55 வருட அரசியல் வாழவில் நான் எதிர் பார்த்த சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்பதால், பாராளுமன்ற அரசியலில் இருந்து ஒதுங்குகின்றேன். என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1952ல் ஆரம்பித்த அரசியல் வாழ்வு, 1959 ல் தீவிரமடைந்து 55 ஆண்டுகள் சலிக்காது, மக்களுக்கு தொண்டாற்றி, கரடு முரடான பாதையில் காடு மேடுகள் ஏறி நீண்ட பிரயாணம் செய்த, பல்வேறு துன்ப துயரங்களில் பங்கேற்று, சளைக்காது களைக்காது செயற்பட்ட நான், ஏறக்குறைய 60 ஆண்டுகள்pன் பின் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது, எனக்கு வெறுமை போல் தோன்றுகிறது. என் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிப் போய்விட்டன.
சமூக சேவையில் இருந்த ஈடுபாடே என்னை அரசியல்வாதி ஆக்கியது. அரசியலூடாகவே சமூகசேவை செய்வது இலகுவாக இருந்ததால், ஓயாமல் ஓடி உழைத்தேன். உண்மையை உரத்துக் கூறினேன். உண்மையாகவே நடந்தேன். சமூகம் என்னை ஏற்று பதவிகளை தந்தது. கிராம சபைத் தலைவராக, பட்டணசபைத் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக உயர வைத்தும் பார்த்தது.
தந்தை செல்வா அகிம்சாவாதி, அவர் வழி அகிம்சைவழி. அவர் இன ஓற்றுமையையும், எமது மக்களின் விடுதலையையும் விரும்பினார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற அவர் விட்டுச் சென்ற பணியில் நிரந்தரமாக ஈடுபட உத்தேசித்து, அமரர் அமிரின் தலைமையில் ஏனைய பலரின் பங்கெடுப்போடு அரசியல் பணி அதி தீவிரமாக நடந்தது.
இன்று அவர்கள் அனைவரும் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட நிலையில், தமிழர் விடுலைக் கூட்டணியின் பெருந் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய நான், முறைப்படி அக்கட்சியின் செயலாளர் நாயகமாக உயர்ந்தும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்னால் தந்தை செல்வாவின் கனவை நிறைவேற்ற முடியவில்லை என்பதை, எனது இந்த 81வது பிறந்த தினத்தில் எண்ணிப் பார்க்கின்றேன்.
யுத்தம் வந்து எம் மக்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக, தம்பி பிரபாகரனுக்கும், ஜனாதிபதிக்கும் எத்தனையோ கடிதங்களை எழுதினேன். இருவரும் எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த முயற்சியில் என்னுடன் எவரும் இணைந்து கொள்ளவுமில்லை.
அதை ஒரு தனி மனிதனின் கருத்தாக, முரண்பாடான விமர்சனங்களை முன்வைத்து, மக்களுக்கு உண்மை நிலையினை உணர வைக்காது, நிராகரித்து விட்டதைப்பற்றிக்கூட, நான் கவலைப் படவில்லை, அதற்குப் பதிலாக யுத்ததிற்கு ஆதரவாகவே தமது கருத்துக்களை வெளியிட்டு விடுதலைப் புலிகளை உசுப்பேத்தி, உசுப்பேத்தி யுத்த களத்திற்குள்ளே தள்ளிவிட்டார்கள்.
அதன் விளைவு யுத்தம் ஏற்பட்டு பல்லாயிரக் கணக்ககான மக்கள் பலியானதுதான் உண்மை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களின் அங்கீகாரத்துடன ஒரு பதவியில் அமர்ந்து அவர்களுக்கு சேவை செய்யலாம் என்ற எண்ணத்தினால்தான் யாழ் மாநகர சபைத் தேர்தலிலும், வடமாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டேனே தவிர, பதவி மோகத்தினால் அல்ல. மக்களின் நலனை கருதியே அத்தேர்தலில்களில் போட்டியிட்டேன். அதையும் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் என்னை தோற்கடித்தனர்.
அதனால் இனி எதிர் காலத்தில் நடக்கும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என தீர்மானிதுள்ளேன். தந்தை செல்வாவினால் உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை பலப்படுத்தி தந்தை செல்வாவின் கனவை நினைவாக்குவதற்கும், யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது மக்களின் நல் வாழ்விற்காகவும் எனது எஞ்சிய காலத்தை செலவு செய்யத் திட்டமிட்டுள்ளேன். எனது எதிர் காலத் திட்டம் பற்றி விரைவில் விரிவான அறிக்கையொன்றை வெளியிடுவேன்.
வீ; ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி