ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியாவின் புதிய
பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடுமாறு இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை பற்றி இதன் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக பேசப்பட்ட விடயங்கள் பற்றிய எந்த தகவல்களும் அந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், இலங்கை அரச தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக இந்த விடயங்களை வெளியிட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளரும் இந்திய அரசின் பேச்சாளருமான சாஹிட் அக்பருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்திய பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரங்களை வெளியிடவில்லை என்றாலும் ஜனாதிபதியுடன் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட யாழ் மாநகர மேயர் பரமேஸ்வரி, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாகவும் இதன் போது மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க இலங்கை ஜனாதிபதி இணங்கியதாகவும் இந்திய தொலைக்காட்சி ஒன்றிடம் தகவல் வெளியிட்டிருந்தார்.