புலிகள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்கள், கட்டாய ஆட்சேர்ப்பு
செய்தார்கள், தப்பியவர்களை சுட்டார்கள் என்று அவ்வப்போது இனஅழிப்பு அரசிற்கு வேசகம் செய்வதற்கு யாராவது கிளம்பிவிடுகிறார்கள்.அது ஒரு சூழலின் விளைவு, அதிலிருக்கும் தர்க்கங்கள் தெளிவற்றவை. ஒரு சிறிய விடயம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு தொடரும் இனஅழிப்பை நியாயப்படுத்தும் முயற்சி இது. ஆனால் அந்த வரலாற்றுக் கறையை போக்க வேண்டியது நமது கடமை.
நீண்ட தரவுகள், நிறைய சந்திப்புக்கள், பல்துறை வல்லுனர்களின் உதவியுடன் நேரடி சாட்சிகளின் துணையுடன் இதை வரலாற்றில் பதிவு செய்ய பலர் இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எமக்காக போராடியவாகள் மீதான கறையை நாம்தானே கழுவ வேண்டும். அதை கட்டாயம் வரலாற்றில் பதிவாக்குவோம்.. இது புலிகளை புனிதப்படுத்த அல்ல. எமது போராட்டத்தின் அரசியலின் அடிப்படை இது.
எமது போராட்டத்தின் நியாயம் அது.
ஆனால் அதற்குள் யாராவது கிளம்பி வந்து புழுதிவாரி தூற்றுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
எமக்கு ஒன்று புரியவில்லை.. புலிகளை இன்று தூற்றுபவர்கள் அன்று புலிகள் ஆள் பிடிக்கும்போது, பணயக்கைதிகளாக மக்களை வைத்திருந்த போது (இது அவர்களின் மொழி. அந்த மொழியிலேயே நாம் பேசுவோம்) புலிகளின் ஆஸ்தான கவிஞர்களாக, கலைஞர்களாக வலம் வந்த மர்மம்தான் என்ன?
இந்திய இராணுவம் வெளியேறி மாற்று இயக்கங்கள் அகன்ற கையோடுதான் புலிகளின் நிர்வாக ஆட்சி தொடங்கியதாகக் கொள்ளலாம்.
உடனேயே புலிகள் செய்த முதல் வேலை. “பாஸ்” நடைமுறை. குறிப்பிட்ட வயதுள்ளவர்கள் தமிழீழத்தை விட்டு வெளியேற முடியாது என்ற நடைமுறை படிப்படியாக குறைந்து கடைசியில் குடும்பத்தில் ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் செல்லலாம் என்று தளர்த்தப்பட்டது.
அந்த ஒருத்தர் ஏன்? “வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக” என்ற செய்தி அது. தேவைப்பட்டால் அவர் கட்டாய ஆட்சேர்ப்புக்குட்படுத்தப்படுவார் என்பதே அதன் அடுத்த செய்தி.
மே 18 இற்கு பிறகு திடீர் “ஞானோதயம்” பெற்ற அரசியல் “அவியலாளர்கள்”, “கொலை”ஞர்களுக்கு இது ஏன் அப்போது தெரியாமல்போனது?
இதையும் விடுவோம்.. தாம் பின்வாங்கும் ஒவ்வொரு தடவையும் பணயக் கைதிகளாக மக்களை பிடித்து சென்றார்கள் என்று புலம்பும் இவர்கள், 90 களின் நடுப்பகுதியில் முழு யாழ் குடாவையும் புலிகள் வழித்து துடைத்து தம்மோடு அழைத்து சென்றபோது ” வரலாற்று இடப்பெயர்வு” என்று கவிதை வாசித்த மர்மம்தான் என்ன?
அப்போது அது “பணயக்கைதிகள்” என்று தோன்றவில்லையா?
இப்போதும் அவர்கள் பணயக்கைதிகள் அல்ல.. அப்போதும் அல்ல..
உண்மை என்னவென்றால், அரச பயங்கரவாதத்திற்கு எதிராக, இன அழிப்பிற்கு எதிராக ஒரு போராடும் அமைப்பிற்கும் மக்கள் தொகுதிக்கும் இடையிலான பிணைப்பும் முறுக்கமும் அது.
மறைந்த படைத்துறை ஆய்வாளர் சிவராமின் மொழியில் சொன்னால், “படைத்துறைரீதியாக ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பு தவிர்க்க முடியாத ஒரு விபத்து அது. அதில் சமரசம் செய்வதும் ஒன்றுதான் போராட்டத்தை கைவிடுவதும் ஒன்றுதான்..”
Vகருணாவின் வரலாற்று துரோகத்தை அடுத்து தமிழ்த்தேசியம், விடுதலைப்போராட்டம் குறித்த முரணான கருத்துக்கள் என்றுமில்லாதவாறு மேலெழுந்திருந்த நேரம், சிவராமுடன் நாம் பாரிஸ் ஈழமுரசு அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது ஒரு விடயத்தை குறிப்பிட்டார்.
V”களத்தில் நிற்கும் போராளிகள் குறித்து எந்தப் பிரச்சினையுமில்லை.. அவர்கள் மாறும் வாய்ப்பும் இல்லை. ஆனால் புலிகளின் பினதளங்களோடு ஒட்டிக்கொண்டு நிற்பவர்கள் ஆபத்தானவர்களாக காட்சியளிக்கிறார்கள்.
புலிகளின் இருப்பு தொடர்ந்தால் பாதிப்பில்லை.. ஆனால் புலிகள் முற்றாக அழிய நேரிட்டால் இவர்கள் தம்மை அம்பலப்படுத்தி போராட்டத்தின் நியாயத்தை, இருப்பை நிர்மூலமாக்க கூடும்.
ஏனென்றால் தமிழ்த்தேசியம், போராட்டம், புரட்சிகர வன்முறை, படைப்பரம்பல், இராணுவ உட்கட்டுமானம் குறித்து எந்த போதிய அறிவும் அவர்களுக்கில்லை.
எனவே தமது இருப்பு, பதவி பறிபோகும் சூழலில் போராட்ட நியாயங்களுக்கு எதிரானவர்களாக மாறி தாம் செய்யும் துரோகத்திற்கு மக்களையும் பங்காளிகளாக்க முனைவார்கள்.” என்றார்..
இன்று நடந்து கொண்டிருப்பது இதுதான்..
எனவே நாம் விழிப்புணர்வுடன் இருப்போம்.. தொடர்ந்து போராட உறுதியெடுப்போம்..
ஈழம்ஈநியூஸ்.