இரத்தத்தால் சிவந்த தமிழ் மண்ணும் தவிர்க்க முடியாத விடுதலையும் - TK Copy இரத்தத்தால் சிவந்த தமிழ் மண்ணும் தவிர்க்க முடியாத விடுதலையும் - TK Copy

  • Latest News

    இரத்தத்தால் சிவந்த தமிழ் மண்ணும் தவிர்க்க முடியாத விடுதலையும்

    'இனப்படுகொலைக்கான பரிகாரம் விடுதலை மட்டுமே'
    எந்தவொரு தத்துவமும், இலட்சியமும் அதற்கான நடைமுறையாற்தான் மகிமை பெறமுடியும். தோல்விக்காக எதிரியை திட்டிக்கொண்டிருப்பது வீரனுக்கு அழகாகாது. ஏனெனில் எதிரி எப்பொழுதும் தோற்கடிப்பதையே இலக்காகவும் பொறுப்பாகவும் கொண்டிருப்பான். வரலாறு வெற்றிகளால் எழுதப்படுவதால் வெற்றியை அடைய தற்காப்பும், சூழலுக்கு ஏற்ப பின்வாங்கி முன்னேறலும் வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளாகும். ஈழத்தமிழர்கள் வரலாறு காணாத பேரழிவுக்கு முள்ளிவாய்க்காலில் உள்ளாகினர்.

    எதிரி எம்மை உலகத்தால் சுற்றிவளைத்து, தன் கருத்து மண்டலத்தால் மூடிக் கட்டி, தன் அரசியல் நகர்வுகளால் எம்மை தனிமைப்படுத்தி அதன் பின் முள்ளிவாய்க்காலில் எம்மை பேரழிவுக்கு உள்ளாக்கினான். எதிரி தனது அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி, தனக்குள்ள அனைத்து வாய்ப்புக்களையும் ஒருங்கிணைத்து இராஜதந்திர வியூகத்தால் இனப்படுகொலையை கனகச்சிதமாய் அரங்கேற்றினான். இந்த மாபெரும் மனித பேரவலம் நடந்தேறி ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நாம் இன்னும் எமது காயங்களுக்கு மருந்துதடவி எழுந்துநிற்கக்கூட முடியாத நிலையில் நாதியற்றவர்களாய் இருக்கிறோம். 

    மாறிவந்த உலக அரசியல் சூழலிலும் எழுந்துவந்த புதிய புவிசார் அரசியல் தலையெடுப்பிலும் உள்நாட்டு அரசியல் சுறாவளியிலும் எமது போராட்டத்தின் ஒரு பெரும் கட்டம் சிக்குண்டு இந்துசமுத்திரத்தில் ஜனசமாதி அடைந்தது. இப்போது நடந்து முடிந்துவிட்ட அனைத்தையும் படிப்பினைகளாகக் கொண்டு எழுந்து முன்னோக்கி முன்னேற தேவையானவை என்ன என்பதைப்பற்றி நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். ஈழத்தமிழர் விவகாரத்தை இந்திய அரசும் ஈழத்தமிழர் தரப்பும் பரஸ்பரம் தவறாக கையாண்டுள்ளன. 

    தற்போது இவ்விருதரப்பும் தம் கடந்தகால தவறுகளைக் கண்டறிந்து அதிலிருந்து மீண்டெழுந்து ஒரு புதிய அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஈழத்தமிழர் பிரச்சனையை ஈழத்தமிழர்களே சரியாக புரிந்துகொண்டதாக இல்லை. அதாவது ஈழத்தமிழர் பிரச்சனை என்பது வெறுமனே சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையேயான ஒரு பிரச்சனையல்ல. அது அடிப்படையில் ஓர் உபகண்டப் பிரச்சனையாகும். அதாவது வரலாற்று ரீதியாக இந்திய ஆதிக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் எப்போதும் உட்பட்டுவரும் சிங்கள இனம் இந்தியாவிற்கு எதிரான தனது யுத்தத்தை ஈழத்தமிழர் மீது புரிந்துவருகிறது. 

    எப்படியெனில் ஈழத்தமிழரை இந்திய ஆதிக்கத்தின் நீட்சியாக அடையாளங்கண்டு இந்திய ஆதிக்கத்தை இலங்கைத்தீவில் இல்லாது செய்வதற்கு ஈழத்தமிழரை அழிக்க வேண்டியது அவசியமென சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தான் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை அவர்கள் ஈழத்தமிழர்கள் மீது புரிகின்றனர். இந்த அடிப்படை உண்மையை இந்திய அரசும் புரிந்துகொள்ளவில்லை, ஈழத்தமிழரும் புரிந்து கொள்ளவில்லை. இந்திய அரசு தனது பாதுகாப்புக்கு சிங்கள அரசை அரவணைத்துப் போகவேண்டும் என்ற தவறான கொள்கையின் பெயரால் ஈழத்தமிழரின் அழிவை தனக்கான அழிவாக அது கண்டுகொள்ளத் தவறுகிறது. 

    மேற்கண்ட இந்த அடிப்படையை புரிந்து கொண்டால் ஈழத்தமிழரின் பாதுகாப்பில்தான் இந்தியாவின் பாதுகாப்பு உண்டு என்ற பேருண்மையை அவர்களால் புரிந்து கொள்ளமுடியும். ஆதலால் இந்திய தரப்பும், ஈழத்தமிழர் தரப்பும் கடந்த காலத்தில் இருந்து படிப்பினைகளைப் பெற்று சரியான புரிந்துணர்வுடன் இருதரப்புக்கும் நன்மைபயக்கவல்ல ஒரு புதிய உறவுப்பாதைக்கு வழிதேட வேண்டும். இன்றைய உலக அரசியலானது இரண்டாம் உலகமகா யுத்தத்தின் குழந்தையாகவே வடிவம் பெற்றுள்ளது. 

    இரண்டாம் உலகமாக யுத்தத்தில் ஏற்பட்ட மனித இன அழிவு, மற்றும் பொருள் அழிவு, துன்ப துயரங்கள், தோல்விகள் இயலுமைகள், இயலாமைகள் என்பவற்றிலிருந்து தக்க படிப்பினையை உலக நாடுகள் பெற்று அதன் விளைவாக வடிவமைத்துக்கொண்ட உலகமே நாம் காண்கின்ற இன்றைய உலகமாகும். இரத்தத்தால் சிவந்த தமிழ் மண்ணும் தவிர்க்க முடியாத விடுதலையும் தத்துவார்த்த நோக்கு (Philosophical outlook), பொருத்தமான பார்வை (Proper Perspective), அரசியல் திடசித்தம் மற்றும் முழுமையான ஈடுபாடு (Political will and commitment) என்பன ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமே நின்று நீடிக்கவல்ல வெற்றியையும், வளர்ச்சியையும் நாம் ஈட்டமுடியும். 

    இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது அணுகுண்டு வீச்சுக்களுக்கு உள்ளாகி ஜப்பான் பேரழிவுக்கும் பெருந்தோல்விக்கும் உள்ளானது. அணுகுண்டுகள் வீசப்பட்டுக்கொண்டிருந்த இறுதிகட்டத்தில் ஜப்பானிய ஆட்சியாளர்கள் மத்தியில் இருவிதமான கருத்தோட்டங்கள் எழுந்தன. ஒன்று, சோவியத் யூனியனுடன் கூட்டுச்சேர்ந்து அமெரிக்காவை எதிர்கொள்ள சோவியத் யூனியனின் உறவை நாடுவது. இரண்டாவது அமெரிக்காவிடம் சரணடைந்து மன்னராட்சியையும் முதலாளித்துவ அரசமைப்பையும் பேணுவது. இங்கு தத்துவார்த்த நோக்குநிலையில் இருந்து இரண்டாவது தரப்பினர் பின்வருமாறு சந்தித்தனர். 

    சோவியத் ரஷ்யாவுடன் கூட்டுச்சேர்ந்து அமெரிக்காவை எதிர்கொள்வது சாத்தியமேயானாலும் சோவியத் ரஷ்யாவுடன் கூட்டுச்சேரும் போது சோவியத் யூனியன் ஓர் இடதுசாரி நாடு என்றவகையில் தமது மன்னராட்சிக்கு அதனால் பங்கம் ஏற்பட்டுவிடும் என்றும் அத்துடன் சோவியத் யூனியன் ஜப்பானுக்கு அண்மையான நாடு என்ற வகையில் சோவியத் யூனியனது நீண்டகால ஆதிக்க படர்ச்சிக்கு ஜப்பான் உள்ளாக நேர்ந்திடும் என்றும் கருதினர். அன்றைய கால தத்துவார்த்த நோக்கில் முதலாளித்துவம், சோசலிசம் என்ற இருபெரும் அரசியல் சித்தாந்தங்களே முன்னிலையில் இருந்தன. 

    இந்நிலையில் அமெரிக்காவிடம் சரணடைந்தால் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தையும், கூடவே தமது மன்னராட்சி கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாக்க முடியும் என்ற சித்தாந்த நோக்கை ஒருபுறமும், அமெரிக்காவிடம் சரணடைவதன் மூலம் அமெரிக்க பாதுகாப்பை கவசமாகக் கொண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு நாடு என்ற பின்னணியில் நின்ற வண்ணம் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை இலகுவாக ஈட்டமுடியும் என்ற பார்வையையும் (Perspective) கொண்டிருந்தனர். அத்துடன் இதற்கான அரசியல் திடசித்தத்தையும் அதற்கான முழுஈடுபாட்டையும் கைக்கொண்டனர். இங்கு ஜப்பானிய ஆட்சியாளரின் இக்கொள்கை சரி அல்லது பிழை என்ற வாதத்துக்குள் நாம் நுழையவில்லை. 

    ஆனால் மேற்படி மூன்று விடயங்களையும் ஒன்று சேர இணைத்து ஒன்றோடு ஒன்றை இசைவாக்கம் செய்ததன் விளைவாக அமெரிக்காவுடன் போட்டியிடக்கூடிய ஒரு பொருளாதார வல்லரசாக ஜப்பான் தன்னை ஆக்கிக்கொண்டது. பனிப்போரின் பின்பின்னான காலத்தில் ஆயுதந்தாங்கிய தமிழீழ போராட்டம் அதன் ஒரு பிரதான போக்கில் இந்துசமுத்திரத்தில் ஜலசமாதி அடைந்துள்ள நிலையிலும் பின்லேடன் தலைதாங்கிய இஸ்லாமிய அடிப்படையிலான போராட்டமும் பின்லேடனை இந்துசமுத்திரத்தின் அடியாழத்தில் அடையாளம் தெரியாத இடத்தில் மறைத்ததன் பின்னும் காணப்படுகின்ற இன்றைய உலக அரசியலைப்பற்றி ஒரு சாராம்ச விளக்கத்தை நாம் முதலில் பெற வேண்டும். 

    இன்று உலகில் உள்ள அரசுகளுக்கிடையே அரசியல் பொருளாதார அர்த்தத்தில் சித்தாந்த வேறுபாடு என்பது இல்லை. அனைத்து நாடுகளுமே வேறு வேறு இனங்கள் மதங்கள் மொழிகள் என்பனவற்றை சார்ந்திருந்தாலும் அரசியல் சித்தாந்த ரீதியில் முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார சித்தாந்தத்தையே கொண்டுள்ளன. எனவே இன்றைய உலக அரசுகளின் உறவை சித்தாந்த அடிப்படையில் நாம் வேறுபடுத்தவோ பாகுபடுத்தவோ முடியாது. ஆதலால் சித்தாந்த வேறுபாடுகளின் அடிப்படையில் உலகநாடுகளிடையேயான உறவை பார்க்க முடியாது. ஒரே சித்தாந்தமானாலும் அரசுகளிடையே மேலாத்திக்க ஆதிக்க போட்டி இருக்கிறது. 

    அந்த ஆதிக்கப்போட்டியை நாம் ஒரு காரணியாக கருத்தில் எடுக்க வேண்டும். இந்த சித்தாந்த வேறுபாடு இல்லாத போதிலும் தற்பாதுகாப்பும், தேசிய பாதுகாப்பும், மேலாதிக்க போட்டி என்பனவற்றின் நிமித்தம் புவிசார் அரசியலை ஓர் அடிப்படை அணுகுமுறையாக அரசுகள் கொள்கின்றன. எனவே மேற்படி தற்பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, மேலாதிக்கம் என்பனவற்றின் நிமித்தமான புவிசார் அணுகுமுறையை இப்போது சித்தாந்த ஒருமைப்பாட்டைத் தாண்டி அரசியல் வேறுபாட்டுக்கான ஓர் அடிப்படையாய் உள்ளதை நாம் பெரிதும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆதலால் இன்றைய நிலையில் புவிசார் அரசியலை முதன்மையாக கொள்ளாமல் அரசுகளிடையேயான உறவுகளை நாம் கையாள முடியாது. 

    இந்த அரசியல் பொருளாதார சித்தாந்தமானது 'சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு' என்ற இராணுவ அரசியல் சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இந்த அரசியல் பொருளாதார சித்தாந்தமும், இராணுவ அரசியல் சித்தாந்தமும் உலகில் உள்ள அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்தாந்தமாக மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கிடையேயும் சில விதிவிலக்குகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பைக் கொண்ட சித்தாந்தமாகவும் காணப்படுகிறது. இவற்றுடன் கூடவே பரந்த உலகில் கடலைக் கட்டுப்படுத்துவது இராணுவத்தின் ஒரு முக்கிய இலக்காக உள்ளது. இராணுவத்தை அரசியல் பொருளாதரத்தின் இருதயமாக பார்க்கவேண்டும். 

    இதனை பின்பு நோக்குவோம். அரசியல் பொருளாதார சித்தாந்தம், அரசியல் இராணுவ சித்தாந்தம், இராணுவ நகர்வுகள் ஆகிய மூன்றுடன் கூடவே இவற்றையொட்டிய கலாச்சாரம், சிந்தனை, மனப்பாங்கு என்பனவற்றை காவிச்செல்லவல்ல வாகனமாக தகவல் ஆதிக்கம் காணப்படுகிறது. இன்று மேற்கூறிய அனைத்துவகையான ஆதிக்கங்களையும், கலாச்சாரங்களையும், சிந்தனையையும் மற்றும் தெரிவுகள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றையும் காவிச் செல்லவல்ல வாகனமாக தகவல் ஆதிக்கம் காணப்படுவதால், இன்றைய உலக ஒழுங்கின் முதுகெலும்பாக தகவல் உள்ளது. 

    ஆதலால் தகவலை அரசியல், இராணுவம் மற்றும் வாழ்வியல் ஆதிக்கங்களிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாததுமட்டுமன்றி, இவற்றை காவிச்செல்லவல்ல வாகனமாக அது காணப்படுவதால், தகவலின் தனிவிசேட ஆதிக்கத்தன்மையை கணக்கில் எடுக்காமல் எந்தவொரு அரசியல் முன்னேடுப்புக்களையும் மேற்கொள்ள முடியாது. இன்றைய உலகின் கருத்துமண்டலத்தை தகவல் ஆதிக்கமே பல்வேறு வழிகளிலும் உருவாக்குகின்றது. ஆதலால் தகவல் ஒரு படைப்புத்தொழிலையே புரிகிறது என்பதால் அதற்கு பொருத்தமாக நாமும் எமது திட்டமிடல்களையும், வழிநடத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும். 

    இப்பின்னணியில் குறிப்பாக 2005ஆம் ஆண்டைத் தொடர்ந்து இலங்கை தீவு சம்பந்தப்படும் அரசியலில் சீனா ஒரு தலையாய பாத்திரம் வகிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் கவனம் குறிப்பாக இஸ்லாமிய உலக அரசியலை சார்ந்திருந்தபோது, சீனா நீண்டகால நோக்கில் இந்துசமுத்திரத்தின் மீதான ஆதிக்கத்தின் பொருட்டு இலங்கைத்தீவில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கியது. இராஜபக்சே அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவருவதில் இருந்து பின்பு அதனை பலப்படுத்தி அதன்மூலம் இலங்கையில் தனது வேரை ஆழஊன்றி இந்துசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை விருத்தி செய்வதற்கான பெரும்பணியில் ஈடுபட்டது. 

    சீனாவின் இத்தகைய முயற்சியை ஆதிக்கத்திற்கான ஒரு முன்னேற்பாடு என்றும் இந்தியாவிற்கு எதிரான முத்துமாலை வியூகத்தின் ஒரு பகுதியென்றும் அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் சீன அரசு இந்த அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்வதற்கு ஒரு வர்த்தக கோட்பாட்டை முன்வைத்துள்ளது. அதாவது மேற்படி தமது முயற்சி ஒரு இராணுவ தன்மைவாய்ந்தது அல்ல என்றும் சீனாவின் பண்டைய வரலாற்றின் படி அது பின்பற்றிய பட்டு வர்த்தகத்திற்கான 'பட்டுப் பாதையை' பின்பற்றி பண்ட வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான ஒரு முயற்சியே தமது கொள்கையென்றும் கூறுகிறது. 

    ஆனால் இதனை அரசியல் தத்துவார்த்த விளக்கத்திற்குள்ளால் பார்ப்போம். பொருளாதரத்தை வழிநடத்தும் ஆயுதந்தாங்கிய ஒரு துறைதான் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தா இராணுவம், இராணுவம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். மேலும் அரசியல் என்பது இராணுவத்தின் நீட்சி, இராணுவம் என்பது அரசியலின் நீட்சி. இவை அனைத்தையும் ஒரு சமன்பாட்டுக்கு உட்படுத்தினால் ஒரு எளிமையான இலகுவான சமன்பாட்டுக்கு வரலாம். அதன்படி வர்த்தகம் என்பது அரசியல், அரசியல் என்பது இராணுவம். வர்த்தகம்-அரசியல்-இராணுவம் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று நீள்வதே இச்சமன்பாடாகும். 1410ஆம் ஆண்டு சீனா கொழும்பு கோட்டை இராஜ்ஜியத்தின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அதனை தோற்கடித்திருந்தது. 

    வர்த்தக ஆதிக்கத்திற்கு தடையோ அல்லது உடன்பாடின்மையோ ஏற்படும்பொழுது இராணுவம் தனது தொழிலைச் செய்கிறது. எனவே பழைய பட்டுப்பாதை அமைப்பில் இப்படி ஒரு இராணுவ பரிமாணம் இருந்ததை புரிந்துகொண்டால் எதிர்கால பட்டுப்பாதையிலும் இதுவே யதார்த்தமாகும். இப்போது தென்னாசியாவில் முன்னேப்பொழுதும் இல்லாதவாறு மூன்று புவிசார் அரசியல் நலன்கள் மோதுவதற்கான களமாக இலங்கைத்தீவு காணப்படுகிறது. நாம் பழைய வரலாற்றை நோக்காமல் நவீன வரலாற்றை மட்டும் இப்போது நோக்குவோம். 

    நவீன வரலாற்றில் முழு உலகமும் இந்துசமுத்திரமும், இந்தியா இலங்கை என்பனவும் ஒரு பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தன. ஆதலால் இலங்கை தொடர்புறும் இந்தியாவுடனான இட அமைவு புவிசார் அரசியலும், பிரித்தானியாவின் இந்துசமுத்திரம் சார்ந்த புவிசார் அரசியலும், பிரித்தானியாவின் உலகம் தழுவிய புவிசார் அரசியலும் ஒன்றாகவே அமைந்தன. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின் இலங்கையும் இந்தியாவும் வேறு வேறு அரசுகளாக சுதந்திரம் அடைந்தன. இரு தேசங்களையும் ஆண்ட ஒரு பிரித்தானிய ஆதிக்கம் இப்போது இருதேசங்கள் இடையேயான புவிசார் அரசியலில் இல்லை. 

    அதேவேளை வார்சோ அணி, நோட்டோ அணியென பனிப்போர் யுகத்தில் உலகம் இரண்டு அணிகளாக பிளவுண்டபோது இலங்கைத்தீவு ஒருபுறம் அமெரிக்கா தலைமையிலான அணிக்கும் மறுபுறம் இந்தியாவுடனான இடஅமைவு புவிசார் அரசியலுக்கும் இடையில் ஈடுகொடுக்க வேண்டியதாய் அமைந்தது. சோவியத் யூனியன் ஒரு கட்டத்தில் இந்தியாவுடன் கூட்டுச்சேர்ந்ததால் இங்கு இந்தியாவையும் சோவியத் யூனியனையும் இரு பக்கங்களாக பார்க்கவேண்டும். எப்படியோ தென்னாசியாவில் நேரடியர்த்தத்தில் இருமுனைகளே இருந்தன. ஆனால் குறிப்பாக முள்ளிவாய்க்கால் காலத்திலிருந்து இந்து சமுத்திரம் தழுவிய நலன் பொருட்டு சீனா இலங்கையில் தலையெடுத்துள்ளது. 

    ஆதலால் வரலாற்றில் முதல்முறையாக உலகம் தழுவிய அமெரிக்க புவிசார் அரசியல் நலன், இந்து சமுத்திரம் தழுவிய சீன புவிசார் அரசியல் நலன், தென்னாசியா தழுவிய இந்திய புவிசார் அரசியல் நலன் ஆகிய மூன்று வித புவிசார் அரசியல் நலன்களும் இலங்கைத்தீவை ஆடுகளமாகக் கொண்டு செயற்படுகின்றன. இதில் ஈழப்பிரச்சனையே அரசியல் அச்சாணியாகும். ஆதலால் இலங்கைத்தீவையும், ஈழப்போராட்டத்தை ஒட்டி காணப்படும் இத்தகைய பரந்த நடைமுறை சார்ந்த, யதார்த்த பூர்வமான இன்றைய உலக அரசியலை புரிந்து கொண்டு ஈழப்போராட்டத்தை வடிவமைக்க வேண்டிய பெரும் பொறுப்பையும், பணியையும் ஈழத்தமிழர் தரப்புக்கு உண்டு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ஆம் ஆண்டு பூர்த்தியை ஒட்டி நாம் மனத்தில் நிறுத்தி செயலாற்ற வேண்டும். 

    அரசுகளிடையே சித்தாந்த வேறுபாடுகள் இல்லையென்பதனாலும் அரசுகளிடையே மேலாதிக்கப் போட்டியும், புவிசார் அரசியல் உள்ளது என்பதனாலும் இவை அரசுகளுக்கிடையேயான போட்டிகளையும் அவர்களுக்கிடையேயான முரண்பாடுகளையும் பயன்படுத்தி குறைந்தபட்ச நட்பின் அடிப்படையில் ஆகக்கூடியளவு நட்பு நாடுகளை தேடிக்கொள்ள வேண்டும். சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள அரசுக்கு நிரந்தர நண்பர்களாவர் என்பதை கருத்தில் எடுத்து ஏனைய அரசுகளுடன் வளர்க்கக்கூடிய அளவாக காணப்படும் அரைகுறை உறவுகளே ஆயினும் உச்சப்பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தக்கூடிய ஓர் அரசியல் சாமர்த்தியத்தை ஈழத்தமிழர்கள் கைகொள்ளவேண்டும். எமது பொறுப்பு மிகப்பெரியது. 

    அதற்கேற்ப எமது இதயமும் அதிகம் விசாலமாக வேண்டும். எமது இலட்சியம் மிகவும் கடினமானது. அதற்கேற்ப நாம் கடின உழைப்பை மேற்கொள்ளவேண்டும். அதிகம் அதிகம் அறிவுபூர்வமாகவும், யதார்த்தபூர்வமாகவும், மூலோபரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் நாம் பிரச்சனைகளை கையாளவேண்டும். இந்த பூமியின் வரலாற்றில் மூன்று விதமான புவிசார் அரசியல் சக்திகளின் நலன்கள் ஒன்றுகூடும் மையமாக முதல்தடவையாக இப்போதுதான் இலங்கைத்தீவு மாறியுள்ளது. இப்போராட்டம் மூன்று சக்திகளுக்கிடையேயான போராட்டமாக அமைந்தாலும் ஒரு புள்ளியில் இருதுருவங்களுக்கிடையேயான போராட்டமாகவே அமையமுடியும். 

    இந்தியாவின் தென்னாசியா தழுவிய புவிசார் அரசியல் நலனுக்கும், அமெரிக்காவின் உலகம் தழுவிய புவிசார் அரசியல் நலனுக்கும் இடையே சீனாவின் இந்துசமுத்திரம் தழுவிய புவிசார் அரசியல் நலனை ஒரு சக்தியாக சிங்கள அரசு கையில் எடுத்து மேற்படி தென்னாசிய பிராந்திய அரசையும் உலகப் பேரரசையும் கையாள்கிறது. அதற்கான இராஜதந்திர பாரம்பரியத்தையும், முதிர்ச்சியையும் சிங்கள அரசு கொண்டுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஈழத்தமிழர்கள் சிந்தித்து செயற்படவேண்டியதே வரலாற்றுக் கட்டாயம் ஆகும்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: இரத்தத்தால் சிவந்த தமிழ் மண்ணும் தவிர்க்க முடியாத விடுதலையும் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top