தீர்க்கவே முடியாத இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை போலவே ஆகிவிட்டது, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பிரச்னைகள். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பற்றியும். அதில் அடுத்து அறங்கேறப்போகும் காட்சிகள் பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
தென்னிந்திய சங்கங்கள்
சினிமா தொடங்கிய காலகட்டத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சென்னை தலைநகரமாக இருந்தது. சென்னை ராஜதானி என்று அதற்கு பெயர். அந்தக் காலத்தில் தென்னிந்திய சினிமாக்கள் அனைத்தும் சென்னையில்தான் தயாரானது. முன்னணி நடிகர், நடிகைகள் எல்லோரும் சென்னையில்தான் இருந்தார்கள். சினிமாவில் சங்கங்கள் தொடங்கப்பட்டபோது தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றாக இருந்ததால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம் என எல்லா சங்கத்தின் முன்பும் தென்னிந்திய ஒட்டிக் கொண்டிருந்தது.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த பிறகும் இது நீடித்தது. சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அந்தந்தத மாநிலங்களில் ஸ்டூடியோக்கள் உள்ளிட்ட வசதிகள் வந்ததும். அந்தந்த மாநில சினிமாக்கள் தங்கள் மாநிலத்திற்கு சென்று விட்டன. ஆனாலும் இங்குள்ள சங்கங்கள் இன்றும் தென்னிந்திய அடைமொழியோடுதான் செயல்பட்டு வருகிறது.
தனிதனி சங்கங்கள்
பிரிந்து சென்றவர்கள் தங்கள் மாநிலங்களில் தங்களுக்கென்று தனி சங்கங்கள் தொடங்கிக் கொண்டார்கள். கன்னட தயாரிப்பாளர் சங்கம், மலையாள தயாரிப்பாளர் சங்கம், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் உருவானது. அந்த வரிசையில் 1979ம் ஆண்டு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உருவானது. முக்தா சீனிவாசன், வலம்புரி சோமநாதன், ஏவிஎம் முருகன் ஆகியோர் இணைந்து இந்த சங்கத்தை தொடங்கினார்கள். சங்கம் தொடங்கப்பட்டபோது அதில் சுமார் 40 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தார்கள். தற்போது 830 பேர் ஓட்டுப்போடும் உரிமை உள்ள உறுப்பினர்களாக உள்ளனர்.
கை ஓங்கியது
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிகாரமே மேலோங்கி நின்றது. பட விநியோகம், தியேட்டர்கள், தயாரிப்பாளர்களின் வருமானம் எல்லாமே விநியோகஸ்தர்கள் கையில் இருந்தது. ஒரு கட்டத்தில் விநியோகஸ்தர்கள் சங்கம் பலம் இழந்ததும் தயாரிப்பாளர் சங்கத்தின் கை ஓங்கியது.
தியேட்டர் பிரச்னையில் இருந்து நடிகர் நடிகைகள் சம்பள பிரச்னை வரை தயாரிப்பாளர் சங்கம் கையாள துவங்கியதால் அதன் அதிகாரம் அதிகமானது. தொலைக்காட்சிகள் புதிய திரைப்பட பாடல்களையும், காட்சிகளையும் இலவசமாக ஒளிபரப்பி வந்தது. கே.ஆர்.ஜி, மற்றும் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் தலைவர்களாக இருந்த காலத்தில் இதனை ஒழுங்குபடுத்தி தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து சங்கத்திற்கு பணம் வருகிற மாதிரி செய்தார்கள். இதனால் சங்கத்தில் கணிசமான நிதி சேர்ந்தது. அதோடு இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர லட்சகணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர கேபிள் டி.விக்களிடம் இருந்தும் தனி வருமானம் வருகிறது.
நுழைந்தது அரசியல்
இப்படி பணமும், அதிகாரபலமும் அதிகரித்து விட்டதால் சங்கத்தின் பொறுப்புக்கு வருவதற்கு போட்டிகள் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தயாரிப்பாளர் சங்கத்திற்குள் அரசியல் வராமல் இருந்தது. ராம.நாராயணன் தலைவர் ஆனதும் சங்கத்திற்குள் அரசியல் நுழைந்தது. அவர் தி.மு.க ஆதரவுடன் செயல்பட்டதால். அவருக்கு எதிரானவர்கள் அ.தி.மு.க ஆதரவாளர்களாக பார்க்கப்பட்டார்கள். இது அடுத்தடுத்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எதிரொலித்தது.
ராமநாராயணனுக்கு பிறகு வந்த எஸ்.ஏ.சந்திரசேகரும், கோயாரும் அ.தி.மு.க ஆதரவாளர்களாக பார்க்கப்பட்டார்கள். அதிலும் கேயார் போட்டியிடும்போது நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கொடுத்த விளம்பரத்தில் அம்மா ஆசிபெற்ற வேட்பாளர் கேயார் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
பொதுக்குழு
கேயார் வெற்றிபெற்ற தேர்தலில் தோற்ற கலைப்புலி எஸ்.தாணுவால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாக கோர்ட், வழக்கு, தடை என்று கேயாருக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்தார். அவரை செயல்பட விடாமல் முடக்கினார். பொதுக்குழுவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது வரை கொண்டு வந்தார். இதற்கிடையில் கேயார் அணியில் இருந்த துணை தலைவர் சத்யஜோதி தியாகராஜன், செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாணு அணிக்கு தாவினார்கள். இதனால் இவர்களுக்கென்று இருக்கிற ஆதரவாளர்களும் அணி மாறினார்கள். இதனால் பொதுக்குழுவின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கேயார் தோற்கடிக்கப்பட்டு விட்டார்.
அடுத்த காட்சிகள்
இனி அடுத்த காட்சிகள் அரங்கேறும். இந்த பொதுக்குழுவும், அதன் முடிவும் செல்லாது என்று கேயார் தரப்பு கோர்ட்டுக்கு செல்லும். கேயார் அணியில் உள்ள செயலாளர் ஞானவேல்ராஜா நேற்று விடுத்த ஒரு அறிக்கையின் மூலம் இதனை தொடங்கி வைத்து விட்டார். "கேயார் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டப்படி செல்லாது. பொதுக்குழுவில் ஓட்டளிக்கும் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்றால் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் அப்படியானால் தீர்மானம் வெற்றி பெற 300 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பெற்றதோ 261 ஓட்டுகள் மட்டுமே என்வே இந்த தீர்மானம் சட்டப்படி செல்லாது" என்று கூறியிருக்கிறார்.
இதே வாதங்களோடு கேயார் அணி நீதிமன்றத்துக்கு செல்லலாம். தேர்தலை நடத்திய முன்னாள் நீதிபதி சண்முகம் இன்னும் 10 நாளில் தேர்தல் குறித்த அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்வார். அதன் பிறகு கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியாது.
மீண்டும் தேர்தல்
நீதிமன்றம் தேர்தலை நடத்துச் சொல்லும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படிச் சொன்னால் மீண்டும் தேர்தல் பிரச்சாரம், ஒருவர் மீது ஒரு குற்றம் சொல்லுதல், அணி மாறுதல் என எல்லா காட்சிகளும் அரங்கேறும். அந்த தேர்தலில் மீண்டும் கேயாரோ, அல்லது கலைப்புலி தாணுவோ வெற்றி பெறலாம். அந்த வெற்றியை எதிர்த்து தோற்றவர் வழக்கு தொடரலாம். இப்படி இது ஓரு தொடர்கதையாகவே சென்று கொண்டிருக்கும் என்பதே அப்பாவி தயாரிப்பாளர்களின் கவலை.
எதிரில் இருக்கும் பிரச்னைகள்
"சினிமா தயாரிப்பு செலவுகள் மலையளவு உயர்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் நடிகைகள் மட்டுமல்லாது இயக்குனர்களின் சம்பளமும் கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தியேட்டர்கள் காற்று வாங்குகிறது. 95 சதவிகித படங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறது. அரசு மானியத்துக்காக 400 திரைப்படங்கள் காத்திருக்கிறது. 4 வருடங்களாக தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கவில்லை. புற்றீசல்கள் போல டிஜிட்டல் சினிமாக்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி தலைக்குமேல் பிரச்னைகள் இருக்கும்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமைக்காக தயாரிப்பாளர்கள் மோதிக் கொள்வது தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது" என்பதே அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களின் கவலையாக இருக்கிறது