பந்துக்கு பந்து நெஞ்சம் படபடத்த பரபரப்பான ஐ.பி.எல்., பைனலில் அசத்திய
கோல்கட்டா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. கடைசி ஓவரில் பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா, சாம்பியன் கனவை நனவாக்கினார். போராடிய பஞ்சாப் அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது. சகாவின் சதம் வீணானது.பெங்களூருவில் நேற்று இரவு நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் சந்தீப் சர்மா நீக்கப்பட்டு, பாலாஜி இடம் பெற்றார். கோல்கட்டா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், துணிச்சலாக ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
சேவக் ஏமாற்றம்:
பஞ்சாப் அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் புலியாக உறுமிய சேவக், இம்முறை பூனையாக பம்மினார். இவர், உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ வெறும் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். அடுத்து ‘பேட்டிங்’ வரிசையில் தேவையில்லாமல் மாற்றம் செய்யப்பட்டது. மேக்ஸ்வெல்லுக்கு பதில் முன்னதாக வந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி(1), ‘சுழல் மாயாவி’ சுனில் நரைனின் முதல் பந்தில் போல்டானர்.
பின் சகா, மனன் வோரா சேர்ந்து அசத்தினர். யார் பந்துவீசினாலும் விளாசித் தள்ளிய இவர்கள், மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தனர். நரைன் கைநழுவ கண்டம் தப்பிய சகா, தனது அதிரடியை தொடர்ந்தார். உமேஷ் யாதவ் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். சாவ்லா வலையில் வோரா(67) சிக்கினார். ‘அபாய’ மேக்ஸ்வெல்(0) ஏமாற்றினார். நரைன் ஓவரில் சிக்சர் அடித்த சகா, சதம் கடந்து அசத்தினார். முதல் 10 ஓவரில் 58 ரன்கள் தான் எடுக்கப்பட்டன. அடுத்த 10 ஓவரில் 141 ரன்கள் கிடைத்தன. பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. சகா 115 ரன்களுடன்(55 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.ஆட்ட நாயகன் விருதை மணிஷ் பாண்டே வென்றார்.
பாண்டே நம்பிக்கை:
கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. ஜான்சன் வீசிய முதல் ஓவரில் உத்தப்பா(5) அவுட்டானார். கேப்டன் காம்பிர்(23) அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்து வந்த யூசுப் பதான், கரண்வீர் சிங் ஓவரில் வரிசையாக 2 சிக்சர்கள் விளாசி நம்பிக்கை தந்தார். மறுபக்கம் அபார ஆட்டத்தை தொடர்ந்த மணிஷ் பாண்டே, அவானா ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி விளாசினார். இந்த நேரத்தில் கரண்வீர் சிங் பந்தில் யூசுப்(36) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. சாகிப்(12), டஸ்காட்டே(4) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய மணிஷ் பாண்டே, 94 ரன்களுக்கு வெளியேற, பதட்டம் அதிகரித்தது. சூர்ய குமார் யாதவ்(5) அணியை கைவிட்டார்.
சபாஷ் சாவ்லா:
ஜான்சன் வீசிய போட்டியின் 19வது ஓவரில் பியுஸ் சாவ்லா ஒரு இமாலய சிக்சர் அடிக்க, மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. அவானா பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. இரண்டாவது பந்தில் நரைன் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் பியுஸ் சாவ்லா ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடித்து, கோப்பையை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாவ்லா(13), நரைன்(2) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரூ. 15 கோடி பரிசு
நேற்றைய ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற கோல்கட்டா அணிக்கு, கோப்பையுடன் ரூ. 15 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப் அணிக்கு ரூ. 10 கோடி பரிசு கொடுக்கப்பட்டது. ‘பிளே–ஆப்’ சுற்று வரை முன்னேறி, பைனல் வாய்ப்பை இழந்த சென்னை, மும்பை அணிகளுக்கு தலா ரூ. 7.5 கோடி வழங்கப்பட்டது.
அழுதார் பிரித்தி
நேற்றைய பைனலில் நடிகர் ஷாருக்கானின் கோல்கட்டா, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணிகள் மோதியதால், பாலிவுட் ‘டென்ஷனை’ காண முடிந்தது. இருவரும் மைதானத்துக்கு வந்து போட்டியை ரசித்தனர். கோல்கட்டா வென்றதும் ஷாருக் சிரித்து மகிழ்ந்தார். கோப்பை நழுவிய சோகத்தில் பிரித்தியின் கண்கள் குளமாகின.
9வது வெற்றி
லீக் சுற்றில் துவக்கத்தில் சொதப்பிய கோல்கட்டா அணி, முதல் 7 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. அதன்பின் தொடர்ச்சியாக 7 லீக் போட்டியில் வெற்றி பெற்றது. பின், ‘பிளே–ஆப்’ முதலாவது தகுதிச் சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்தி, தொடர்ந்து 8வது வெற்றியை பெற்றது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை பஞ்சாப்புடன் (2013–14, 8 வெற்றி) பகிர்ந்து கொண்டது.
நேற்றைய பைனலில் மீண்டும் பஞ்சாப் அணியை வீழ்த்திய கோல்கட்டா அணி, வரிசையாக 9வது வெற்றியை பதிவு செய்து, தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனை படைத்தது. பெங்களூரு (2011), சென்னை (2013) அணிகள் தொடர்ச்சியாக 7 வெற்றி பெற்றன.
சிறந்த ‘சேஸ்’
பஞ்சாப் அணி நிர்ணயித்த 200 ரன்களை எட்டிய கோல்கட்டா அணி, ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சிறந்த ‘சேஸிங்கை’ பதிவு செய்து, தனது சொந்த சாதனையை முறியடித்தது. முன்னதாக 2012ல் நடந்த பைனலில், சென்னை அணி நிர்ணயித்த 191 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி 192 ரன்கள் எடுத்து சிறந்த ‘சேஸிங்’ செய்தது.
இதெல்லாம் அதிசயம்
மேற்கு வங்கத்தை சேர்ந்த சகா முதலாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக தான் விளையாடினார். நேற்று, தன்னை புறக்கணித்த அதே கோல்கட்டா அணிக்கு எதிராக சதம் அடித்த இவர், பஞ்சாப் அணிக்கு கைகொடுத்தார்.
* பஞ்சாப் அணிக்கு கடந்த போட்டிகளில் கைகொடுத்த வெளிநாட்டு வீரர்களான மேக்ஸ்வெல்(0), மில்லர்(1) இம்முறை ஏமாற்றிய நிலையில், இந்திய வீரர்களான வோரா(67), சகா(115) அசத்தினர்.
* சகா சதம் அடித்ததும், எதிரணியான கோல்கட்டாவின் உரிமையாளரான ஷாருக் கான் எழுந்து நின்று கைதட்டி தனது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.
* கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பாவுக்கு பெங்களூரு சின்னசாமி மைதானம் பழக்கப்பட்டது. இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர் என்பதால் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ரன்களில் வெளியேறினார்.
முதல் வீரர்
நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சகா சதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., பைனலில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2011ல் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான பைனலில், சென்னை அணியின் முரளி விஜய் 95 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.
* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட 3வது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*, எதிர்–பஞ்சாப்), பஞ்சாப் அணியின் சேவக் (122, எதிர்–சென்னை) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.
* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 31வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.
* ஐ.பி.எல்., வரலாற்றில் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் சகா. முன்னதாக டெக்கான் (109*), பஞ்சாப் (106) அணிகளுக்காக விளையாடிய கில்கிறிஸ்ட் இச்சாதனை படைத்தார்.
இரண்டாவது அதிகபட்சம்
நேற்று 199 ரன்கள் எடுத்த பஞ்சாப், ஐ.பி.எல்., பைனலில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. சென்னையில் 2011ல் நடந்த பெங்களூருவுக்கு எதிரான பைனலில், சென்னை அணி அதிகபட்சமாக 205 ரன்கள் குவித்தது.