நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் இரண்டாவது நேரடி பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 5ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வும், பிரான்சில் துணை அமர்வும், தொழில்நுட்ப வழி இரண்டும் இணைந்ததாக இடம்பெறும் இந்த பாராளுமன்றத் கூட்டத் தொடரானது, எதிர்வரும் 7ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மூன்றுநாள் இடம்பெறுகின்றது.
தமிழகத்தின் ஆளும் அதிமுக கட்சியின் பிரதிநிதி நாஞ்சில் சம்பத் அவர்களும், மலேசியா பினாங்கு மாநில் துணை முதல்வ் இராமசாமி அவர்களும் இந்த அமர்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கெடுத்துள்ளனர்.
குறிப்பாக பிரான்சில் இடம்பெறுகின்ற துணை அமர்வு பாரிசின் புறநகர் Blanc Mesnil பகுதியான பகுதியின் நகரசபைபிதாவின் உறுதுணையுடன் நகரசபை மண்டபத்திலேயே இடம்பெறுகின்ற முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
அமைச்சர்களின் ஆண்டறிக்கைகள், 2015ம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டங்கள், தீர்மானங்கள், விவாதங்கள் என பல்வேறு விவகாரங்கள் மூன்று நாள் அமர்விலும் இடம்பெறவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாட்டுத்தளத்தில், சனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நேரடித் தேர்தலின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று ஒரு முக்கிய காலகட்டத்தில் உள்ளதென்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரால் மேற்கொள்ளப்படும் பன்னாட்டு விசாரணை, இந்திய ஆட்சிமாற்றம், ஸ்கொட்லாந்து தேசத்தினது பொதுசன வாக்கெடுப்பு போன்றவை, ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பல்வகை சந்தர்ப்பத்தை கொடுத்துள்ள நிலையில் இந்த அமர்வு இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.