மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும், கடும்போக்கு அமைப்புக்களுடன் தொடர்பு பேணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சில அரசியல் சக்திகள் தொடர்ந்தும் பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.சில தரப்பினர் நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயகக் கட்டமைப்பில் இருந்து கொண்டே பிரிவினைவாத கொள்கைகள் கோட்பாடுகளை சில தரப்பினர் முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பிரிவினைவாதத்தை கைவிட்டுள்ளதாகவும், புனர்வாழ்வு அளிக்கப்படாத போராளிகள் தொடர்ந்தும் பிரிவினையை போசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .அமெரிக்க பேராசிரியர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்கள் சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.