பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீடமேறினால், தமிழீழம் மலரும் என ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு மிகவும் கவலையுடன் எடுக்கப்பட்ட ஒன்றாகும். கட்சி ஆரம்பிக்கப்பட்டு 15 வருட காலமாக விசுவாசமாக இருந்த எனக்கு மைத்திரிபால வெற்றி பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுக்க வேண்டி ஏற்பட்டது.
நான் கட்சியை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் அதைவிடவும் தாய் நாட்டை நேசிக்கின்றேன். ஹெல உறுமயவுக்கு எனக் கொள்கைகள் உள்ளன.நாங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் சில திருத்தங்களையே செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம்.
ஆனால், பொது எதிரணி வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 100 நாள்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக கைச்சாத்திட்டார். இதேவேளை, அங்கு 3 மணித்தியாலங்களின் பின்னர் ஹெல உறுமயவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி முறையில் திருத்தங்களை செய்வதாக கைச்சாத்திட்டார். இவர் யாரை ஏமாற்றப்பபோகிறார்? ஐ.தே.கவையா? அல்லது ஹெல உறுமயவையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் முடிந்து இவர்கள் எவ்வாறு ஸ்திரமான அரசை நிறுவப்போகிறார்கள். இவர்களால் 100 நாள்களில் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் போலி நாடகமே.தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் நாடு துண்டு துண்டாக சிதறிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாங்கள் முதலில் அரசிலிருந்து வெளியேறி, பெளத்த அமைப்புகள் ஒன்றினைந்து 3 ஆவது ஜனாதிபதி வேட்பாளரை தேர்தலில் நிறுத்தவே தீர்மானித்தோம்.ஆனால், அது சாத்தியப்படவில்லை. எனினும், எனக்குப் பொது எதிரணி வேட்பாளரை ஆதரிப்பதில் எந்தவித உடன்பாடும் இருக்கவில்லை.
மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடம் ஏறினால் நாட்டில் மக்கள் ஆட்சி இல்லாமல் போய் தமிழீழம் உருவாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளது.
ஏனெனில் இந்த எதிர்க் கட்சிக் கூட்டணியில் இருப்பவர்கள் மேற்குலக நாடுகளின் முகவர்கள். இதனால் தற்போதுள்ள அரசைப் பாதுகாக்க வேண்டியது இலங்கையர் என்ற வகையில் எனது பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்