வலயத்துக்குள்பட்ட பாடசாலைகளின் பெண் அதிபர் ஆசிரியர்களுக்கு இரவு வேளைகளில் புலனாய்வுத்துறையினர் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, மாணவர்களின் விவரம், ஒளிப்படங்களை தருமாறு கெஞ்சல் ஸ்தாயி பாடுவதாக தெரிய வருகின்றது.
காலை வேளைகளில் பாடசாலைகளுக்கு செல்லும் இராணுவ புலனாய்வாளர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை தருமாறு கோருவதாகவும், இவர்களின் இந்த நடவடிக்கைக்கு சில அதிபர்களும் ஆசிரியர்களும் “கல்வி திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் விவரம் தர முடியாது எனவும், விவரம் தேவை என்றால் திணைக்கள பணிப்பாளரின் எழுத்து மூலமான அனுமதி கடிதத்தோடு வருமாறும்” எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்து திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிய வருகின்றது.
தமது மிரட்டல்களுக்கு பணிய மறுக்கும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு முன்னால் மூக்குடைபட்டு, போன காரியம் கைகூடாமல் அங்கிருந்து அவமானப்பட்டு திரும்பி விடும் இராணுவ புலனாய்வாளர்கள், இரவு வேளைகளில் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தம்மை அறிமுகம் செய்து கொண்டு, ஆண் அதிபர்களை “ஏய் நீ விவரம் தர மாட்டன் எண்டு சொன்னது தானே. நீ யாருன்னு நமக்கு தெரியும். நீ புலி தானே” என்று மிரட்டுவதாகவும், அதற்கு அதிபர்கள் மறுத்து பேசினால் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களினால் (அருவறுப்பான கடும் தீய சொற்களால்) திட்டி ஏசுவதாகவும், அதுவே பெண் அதிபர்கள் ஆசிரியர்கள் என்றால், வளைந்து நெளிந்து குழைந்து மசிந்து கெஞ்சி, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை தருமாறு கேட்பதாகவும் தெரிய வருகின்றது.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தை விடவும், வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களுக்கே இத்தகைய தொலைபேசி அழைப்புகள் இரவு வேளைகளில் அதிகமாக ஏற்படுத்தப்படுவதையும், இராணுவ புலனாய்வாளர்களின் இந்த அநாகரிக செயலால் அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும் மன உளைச்சல்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய அதிபர்கள் ஆசிரியர்களுக்கு, தமது கைப்பேசி தொடர்பு எண்களை (Sim-card) அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, “பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பதைப்போல”, எத்தகைய சத்தமும் சலனமும் இல்லாமல் ஒரு சில அதிபர்களும் ஆசிரியர்களும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பிலான விவரங்களை, இராணுவ புலனாய்வாளர்களுக்கு வழங்கி, தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான ஆபத்தான நிகழ்ச்சி நிரலுக்கு துணை போவதையும் அவதானிக்க முடிகின்றது.