தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாவை பற்றி கவிஞர் வாலியின் கவிதை
“ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து – பின்
போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு;
அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?
மாமனிதனின் மாதாவே! -நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று – உன் சூலில் நின்று – அன்றே
தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் – பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று… சூளுரைத்து – சின்னஞ்சிறு தோளுயர்த்தி நின்றது நீல இரவில் – அது
நிலாச் சோறு தின்னாமல் – உன் இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் – சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது
அம்மா! அதற்கு நீயும் – அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு, தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட – நாட்பட – உன் கடைக்குட்டி புலியானது காடையர்க்கு கிலியானது! ‘தம்பி! தம்பி!” என நானிலம் விளிக்க நின்றான் – அந்த நம்பி; யாழ் வாழ் – இனம் இருந்தது – அந்த…
நம்பியை நம்பி; அம்மா! அத்தகு –
நம்பி குடியிருந்த கோயிலல்லவா – உன் கும்பி!
சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை…
ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை – செப்பாக்கி;
அவர்கள் வாழ்வை வெட்டவெளியினில்
நிறுத்தி வெப்பாக்கி; மான உணர்வுகளை மப்பாக்கி;
தரும நெறிகளைத் தப்பாக்கி – வைத்த
காடையரை வீழ்த்த… தாயே
உன் தனயன் தானே – தந்தான் துப்பாக்கி!
‘இருக்கிறானா? இல்லையா?” எனும்
அய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று – பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு – அரும்பொருள்
ஆன பிரபாகரன்! அம்மா! இந்த
அவல நிலையில் – நீ… சேயைப் பிரிந்த தாயானாய்;
அதனால் – பாயைப் பிரியாத நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி விமானம் ஏறி – வந்தாய்
சென்னை; அது – வரவேற்கவில்லை உன்னை!
வந்த வழிபார்த்தே – விமானம் திரும்பியது;
விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது!
இனி அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் – எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித்தாயே! – இன்றுனைப் புசித்துவிட்டது தீயே!
நீ – நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி;
உனக்குத் தங்க இடம்தராத – எங்கள்
தமிழ்மண் – நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி!