400 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் இராணுவத்தால் இடித்து தரைமட்டம் - TK Copy 400 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் இராணுவத்தால் இடித்து தரைமட்டம் - TK Copy

  • Latest News

    400 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் இராணுவத்தால் இடித்து தரைமட்டம்

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    400 வருடம் பழமை வாய்ந்த திருமலை
    வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல் இன்றுக் காலை இராணுவத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

    தற்பொழுது படையினரின் உயர்பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் இருந்து வரும் இப்பள்ளிவாசல் தகர்க்கப்பட்டமை நாசகாரச் செயல் என்றும் பள்ளி நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை பள்ளியை நாம் நோட்டமிட்ட போது இருந்த இடம் தெரியாமல் அது தரை மட்டமாக்கப்பட்டுள்ளது என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இது பற்றி பள்ளி நிர்வாகத்தின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது; கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து கொண்டிருந்தது.

    இந்த மழை பெய்த நேரத்தைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கனரக இயந்திரத்தை பயன்படுத்தி உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி இருந்த இடமே தெரியவில்லை.

    பள்ளியை பார்வையிடுவதற்காக அனுமதி கேட்டோம். நாங்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2007 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிவாசல் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு குடியிருந்த 350 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் வீடு வாசல்களை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

    400 வருடங்களுக்கு மேல் அங்கு குடியிருந்து மீன்பிடித் தொழிலை செய்து வந்த எம்மை 2009 ஆம் ஆண்டு முதல் செல்ல விடாது படையினர் தடுத்துள்ளமையால் 350 குடும்பங்கள் தமது மீன்பிடித் தொழிலையும் குடியிருப்புக்களையும் இழந்துள்ளன.

    கருமலையூற்று ஜும்மா பள்ளிவாசல் 1885 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு மீண்டும் அது 1985 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. அதுவுமின்றி தற்போதைய கிழக்கு மாகாண முதல் அமைச்சர் 2007 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த வேளையில் மீலாநபி நிதியத்திலிருந்து 5 லட்சத்து 80 ஆயிரத்தை ஒதுக்கியதன் பேரில் மீண்டும் அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

    2009 ஆம் ஆண்டு முதல் கருமலையூற்றுப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் மற்றும் ஏனைய இடங்கள் கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கின்றன. நேற்றைய தினம் கனரக இயந்திரமொன்றின் சத்தம் பள்ளிவாசலை அண்டிய பகுதியில் கேட்ட போது என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய மக்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் படையினர் அனுமதிக்கவில்லை.

    கடல் பிரதேசத்தை அண்டிய பகுதி ஆகையால் தோணியொன்றை எடுத்து கடல்வழியாக சென்று பார்த்த போது பள்ளிவாசல் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி தரைமட்டமாக்கப்படுவதைக் கண்டோம். இந்த நாசகார செயல் பற்றி கிழக்கின் முதல் அமைச்சருடனும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கினுடனும் தொடர்பு கொண்டு தெரிவித்தமைக்கு அமைய முதல் அமைச்சர் நஜீப் இராணுவத் தளபதியோடு தொடர்பு கொண்டு உரையாடினார்.

    இராணுவத் தளபதி அப்படியொரு பள்ளி இருக்கவில்லையென தெரிவித்ததாக தன்னிடம் கூறியதாக முதலமைச்சர் எம்மிடம் தெரிவித்தார் என பள்ளிவாசல் தலைவர் தெரிவித்தார். முதல் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிய போது இன்னும் நேரடியாகச் சென்று பார்வையிடவில்லை.

    பார்த்தபின் கருத்தைத் தெரிவிப்பேன். இருந்த போதிலும் 400 வருட பழமை வாய்ந்த பள்ளிவாசல் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழ்ந்திருக்கின்றன. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இராணுவத்தினர் கருமலையூற்றுப் பகுதியில் இப்பள்ளிக்கு அருகில் இராணுவ முகாமொன்றை அமைத்துள்ளனர்.

    நான் அமைச்சராக இருந்த காலத்தில் 2007 ஆம் ஆண்டு நிதியொதுக்கி மேற்படி பள்ளிவாசலை புனரமைத்துள்ளனர். பள்ளி நிர்வாகம் மிக கூடிய விரைவில் உயர் அதிகாரிகளுடனும் சம்பந்தப்பட்டவர்களுடனும் பேசி நல்ல தீர்மானமொன்று விரைவில் எடுக்கப்படுமென கிழக்கு மாகாண முதல் அமைச்சர் தெரிவித்தார்.

    இவ் விடயம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஃறூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான முகமட் மஃறூப் ஆகியோருடன் தொடர்பு கொண்டு வினவிய போது அவர்கள் நடைபெற்ற சம்பவத்தை உறுதிப்படுத்தினர்.





    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: 400 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் இராணுவத்தால் இடித்து தரைமட்டம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top