இலங்கையில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதை தடை செய்யப் போவதாக, ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்துப் பேசுவதற்காக, சிறிலங்கா அமைச்சர் சரத் அமுனுகம பிரசெல்ஸ் செல்லவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, இலங்கையில் மீன்பிடி முறைகளை இடம்பெறாததை சுட்டிக்காட்டி, கடந்த ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் மீன் இறக்குமதியை தடை செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு எச்சரித்திருந்தது.தாம் முன்வைத்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால், வரும் ஜனவரி மாத நடுப்பகுதயில் இருந்து இலங்கையில் இருந்து மீன் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், இதுகுறித்துப் பேச்சு நடத்துவதற்கு அமைச்சர் சரத் அமுனுகமவை, வரும் புதன்கிழமை பிரசெல்சுக்கு அனுப்ப இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளில் 95 வீதமானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், எனவே, சட்டவிரோத மீன்பிடி என்று காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை நீடிப்பது சரியானதல்ல என்றும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் செயலர் திசநாயக்க தெரிவித்துள்ளதார்.இந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்வதற்கு முடிவு செய்தால் அதற்கு அரசியல் ரீதியான காரணங்களே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிகப்பெரிய மீன் ஏற்றுமதிச் சந்தையாக, ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகிறது.2013ம் ஆண்டில், 94 மில்லியன் டொலர் பெறுமதியான 7,400 தொன் மீன்களை ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இலங்கையில் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தால், அது பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.