரவரி மாதம் கிழக்கு ஜாவா தீவில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை சீற்றத்தில் பலர் பலியானதுடன் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அந்த சமயத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் நேர்ந்தது.இதுபோல் இந்தோனேசியாவில் உள்ள சங்கியாங் அபி தீவின் எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீறத் தொடங்கியுள்ளது. இதிலிருந்து வெளியாகும் லாவா குழம்புகள் அருகில் பரவி நிறையும்போது அதிலிருந்து வெடித்துச் சிதறும் சாம்பல் மற்றும் கற்களின் துகள்கள் காற்றில் பரவுகின்றன. இதனால் அங்குள்ள பிரபலமான சுற்றுலாத் தளமான பாலித் தீவிற்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இது மட்டுமின்றி வடக்கு ஆஸ்திரேலியாவிற்குமான சேவைகளும் இதனால் நிறுத்தப்பட்டன. வார இறுதியில் ஏற்பட்ட இந்த நிலைமை சீரடைவதற்கு இன்னும் சில தினங்கள் ஆகலாம் என்று ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் வாரன் ட்ரஸ் அறிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் சில விமான நிறுவனங்கள் இன்று தங்களது சேவையை மீண்டும் முழுமையாகத் தொடங்கின. ஆனால் பாலி தீவிற்கான ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் இரண்டு விமான சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளின் திட்டமிட்ட பயணங்களுக்கு இடையூறை அளிப்பதாக இருக்கின்றது.
எரிமலை சாம்பல் மேகங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காற்று மெதுவாக இருப்பதால் மேகங்கள் மேற்கிலிருந்து தென்மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் டார்வின் எரிமலை சாம்பல் ஆலோசனை மையத்தின் செய்தித் தொடர்பாளரான பிரி மாக்பெர்சன் தெரிவித்துள்ளார்.