“எதிரணியில் அங்கம் வகிக்கின்ற தரப்புக்கள் மத்தியில் தற்போது பாரிய முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். எதிரணியினர் தமக்குள்ள கடும் முரண்பாடுகளைத் தோற்றுவித்துக்கொண்டுள்ளனர். அவர்கள் கூட்டு முரண்பாடுகளினால் நிறைந்துபோயுள்ளனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசில் அமைச்சர்கள் என்ற வகையில் எங்களுக்கு எவ்விதமான அழுத்தங்களும் இல்லை.
அமைச்சர்கள் அரசின் கொள்கைகளுக்கு அமைவாக செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படும்போது எவ்விதமான அழுத்தங்களும் வராது. அப்படி ஓர் அழுத்தமும் இதுவரை எவருக்கும் வந்ததில்லை. எமது கட்சி மிகவும் பலமாக உள்ள கட்சியாகும். இந்நிலையில், யாருக்கும் பயந்துகொண்டு நாங்கள் இருக்கவில்லை. யாருக்கு எதற்காக நாங்கள் பயப்படவேண்டும்? நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை” – என்று அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.