எம்.பி.,க்கள் யாரும் என் காலிலோ அல்லது இதர பா.ஜ.,
தலைவர்களின் காலிலோ விழக்கூடாது. 'காக்கா பிடிக்கும் வேலையிலும் ஈடுபடக் கூடாது' என, பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். 'அறிவுத் திறமையை வளர்த்து, சிறந்த எம்.பி.,க்களாக பணியாற்ற வேண்டும்' என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பங்கேற்ற, பா.ஜ., பார்லிமென்ட் கட்சிக் கூட்டம், பார்லி., மைய மண்டபத்தில், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:என்னை சந்திக்கும், புதிய எம்.பி.,க்கள் பலர், என் காலைத் தொட்டு வணங்குகின்றனர். இனி, எம்.பி.,க்கள் யாரும் என் காலிலோ, இதர பா.ஜ., தலைவர்களின் காலிலோ விழக் கூடாது. 'காக்கா' பிடிக்கும், முகஸ்துதி பாடும் வேலைகளில் ஈடுபடக் கூடாது.
எம்.பி.,க்கள் எல்லாம் கடுமையாக பணியாற்ற வேண்டும். அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். லோக்சபா நடவடிக்கைகளில் சிறப்பாக பங்கேற்று, சிறந்த பார்லிமென்ட்வாதி என, பெயர் எடுக்க வேண்டும்.அத்துடன், அவரவர் தொகுதிகளில், சிறப்பாக மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்; மெத்தனமாக இருக்கக் கூடாது. கீழ்மட்ட அளவில் உள்ள மக்களை அடிக்கடி சந்தித்து, அவர்கள் உடனான தொடர்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெருவெற்றி பெற, மக்களின் அமோக ஆதரவே காரணம். அந்த ஆதரவை, எந்த வகையிலும் இழந்து விடக்கூடாது.பா.ஜ., இப்போது எதிர்க்கட்சி அல்ல; ஆளும் கட்சி. அதனால், அரசின் திட்டங்களை, கீழ்மட்ட அளவில் உள்ள மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, எம்.பி.,க்களுக்கு உள்ளது. லோக்சபா நடவடிக்கைகள் சுமுக மாக நடைபெறும் வகையில், எம்.பி.,க்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும். சபையின் கவுரவத்தை பேணிக் காக்கும் அதே நேரத்தில், சபை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.