ஜனநயாக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராடி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் எனவும் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.சுயாட்சி அதிகாரங்களை வென்றெடுப்பதற்காக தமிழ் சமூகம் போராட வேண்டுமென தெரிவித்துள்ளார்.இதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவினை நாடு கடந்த தமிழீழ இராச்சியம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியினர் பலவீனமாக இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியீட்டினாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை எனவும், இதனை நினைவில் நிறுத்திக்கொண்டு தமிழ் அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நிலைப்பாடு எனவும், சர்வதேச விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.