கருதியோ அன்றி எங்கள் மாணவர்களி டத்து மதவாத சிந்தனையைத் தூண்டிவிடும் எண்ணத்திலோ அல்ல என்பதை சத்தியக் கூற்றாக முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேநேரம் யானையைப் பார்த்த குருடரைப் போல எம்மைப் பார்த்தால் என் செய்வோம் என்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெசாக் பண்டிகையின் கொண்டாட்டம் ஒவ்வொரு மாதப் பெளர்ணமியிலும் நடைபெறும்போல் தெரிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வந்த பெளத்த சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளாகம், பல்கலைக்கழகக் கட்டிடங்கள் இவற்றையும் கடந்து திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி உள்ளிட்ட இடங்களில் வெசாக் பண்டிகைக்குரிய சோடணைகளை செய்திருப்பது,
இந்த மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ளுதல் என்ற போர்வையில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தில் பெளத்த மயத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டவர்கள் என்பது தெளிவாகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்று என்பதில் எந்த மறுப்பும் கிடையாது. அதேநேரம் சைவப்பெருவள்ளல் சேர் பொன். இராமநாதன் அவர்களால் வழங்கப்பட்ட இப் பல்கலைக்கழகக் காணி, பரமேஸ்வராக் கல்லூரிக்குரியது என்பதும் இங்கு பரமேஸ்வரப் பெருமான் கோயில் கொண்டெழுந்தருளியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது ஒரு சைவ ஆலயம் இருக்கிற இடத்தில் பெளத்த கலாசார அலங்காரங்களை செய்வ தென்பது ஆதிக்க வெறியின் அடையாளமாகும்.
அதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் மாணவர்கள் எவரும், பல்கலைக் கழக கட்டிடத்தில் சைவ, கிறிஸ்வத, இஸ்லாமிய நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் பொருட்டு சமயம் சார் சோடணைகளை செய்தது கிடையாது. யாழ்.பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறை என்பது ஒரு முக்கியமான பிரிவாக இருந்த போதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டிப்பொங்கல் மட்டும் ஒரு சிறு இடத்தில் நடந்தேறும். அந்த அளவிற்கு சமயப் பண்டிகைகளுக்கு இடம் தராமல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நடந்து கொண்டனர்.
ஆனால் கடந்த ஒருசில வருடங்களில் யாழ்.பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வந்த பெளத்த சிங்கள மாணவர்கள் திட்டமிட்டு பெளத்த சமயத்தின் அனுட்டானங்களை யாழ். பல்கலைக் கழகத்தில் வெளிப்படுத்தி நிற்கின்றனர். இத்தகைய செயல்கள் நீங்கள் பொங்குதமிழ் நடத்தினால், உங்கள் உறவுகளை நினை வேந்தும் பொருட்டு தீபம் ஏற்றினால், நாங்கள் வெசாக்பண்டிகை கொண்டாடுவோம் என்றவாறு அமைந்திருப்பதைக் காணமுடியும். பெளத்த சிங்கள மாணவர்களின் பின்னணியில் முக்கியமானவர்கள் இருக்கிறார்களோ என்று சந்தேகம் கொள்வதில் நியாயம் இல்லாமல் இல்லை.
எதுவாயினும் இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அது நிச்சயம் மாணவர்களிடையே ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தும் என்பதால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் எந்த சமய அனுட்டான சோடணைகளும் இடம் பெறக்கூடாது என்று கண்டிப்பான தடை உத்தரவை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும். இல்லையேல், தமிழ் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தானதாக இருக்கும் என்பது உண்மை.