ஊழல்களிற்கு எதிரான இலங்கை அமைப்பு
(டிரான்ஸ் பேரன்சி இன்ரர்நசனல் - இலங்கை) ஏற்பாடு செய்திருந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி பட்டறை மீண்டும் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனாவினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றினை அடுத்தே இப்பயிற்சி பட்டறை மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.முன்னதாக தம்புள்ள பகுதியில் வட - கிழக்கு ஊடகவியலாளர்களிற்கு ஊழல்களிற்கு எதிரான இலங்கை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்பயிற்சிப்பட்டறை பாதுகாப்பு அமைச்சினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது பற்றிய புலனாய்வு அறிக்கையிடல் எனும் தலைப்பில் இப்பயிற்சி பட்டறை ஏற்பாடாகியிருந்தது. பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய உத்தரவையடுத்து மின்னேரியா படைத்தள கட்டளை தளபதி நேரில் சென்று விடுத்த அச்சுறுத்தலை அடுத்து அப்போது இப்பயிற்சி பட்டறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு வார கால அவகாசத்தில் நேற்று முதல் நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றில் இப்பயிற்சி பட்டறை ஆரம்பமாகியிருந்தது. இந்நிலையில் பொதுபல சேனாவினர் இப்பயிற்சிப் பட்டறையினை இடைநிறுத்தக்கோரி குறித்த விடுதி முன்னதாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து விடுதி நிர்வாகம் பயிற்சி பட்டறையினை இடைநிறுத்தவும் பங்கெடுப்பாளர்களை அங்கிருந்து வெளியேறவும் நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஆர்ப்பாட்டகாரர்கள் தமது பிரதான கோரிக்கையாக பயிற்சிப் பட்டறையினை இடைநிறுத்தவும் ஊடகவியலாளர்களை வெளியேற்றவும் கோரி வருகின்றனர். எனினும் இதே பயிற்சி பட்டறைகள் சிங்கள பகுதிகளில் சிங்கள ஊடகவியலாளர்களிற்கு நடத்தப்பட்ட போது எந்தவித எதிர்ப்பும் இருந்திருக்கவில்லை.
இப்பயிற்சி பட்டறையில் இலங்கையின் முன்னணி தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் வளவாளர்களாக பங்கெடுத் திருக்கின்றதுடன் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி,கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் பங்பு பற்றுநர்களாக பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.