இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச
நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சரும், முன்னாள் இலங்கை சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கும் நிகரான வேறும் சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியமளிக்குமாறு கோரினால் எந்தவொரு சர்வதேச நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009 மே 17ம் திகதி சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைய விரும்புவதாக தொலைபேசி மூலம் அறிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
புலித்தேவன், நடேசன் போன்றவர்கள் இவ்வாறு அழைப்பு ஏற்படுத்தியிருந்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கால தாமதமாகி விட்டதாகவும் சரணடைவது குறித்து ஆலோசனை வழங்க முடியாது எனவும் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுக்கு பதிலளித்ததாகத் தெரிவித்துள்ளார். பாரியளவு விலை கொடுத்தே யுத்தம் வெற்றிக்கொள்ளப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு கண்டிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் சமாதான தூதுவராக கடமையாற்றிய காலம் தொடர்பில் நூல் ஒன்றையும் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.