முல்லைத்தீவில் ஆணைக்குழுமுன் சாட்சிகளின் கண்ணீர் - TK Copy முல்லைத்தீவில் ஆணைக்குழுமுன் சாட்சிகளின் கண்ணீர் - TK Copy

  • Latest News

    முல்லைத்தீவில் ஆணைக்குழுமுன் சாட்சிகளின் கண்ணீர்


    எனது கணவர் இறந்து விட்டதாக இறப்புச்
    சான்றிதழ் பெறுமாறு வற்புறுத்துகின்றார்கள். அவர் உயிரோடை தான் இருக்கிறார் நான் சான்றிதழை எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என கணவனை காணாது தவிக்கும் ஒருவர் கண்ணீருடன் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

    அத்துடன் நான் காணாமல் போனவர்களை விடுவிக்க கோரி வடக்கில நடாத்துற எல்லா போராட்டத்திலும் கலந்து கொள்வேன். கடந்த முறை ஆர்ப்பாட்டத்திற்கு போய் வந்து பார்க்கும் போது வீட்டில் இருந்த எனது கணவர் காணாமல் போனது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் களவாடப்பட்டுள்ளது.

    மேலும் விசாரணைக்கு வருமாறு நேற்று தொலைபேசி மூலம் ரி.ஐ.டியினர் தெரிவித்திருந்தனர். இன்று கிளிநொச்சிக்கு வருமாறு அழைத்திருந்தனர் எனினும் சாட்சியப் பதிவை காரணம் காட்டி நின்றுவிட்டேன் நாளைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    எனது கணவர் புதுக்குடியிருப்பில இருந்தவர். நான் வவுனியாவில் எனது மாமாவோடு இருந்தேன். பின்னர் யுத்தம் முடிந்து வவுனியா முகாமிற்கு எனது கணவர் வந்தார். அங்கிருந்து வைத்தியசாலைக்கு வந்த என்கணவர் கோவிற்குளம் 5ஆம் ஒழுங்கைக்குள் இருக்கும் எங்களது வீட்டிற்கு வந்துவிட்டார். பிறகு அவர் போகவில்லை. 05.05.2009 ஆண்டு ஆமி வந்து பிடிச்சுக் கொண்டுபோய் வைச்சிருந்தார்கள்.

    நான் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்தேன். பின்னர் அவரை 07.05 .200907.05.2009 இல் வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தினார்கள். என்ன காரணத்திற்காக என்று எனக்கு தெரியாது. நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் மீண்டும் வழக்கு 19.05 .2009 என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எனினும் 12.05.2009 வைத்து வீட்டில் உள்ள நேரம் வெள்ளை வானில் வந்து விலங்கிட்டு கணவரை கொண்டு சென்றனர். 6பேர் வந்தவர்கள் என்னுடன் கதைக்கும் போது கொச்சை தமிழில் கதைத்தனர். அவ்வாறு வீட்டிற்கு வந்தவர்கள் பொலிஸ் நிலையம் வருமாறும் அங்கேயே கொண்டு செல்வதாகவும் கூறிச் சென்றனர். ஆனால் அங்கு எனது கணவரை கொண்டுவரவில்லை. அன்று என்னிடம் முறைப்பாடும் பெற்றுக் கொள்ளவில்லை.

    13.05.2009 அன்றே முறைப்பாட்டினை செய்திருந்தேன். சி.ஐ.டி , ரி.ஐ.டி இராணுவம் என எல்லோரும் வீட்டிற்கு வந்து விசாரிக்கிறார்கள். கணவனை பிடிச்சுக் கொண்டு போகும் போது என்னுடைய மூத்த மகன் அப்பாவை விடுங்கோ என்று கதறினான் ஆனால் அவர்கள் விடவில்லை. இதனால் இப்போது எனது மூத்த மகனுக்கு மனநோய். அதோட என்னுடைய கணவன் இறந்திட்டார் என்று இறப்பு சான்றிதழ் பெறவும் என்றும் அப்படி என்றால் தான் உதவிகள் கிடைக்கும் கூறிவருகின்றனர் எனக்கு உதவி இல்லாட்டியும் பரவாயில்லை.

    உயிரோட எங்கேயோ இருக்கின்ற என்கணவன் இறந்து விட்டார் என்று கூறி சான்றிதழ் பெற என்னால் முடியாது என்றார் அவர்.

    நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது;மனைவி ஒருவர் உருக்கமாக சாட்சியம்

    எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர் என்பது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்க முடியாது என இன்று பெண்ணொருவர் சாட்சியமளித்தார்.

    அவர் மேலும் சாட்சியமளிக்கையில், எனது கணவர் 18.03.2009 அன்று வலைஞர்மடம் கடலில் மீன்பிடிக்க சென்றபோது காலை 5.30 மணிக்கு கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் குறித்து இதுவரை தகவல் எவையும் கிடைக்கவில்லை. எனினும் பத்திரிகைகள் ஊடாக எனது கணவர் கைது செய்யப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதை அறிந்து கொண்டேன் .

    அவருடன் மேலும் இருவர் போனவர்கள் எனினும் அவர்களை கடற்படை விடுவித்துவிட்டனர். இவர்களே என்னிடம் கணவர் கைது செய்யப்பட்டதை தெரிவித்தனர். எனக்கு 3 பிள்ளைகள் அதில் மூத்த மகனுக்கு தகப்பனை நினைத்து மனநோய் ஏற்பட்டுவிட்டது. எனினும் இன்னும் தகப்பனின் முடிவு பிள்ளைகளுக்கு கூறாது விட்டால் பிள்ளைகள் எல்லோரும் மனநோய் ஆகிவிடுவார்கள் .அத்துடன் கையை கட்டிவைத்துவிட்டு உடுப்பொன்றும் இல்லாமல் தான் கூட்டிக்கொண்டு போனார்களாம்.

    புல்மேட்டையில் போய் கேட்டோம் அப்போது 45பேரை பிடித்து வைத்திருக்கின்றோம் ஆனால் விபரம் வெளியிடவில்லை என்று கடற்படை கூறியது. நேவி வைச்சிருக்கிறது எண்டு தான் நான் நினைக்கிறன். என்கணவர் உயிருடனேயே இருக்கிறார். யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர். இது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்கேலாது.

    எனக்கு கணவரும் , பிள்ளைகளுக்கு அப்பாவும் என்ற உரிமை ஒரு தடவைதான் கிடைக்கும். எனவே இப்படி இருப்பதைவிட யாரும் கொண்டு போய் போட்டாலும் இனிமேல் எமக்கு பிரச்சினை இல்லை என ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

    இராணுவ வாகனத்தில் பெண்களை ஏற்றிச் சென்றதைக் கண்டேன் மகளைத் தொலைத்த தாய் சாட்சியம் 

    எனது மகளான ஜஸ்லின் எவஸ்ராவை இராணுவத்தினர் தமது பேருந்தில் கொண்டு செல்லும் போது அதில் இருபதிற்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருப்பதைக் கண்ணால் கண்டேன் எனத் தாய் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.

    காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

    இராணுத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின் தனது மகள் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதாவும் அப்போது எங்கு கொண்டு செல்கின்றீர்கள் என்று கேட்டபோது அதற்கு இராணுவத்தினர் எந்தப்பதிலும் அளிக்கவில்லை. எனது மகளைக் கொண்டு சென்ற பேருந்தில் ஏற்கெனவே 20 இற்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் இருப்பதையும் கண்டதாகவும் தனது மகள் 2009.01.09-ம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுக்கள் சென்றதாகவும் அந்த தாய் சாட்சியமளித்தார்.

    மனிதநேயம் இராணுவத்திடம் இருந்தால் எனது கணவரை மீள ஒப்படைக்க வேண்டும் ஆணைக்குழு முன் குடும்பப்பெண் சவால்

    எனது கணவர் காணாமல் போகவில்லை நான்தான் இராணுவத்தினரிடம் ஒப்படைத் தேன். மனித நேயமுள்ள அரசாங்கமாகயிருந்தால் மனித நேயமுள்ளவர்களாக இராணுவத்தினர் இருந்தால் பொறுப்புடன் பெற்றுக்கொண்ட எனது கணவரை உயிருடன் திருப்பி தரவேண்டும். இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று சாட்சியமளித்தார்.

    கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 - மே - 18 ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வடக்குக் கிழக்கில் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் விசாரணைகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

    இந்த விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்திருந்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். விசாரணையின் ஆரம்பத்தில் ஆணைக்குழுவினரால் யார் காணாமற்போயுள்ளார் என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதன்போது குறுக்கிட்ட குறித்த பெண் எனது கணவர் காணாமல் போகவில்லை அவரை இராணுவத்தினரிடம் நானே ஒப்படைத்தேன் என்றார்.

    தொடர்ந்து சாட்சியமளித்த குறித்த பெண் எனது கணவரான வசந்தனை கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணு வத்தினரிடம் ஒப்படைத்திருந்தேன். அப்போது மதியம் 1.30 மணியிருக்கும் எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் போது அவருக்கு 35 வயது என்றார் ஜெயீனா என்ற இளம் குடும்பபெண்.

    ஏன் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தீர்கள் என்று ஆணைக்குழுவினர் மறுபடியும்; கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அந்தப் பெண், போராளிகள் தாமாக முன் வந்து சரணடையுமாறு இராணுவத்தினர் பகிரங்கமாக ஒலி பெருக்கிகளில் அறிவித்துக் கொண்டு இருந்தனர். இதன் காரணமாக எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன் என்றார். இதன்போது உங்கள் கணவர் போராளியா என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்ப ஆம் என்று பதிலளித்தார் அந்தப் பெண்.

    அதேவேளை 5 வருடங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தார். பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்து வந்து எம்முடம் சேர்ந்து விட்டார் என்றும் இராணுவத்திடம் சரணடையும் போது விடுதலைப்புலிகளுடன் அவருக்கு எந்தவிதத் தொடர்வும் இல்லை என்றார். இதன்போது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் விடுதலைப்புலிகள் குடும்பங்களுடன் இணைந்து இராணுவத்தினரிடம் சரணடைந்தனரா? என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.

    ஆம், என் கணவர் மட்டும் அல்லாது பலர் அவ்வாறு குடும்பங்களுடன் இறுதிக் கட்டத்தில் இணைந்து விட்டனர் என்றார் அந்தப் பெண். மேலும் தனது சாட்சியத்தை தொடர்ந்த அந்தப்பெண் இராணுவத்தினரிடம் கையளித்த (ஒப்படைத்த) எனது கணவரை பொறுப்புள்ள, மனிதாபிமான அரசாங்கம் என்றால், மனிதாபிமானமுள்ள இராணுவத்தினர் என்றால் உயிருடன் நான் கையளித்த எனது கணவரை உயிருடன் என்னிடம் மீண்டும் தர வேண்டும். 

    எனது கணவரை இராணுவத்தினரிடம் நான் ஒப்படைத்தபோது எங்களையும் அவருடன் கூட்டிச் செல்லுமாறு நான் கேட்டேன். ஆனால் இராணுவத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். விசாரணையின் பின்னர் விட்டுவிடுவதாகவும் கூறிச் சென்றனர். எனது கணவரை இராணுவத்தினர் தனது பேருந்தில் கொண்டு செல்லும் போது அந்தப் பேருந்துக்குள் பலர் இருப்பதை என் கண்களால் கண்டேன். இவ்வாறு அந்தப் பெண் கூறிய போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர்

    யாரிடம் உங்கள் கணவரை ஒப்படைத்தீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா என்று கேள்வி எழுப்பினர். 

    அதற்கு பதிலளித்த அவர், இராணுவச் சீருடையில் நின்றவர்களிடம் தான் எனது கணவரைநான் ஒப்படைத்தேன். ஆனால் யார் என்று என்னால் அடையாளம் காட்ட முடியாது. அதேவேளை பெயர் மற்றும் அவர்களின் பதவி நிலைகளை அறியக் கூடிய நிலையில் இராணுவத்தினர் இல்லை என்றார்.

    இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இராணுவத்தினர் உள்ளனரா? உங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? 

    எனக்கு அம்மா, அப்பாதான் பாதுகாப்பு இராணுவத்தினரின் பாது காப்பை நான் எதிர்பார்க்கவில்லை என்று சட்டென்று பதிலளித்தார். 

    எமக்கு எது­வுமே வேண்டாம்; பிள்­ளை­களை மட்டும் எம்­மிடம் ஒப்­ப­டைத்தால் போதும் 

    புது­மாத்­தளன் பகு­தியில் யுத்தம் இடம்­பெற்றுக்கொண்­டி­ருந்­த­ போது ஷெல் தாக்­கு­ தலில் தனது 5 பிள்­ளைகள் கொல்­லப்­பட்­டுள்ள­தா­கவும், அதே தாக்கு­தலில் படு­கா­ய­ம­டைந்த கண­வரை மாத்­தளன் பாட­சா­லையில் இயங்கிய வைத்­தி­ய­சா­லையில் தவறவிட்­டதா­கவும் முல்­லைத்­தீவில் பெண்­ணொ­ரு­வர் நேற்று ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­மளித்தார்.

    இதே­வேளை எங்க­ளுக்கு எது­வுமே வேண்டாம். எங்­க­ளு­டைய பிள்­ளை­களை மட்டும் திரும்ப எங்­க­ளிடம் ஒப்­ப­டை­யுங்கள் என ஆணைக்­கு­ழு­விடம் உருக்­க­மாக மன்­றா­டிய தாயார் ஒருவர் தாம் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பின்னர் சுமார் 4 தினங்­க­ளாக சீரான குடிநீர் கிடைக்­காத நிலையில் உண­வுகள் எது­வு­மின்றி பசி­யுடன் வாடி­ய­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.

    இந்த விசா­ர­ணையில் புது­மாத்­தளன் பகு­தி­யைச்­சேர்ந்த பாபு காளி­யம்மா என்ற பெண் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், நாம் கடந்த 2009 ஆம் ஆண்டு நாலாம் மாதம் புது­மாத்­தளன் பகு­தியில் வசித்­த­பொ­ழுது ஷெல் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி பாதிக்­கப்­பட்டோம். இந்த ஷெல் தாக்­கு­தலில் நான் எனது 5 பிள்­ளை­களைப் பறி­கொ­டுத்­துள்ளேன்.

    இதே ஷெல் தாக்­கு­தலில் கண­வரும் படு­கா­ய­ம­டைந்தார். படு­கா­ய­ம­டைந்­த­வரை நாம் மாத்­தளன் பாட­சா­லையில் இயங்­கிய வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு சென்றோம். நாங்கள் செல்­கின்­ற­போது அந்த வைத்­தி­ய­சா­லையில் பிணக்­கு­வி­யல்­களும் இரத்­த­மு­மாக காணப்­பட்­டது. இந்த நிலையில் நாம் படு­கா­ய­ம­டைந்த கண­வரை அங்கு ஷெல் தாக்­கு­தலின் அகோ­ரத்­தினால் கைவி­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

    எனக்கு எட்டுப் பிள்­ளைகள் பிறந்­தார்கள். நான் ஐவரை ஒரே ஷெல்லில் பறி­கொ­டுத்­துள்ளேன். எனவே எனது கண­வரை என்­னிடம் மீண்டும் ஒப்­ப­டை­யுங்கள் என ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் மன்­றாட்­ட­மாக தனது கோரிக்கை முன்­வைத்தார்.

    நேற்றை அமர்வில் வற்­றாப்­ப­ளையைச் சேர்ந்த வேலா­யுதம் இரத்­தி­னம்மா என்ற பெண் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

    நான் எனது மக­ளான ஜெய்­பி­ரியா என்­ப­வரை கடந்த 3.5.2009அன்று முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் தவ­ற­விட்­டுள்ளேன். இதேபோல் எனது மக­னையும் ஷெல் தாக்­கு­தலில் பறி­கொ­டுத்­துள்ளேன். எனக்கு எனது பிள்­ளை­களைத் தவிர எது­வுமே பெரி­தாகத் தெரி­ய­வில்லை. என்­னு­டைய பிள்­ளையை என்­னிடம் மீண்டும் ஒப்­ப­டை­யுங்கள் என்றார்.

    இதே­வேளை அம்­ப­ல­வன்­பொக்­க­னையைச் சேர்ந்த திரு­மதி யோக­ராஜா சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

    கடந்த 8.4.2009 அன்று அம்­ப­ல­வன்­பொக்­கனைப் பகு­தியில் பிரி­யந்தன் என்ற எனது மகனை யுத்­தத்­தினால் தொலைத்­து­விட்டேன். அதன்­பின்னர் நாம் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்தோம். இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த அன்­றி­லி­ருந்து சுமார் நான்கு நாட்­க­ளாக எமக்கு உண­வுகள் கிடைக்­க­வில்லை. குடி­நீரும் கிடைக்­க­வில்லை. இதனால் நாம் மிகவும் பாதிப்­ப­டைந்­தி­ருந்தோம்.

    எனக்கு எந்­த­வொரு உத­வியும் வேண்டாம். எனது பிள்­ளையைக் கண்டு பிடித்துக் கொடுங்கள் என்றார்.

     மனைவியை ஏற்றிச்சென்ற இராணுவம் என்னை தடியால் அடித்து துரத்தியது.... எனது மனைவி எங்கே? 

    இறுதி யுத்­தத்தில் பாதிப்­ப­டைந்த செல்லன் கந்­த­சாமி என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது மனை­வி­யான விக்­னேஸ்­வரி முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் கடந்த 2009.5.14 அன்று குண்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்தார். அவரைக் காப்­பாற்றும் நோக்­குடன் நாங்கள் 2009.5.17 அன்று அவ­ரையும் தூக்கிக் கொண்டு வட்­டு­வாகல் பகு­தியை நோக்கி நடந்து சென்றோம். அப்­பொ­ழுது அங்கே இரா­ணு­வத்­தினர் எம்மை இடை மறித்­தனர்.

    எனது மனை­வியை தாங்கள் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தா­கவும் எம்மை பிரி­தொரு வாக­னத்தில் ஏறிச் செல்­லு­மாறும் இரா­ணுவம் எனக்குத் தெரி­வித்­தது. ஆனால் நான் எனது மனை­வி­யுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் செல்­வ­தற்கு முயற்­சித்தேன். அப்­பொ­ழுது இரா­ணு­வத்­தினர் எனக்கு தடியால் அடித்துத் துரத்­தினர்.

    அன்­றி­லி­ருந்து எனது மனை­வியைக் காண­வில்லை. இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்ள நான் தற்­பொ­ழுது மிகவும் பாதிப்­ப­டைந்­துள்ளேன். எனவே எனது மனை­வியை மீட்­டுத்­தா­ருங்கள் என்றார்.

    இதேபோல் கொக்­குத்­தொ­டு­வாயைச் சேர்ந்த தாயார் ஒருவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

    மகிந்தன் என்ற தனது மகன் விடு­தலைப் புலி­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றி­ய­தா­கவும் அவர்­களின் கட்­ட­ளைக்­க­மைய மண­லாறு பகு­தியில் வேவு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தனது மகன் சென்­ற­தா­கவும் அவரை அன்­றி­லி­ருந்து காண­வில்லை எனவும் தெரி­வித்தார். தன்­னு­டைய மகன் உயி­ருடன் இருந்தால் அவரை மீட்டுத் தரு­மாறும் ஆணைக்­கு­ழு­விடம் கோரினார்.

    இதே­வேளை நேற்றுச் சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­களில் பலர் தங்­க­ளு­டைய குழந்­தை­களை விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தியில் வைத்து தொலைத்து விட்­ட­தாகத் தெரி­வித்­தனர். இவர்­களில் சிலர் விடு­தலைப் புலிகள் வீட்­டுக்­கொ­ரு­வரைப் போராட வேண்டும் என அழைத்­த­பொ­ழுது தாம் தமது பிள்­ளை­களை ஒப்­ப­டைத்­தா­கவும் தெரி­வித்­தனர்.

    இவ்­வாறு உற­வுகள் தெரி­வித்த பொழுது ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரிகள் விடு­தலைப் புலிகள் படைக்கு ஆட்­களைச் சேர்த்­த­பொ­ழுது பணம் ஏதா­வது வழங்­கி­னார்­களா என்ற வினா­வையும் எழுப்­பி­யி­ருந்­தனர்.

    இவேளை தாயார் ஒருவர் தனது மகனை மீட்டுத் தரு­மாறு சாட்­சி­ய­ம­ளிக்­கையில், கடந்த 2009.03.15 ஆம் திகதி வலை­ஞர்­ம­டத்தில் இருந்த போது கடைக்கு போவ­தாக கூறி வீட்டை விட்டுச் சென்­றவர் பிறகு என்ன நடந்­தது என்று எனக்கு தெரி­யாது ஆனால் வீட்­டுக்கு திரும்பி வர­வில்லை. இறு­திக்­கட்டம் வரை மகன் வருவான் வருவான் என்று பார்த்து கொண்டு இருந்தேன்.

    நாங்கள் இருந்த பகுதியில் நாலாபக்கத்தில் இருந்தும் ஷெல் விழுந்து கொண்டே இருந்து.மகனை பார்த்தும் மகன் வரவில்லை. கடைசியாக தான் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்றேன். அப்போது எனக்கும் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது. இன்னும் எனது மகன் குறித்து எதுவும் தெரியாது.

    நான் தனிய இருப்பதால் அரசாங்க உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. எந்த வாழ்வாதாரத்திட்டம் என்றாலும் தனியாட்களுக்கு இல்லை என்று கூறுகிறார்கள். நான் இப்போது கூலி வேலை செய்து தான் வாழ்க்கை நடாத்துகின்றேன். வேறு யாரும் எனக்கு உதவி இல்லை. எனவே எனது மகனை மீட்டுத் தாருங்கள் என்றார்.

    தன்னுடைய மகனை தொலைத்த தாயார் ஒருவர் சாட்சியமளிக்கையில்,

    எனது மகனை நாங்கள் ஜோசவ் முகாமில் தேடினோம். அவர் அங்கு இல்லை. அதனையடுத்து வேறு இடங்களிலும் தேடினோம். ஆனால் எனது மகன் எங்கும் இல்லை என சாட்சியமளிக்கும் போது, குறுக்கிட்ட ஆணைக்குழுவின் விசாரணையாளர் ஒருவர்,

    நீங்கள் ஜோசப் முகாம் என்று எதனை கூறுகிறீர்கள்? இந்த முகாமை மதகுரு ஒருவரா நடத்தி வருகின்றார் எனக் கேள்வியினை எழுப்பியிருந்தார்.

    இந்தக் கேள்வியால் அங்கிருந்த அனைவருக்கும் அதிருப்தியடைந்தனர். 

    இதேபோல் கடந்த 2009ஆம் ஆண்டு வன்னியில் காணாமற்போன காந்தரூபன் என்ற நபர் தொடர்பாக அவருடைய தாயாரான நவரட்ணம் தங்கம்மா சாட்சியமளிக்கையில், 

     எனது மகனை விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தனர் எனவும் அதன் பின்னர் எனது மகனையும் அழைத்துக் கொண்டு நாங்கள் அளம்பில் காட்டுப் பகுதியின் ஊடாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உட்பிரவேசித்த போது மகனைத் தொலைத்து விட்டோம் என சாட்சியமளித்தார்.

    புலிகளாலும், மரநாய் பூனைகளாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளதா?

    ஆணைக்குழுவின் விசாரணையாளர் ஒருவர் போருக்குப் பின்னர் உங்களுடைய வாழ்வாதாரம் எவ்வாறு உள்ளது என வினாவினார். அதற்கு அந்தத் தாயார் தங்களுக்கு கணிசமான கோழிகள் வழங்கப்பட்டதாகவும் அக்கோழிகளில் சிலவற்றை மரநாய், பூனைகள் பிடித்துச் சென்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

    இதற்குப் பதிலளித்த குறித்த விசாரணையாளர் உங்களுக்கு விடுதலைப் புலிகளாலும், மரநாய் பூனைகளாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளதா? என வினாவினார். இதனாலும் அங்கிருந்தவர்கள் அதிருப்தி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

    ஐந்து பிள்ளைகள் மற்றும் கணவனும் எறிகணையில் இழந்துவிட்டேன் கண்ணீர்மல்க சாட்சியம்

    மாத்தளன் வைத்தியசாலையில் இருந்த எனது கணவரை பார்க்க சென்ற போது இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் மாத்தளன் வைத்தியசாலை சேதமடைந்து இருந்ததுடன் இரத்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கிடந்தனர். அதற்குள் எனது கணவரைக் காணவில்லை என பெண்ணொருவர் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று சாட்சியமளித்தார். 

    காணாமற் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணை இன்று முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதில் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் எனது கணவர் காயமடைந்து மாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    முதல் நாள் அவரைப் பார்த்துவிட்டு வந்தோம் மறுநாள் பார்க்கப் போகும்போது வைத்தியசாலை எறிகணை தாக்குதலால் முற்றாக சேதமடைந்து இருந்தது. எங்கு பார்த்தாலும் இரத்த வெள்ளத்தில் இறந்தவர்களின் ஆயிரக் கணக்கான சடலங்கள் கிடந்தன. எல்லா இடமும் தேடிப்பார்த்தேன் எனது கணவரைக் காணவில்லை . அதற்குப் பிறகு இன்று வரை எனது கணவர் குறித்து எதுவும் எனக்கு தெரியாது.

    அதில் எனது 5 பிள்ளைகள் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் இறந்துவிட்டனர். மற்றைய இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்து போய் விட்டனர். நானும் கடைசி பிள்ளையும் தான் இப்போது இருக்கின்றோம். வருமானம் எதுகும் இல்லை. நான் கூலி வேலைக்கும் வீடுகளுக்கு சென்று தூள் , மா இடித்துக் கொடுத்தும் அதில் வாற பணத்தை தான் கொண்டு தான் சீவிக்கின்றோம் என்றும் அவர் மேலும் சாட்சியமளித்தார்.

    காலை முதல் சாட்சியப்பதிவுகள் இடம்பெற்று வந்த நிலையில் அங்கு வருகை தந்துள்ள புலனாய்வாளர்கள் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் சாட்சியமளிக்க வந்தவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அத்துடன் மேலும் பலரை சாட்சியம் வழங்க செல்லக் கூடாது எனவும் அச்சுறுத்தியதாக வந்தவர்களில் சிலர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, இதுவரை, காணாமற்போனோர் குறித்த 19 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: முல்லைத்தீவில் ஆணைக்குழுமுன் சாட்சிகளின் கண்ணீர் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top