அரச ஊடகங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக பரப்புரை செய்யக் கூடாது. என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரச ஊடகங்கள் பகிரங்கமாகவே ஜனாதிபதிக்கு பரப்புரை செய்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் முறைப்பாடு செய்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் சுயாதீனமான முறையில் தேர்தலை நடத்த தடையாக அமையும். அரசியல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்வதற்கு முன்னதாக என்னிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பாக இரண்டு அரசாங்க தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. அரச சொத்துக்கள் பாரியளவில் ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்காக அரசு பயன்படுத்தி வருவதாக உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அரச அதிகாரிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி வழக்குத் தொடர எதிர்க்கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர், என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் எனக் கோரி இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.