பேருவளை உள்ளிட்ட அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்
மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, முஸ்லிம் குழுவொன்றுக்கும், பௌத்தர்களான குழுவொன்றுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களினால் உருவாகிய வன்முறை என்றே ஊடகங்கள் பலவற்றில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், உண்மையில் அவ்வாறு இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதலாக அதனை க்கூற முடியாது.
ஏற்கனவே திட்டமிட்ட ஒரு தாக்குதல் சம்பவமாகவே அது அமைந்திருக்கின்றது. ஏனெனில் இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதலாக இருந்திருந்தால் நேரடி தாக்குதல்களின்போது குழுக்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பார்கள். பலர் காயமடைந்திருப்பார்கள். அதேநேரம் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்களும் வீடுகளும் மாத்திரம் எரியூட்டப்பட்டிருக்கமாட்டாது.
இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட சொத்திழப்பானது பல கோடி ரூபாய் பெறுமதியானது என ஆரம்ப மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது. முஸ்லிம் மக்களுடைய வர்த்தக நிறுவனங்கள் அதிலும் சிறப்பாக இயங்கி வந்த நிறுவனங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன எரியூட்டப்பட்டிருக்கின்றன. பேருவளை என்பது சாதாரணமான முஸ்லிம் மக்கள் வாழும் ஒரு நகரமல்ல. அங்கு முஸ்லிம் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
அதேபோன்று தர்காநகர் மற்றும் அளுத்கம ஆகிய நகரங்களிலும் அவர்கள் நீண்டகாலமாக வசித்து வந்துள்ளார்கள். அவர்களின் கலை கலாசாரம், பண்பாடு, கல்வி, மத ரீதியான வாழ்க்கை முறைமை என்பன அங்கு சிறந்து தழைத்தோங்கியிருந்தன. அங்கு பல்துறை சார்ந்த முஸ்லிம் பெரியார்கள் தோன்றி வாழ்ந்து மறைந்திக்கின்றார்கள். வர்த்தக ரீதியாகவும் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் இந்த மூன்று நகரங்களையும் உள்ளடக்கிய பிரதேசமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்திருக்கின்றது.
இன்றளவிலும் அந்த முக்கியத்துவத்தை அந்தப் பிரதேசம் பேணி வருகின்றது. இத்தகைய ஒரு பின்னணியில் முஸ்லிம் மக்களுடைய பொருளாதாரத்தையும், அந்த சமூகத்தினுடைய இருப்பையும் ஆட்டம் காணச் செய்வதற்காக திட்டமிட்ட வகையில் இந்தப் பிரதேசத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்தப் பிரதேசத்தை நன்கறிந்த முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முக்கிய தமிழர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் என்ற போர்வையில் கொழும்பில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த தமிழ் வர்த்தகர்களுடைய வர்த்தகத்துறை எவ்வாறு திட்டமிட்டு தாக்கி நிர்மூலமாக்கப்பட்டதோ, அதேபோன்றுதான் அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர்களுடைய வர்த்தகத்தின் மீது இலக்கு வைத்து இப்போது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர்கள் அடித்து கூறுகின்றார்கள்.
எனவே பேருவளை, தர்காநகர், அளுத்கம நகரங்கள் மீதான தாக்குதல்கள் - வன்முறையானது, வெறுமனே, இரண்டு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே ஏற்பட்டிருந்த ஒரு மத முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மோதலல்ல என்பது இப்போது வெளிப்பட்டிருக்கின்றது. இந்த வன்முறைகளில் ஏற்பட்டுள்ள சொத்தழிவுகள், தாக்குதல்களுக்கான இலக்குகளாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த இடங்கள், நிறுவனங்கள் என்பனவும், இந்த வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள சேதங்களின் தன்மை என்பன இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
பேரினவாத அரசியல் நோக்கமும், பேரினவாத அரசியல் நலனும் இந்த வன்முறைகளில் பின்னணியாக இருக்கின்றன என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அளுத்கம பிரதேசத்து வன்முறைகள் பற்றிய ஒரு கண்ணோட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தக் கூற்றை உறுதி செய்யும் வகையிலேயே சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிசார் மற்றும் படையினருடைய செயற்பாடுகள் அமைந்திருந்ததையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இந்த வன்முறையானது சாதாரணமான மத அமைதியின்மையின் வெளிப்பாடாக இருந்திருந்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் அதனை உடனடியாகவே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார்கள். அத்துடன் அரசாங்கமும் தீவிரமாகச் செயற்பட்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்து அவர்களை உடனடியாகவே சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கும்.
பொதுபலசேனா அமைப்பினரே இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தார்கள் என்பதைப் பலரும் வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளும் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு மறுக்க முடியாத ஆதாரங்களாக அமைந்திருப்பதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. அதற்கேற்ற வகையில் பொலிசாரும்சரி, அரசாங்கமும்சரி பொதுபலசேனா அமைப்பினர் பக்கம் திரும்பிப்பார்க்கக்கூட விரும்பாதவர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய பின்னணியில்தான் நாடெங்கிலும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும், கடையடைப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் மக்கள் மீது பொதுபலசேனா அமைப்பினர் திட்டமிட்ட வகையில் தாக்குதல்களை நடத்தினார்கள் என்ற தகவல் பெரிய அளவில் வெளியாகியதையடுத்தே, தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் லண்டனிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இன ஒடுக்குமுறை பாணியிலான தாக்குதல் காரணமாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் தொடக்கம், உலக முக்கியஸ்தர்களும் இந்தத் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள். மொத்தத்தில் தேன் கூட்டின்மீது கல்லெறிந்த நிலைமைக்கே அளுத்கம பிரதேச வன்முறை தாக்குதல் சம்பவம் பொதுபலசேனா அமைப்பினரையும், அரச தரப்பினரையும் இட்டுச் சென்றிருக்கின்றது.
பல பாடங்களை உணர்த்தும் பேருவளை வன்முறைகள்
பலருடைய கவனத்தை ஈர்த்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காகப் பலரையும் குரல் கொடுக்கச் செய்துள்ள அளுத்கம மற்றும் தர்காநகர், பேருவளை அசம்பாவித சம்வமானது, பல பாடங்களை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கின்றது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று, 1983 ஆம் ஆண்டு தமிழர்களுடைய வர்த்தகத்துறையை நிர்மூலமாக்குவதற்காகக் கலகங்கள் கட்டவிழ்த்துவிட்டதை ஒத்த வகையில் பேருவளை உள்ளிட்ட அளுத்கம முஸ்லிம் வர்த்தகர்கள் மீதான தாக்குதல்கள் அமைந்திருக்கின்றன.
பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்றதாக அளுத்கம வன்முறைச் சம்பவங்கள் உருவகிக்கப்பட்டிருந்தன. ஆனால், அது உண்மையிலேயே முஸ்லிம் வர்த்தகர்கள் செல்வாக்கு செலுத்துகின்ற வர்த்தக நடவடிக்கையை இல்லாமல் ஒழிக்கும் நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து ஒரு விடயம் மிகவும் தெளிவாகப் புலப்படுத்த ப்பட்டிருக்கின்றது.
தமிழ், முஸ்லிம் மக்கள் பலம் பெற்றுள்ள வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து அவர்களை ஓரங்கட்டி, நாட்டின் வர்த்தகத்துறையை சிங்கள மக்களின் முழுமையான கட்டுப்பாட் டில் வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாக அளுத்கம சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் மட்டுமல்ல.
முஸ்லிம் மக்களும் சிறுபான்மையினர் என்ற வகையில்பெரும்பான்மை இன மக்களின் தயவில் தங்கி வாழ வேண்டும். தனித்துவ மான செயற்பாடுடையவர்களாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்ற வகையிலேயே காரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லிம் மக்களுக்கென தனியான அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளில் பல முஸ்லிம்கள் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள்;.
இப்போதும் இருந்து வருகின்றார்கள். முஸ்லிம் அரசியல் கட்சிகளும்கூட பெரும் பான்மையின கட்சிகளுடன் இணைந்து செயற்படுகின்ற பாணியையே பின்பற்றி வந்திருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது ஆட்சிக்கு வருகின்ற கட்சியின் சார்பில் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அமைச்சர்களாகவோ அல் லது அரசாங்கத்தின் முக்கிய அரசியல் பதவிகளையோ பெறுபவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
அவ்வாறு அரசியல் செல்வாக்கைப் பெறுவதன் ஊடாகத் தாங்களும் நன்மையடைந்து, தம்மைச் சார்ந்த முஸ்லிம் மக்கள் தரப்பினரையும் நன்மையடையச் செய்திருக்கின்றார்கள். முக்கியமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தனியாகச் செயற்படுகின்ற முஸ்லிம் கட்சிகளும்கூட, இந்த கூட்டரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளாக மாறி அதன் மூலம் அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பதவிகளை அந்தக் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.
எந்த வகையிலாவது அரசாங்கத்தின் செல்வாக்கு பெற்றவர்களாகத் திகழும் வகையிலேயே முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தமது கட்சி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றார்கள். இது ஒரு மரபு ரீதியான அரசியல் செயற்பாடாகவே அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இருந்த போதிலும், இதில் உள்ள சோகம் என்னவென்றால், ஆளும் தரப்பினருடைய அரசியல் செல்வாக்கைப் பெற்றுள்ள அரசியல் தலைவர்களும், அவர்களோடு நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களும் நன்மையடைந்திருக்கின்றார்களே தவிர, சாதாரண முஸ்லிம் மக்களின் இந்த அரசியல் உத்தியின் மூலமாக நன்மையடைந்ததாகத் தெரியவில்லை.
சாதாரண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு இந்த அரசியல் உத்தியின் மூலம் தீர்வு காண முடியாத தலைவர்களாகவே முஸ் லிம் அரசியல் தலைவர்கள் திகழ்கின்றார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் மக்களுக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன.
இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், அவர்களுக்கான வாழ்வா தாரம், இடம்பெயர்ந்திருந்த காலத்தில் பல்கிப் பெருகியுள்ள உப குடும்பங்களின் குடியிருப் புத் தேவைக்கான காணிகள் போன்ற பிரச்சினைகள் முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. இதனையும்விட, பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்த காணிகள், விவசாயம் மேற்கொண்டிருந்த காணிகளிலும் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன.
இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் ஒட்டி உற வாடி அரசியல் செய்கின்ற அரசியல் உத்தி இதுகால வரையிலும் பெரிய அளவில் உதவவில்லை என்றே கூறவேண்டியிருக்கின்றது. தமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்கூட, அரசாங்கத்துடன் இணைந்திருந்து முன்னெடுக்கின்ற இணக்க அரசியலில் அதனை ஈடேற்றிக் கொள்ள முடியவில்லை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
இத்தகைய உணர்வுக்குப் பின்பும் தமது அரசியல் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. பரீட்சார்த்தமாகக் கூட, வேறு அரசியல் வழிகளைப் பின்பற்றுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசத்து வன்முறையானது, அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும்கூட, முஸ்லிம்கள் சிறுபான்மை இன மக்களே, அவர்கள் பெரும்பான்மை இனத்தவரின் தயவிலேயே தங்கி வாழ வேண்டும் என்ற கசப்பான உண்மையை அழுத்தி உணர்த்தியிருக்கின்றது.
முஸ்லிம் மக்கள் அடுத்தவரின் அல்லது அரசியல் செல்வாக்கு பெற்ற வர்களின் நிழலில் நீண்டகாலத்திற்கு அரசியல் செய்ய முடியாது என்ற கசப்பான உண்மை அளுத்கம அசம்பாவிதத்தின் மூலம் உணர்த்தப்பட்டிருக்கின்றது. இதனை நீண்டகால அரசியல் அனுபவம் பெற்றுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இப்போதாவது உணர்ந்திருக்கின்றார்களா என்பது தெரியவில்லை.
முஸ்லிம்கள் இந்த நாட்டின் மத ரீதியாக சிறுபான்மை இனத்தவர்கள், என்ற வகையில் அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். தங்களுக்கென பலமான அரசியல் அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிகழ்கால அரசியல் தேவையை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் இதனை அளுத்கம சம்பவங்கள் அவர்களுக்குப் புகட்டியிருக்க வேண்டும்.
முஸ்லிம் மக்களின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்துக்கள் ஏற்படும்போது, அவற்றைக் களைவதற்கு அரசாங்கத்தின் நிழலில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகளும், அரசாங்கத்தோடு ஒட்டியிருந்து முன்னெடுக்கின்ற இணக்க அரசியலும் உதவப் போவதில்லை என்ற உண்மையை அவர்கள் இதுவரையில் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே பலரும் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாவற்றிற்கும் முண்டு கொடுத்திருந்தும்கூட, அரச ஆதரவுள்ள பௌத்த அமைப்பாகிய பொதுபலசேனா அமைப்பின் அடாவடிச் செயற்பாடுகளுக்கு அடிபணிந்து செல்லவேண்டிய அவல நிலையிலேயே முஸ்லிம் மக்கள் இன்று இருக்கின்றார்கள்.
அவர்கள் மீதான மத ரீதியான ஒடுக்குமுறைகள் இப்போது நீண்டகாலமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனை கண்டும் காணாத வகையிலேயே அரசாங்கம் சென்று கொண்டிருக்கின்றன. அதனைத் தட்டிக்கேட்டு,, தமது மக்களின் பாதுகாப்பையும் மத உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கு முடியாதவர்களாகவே அரச தரப்பு அல்லது அரசுக்கு ஆதரவு நல்கி வருகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப்போனால், அவர்கள் கையாலாகாதவர்களாகவே இருக்கின்றார்கள். அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்ற ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொள்ளப் போவதாக அவர்கள் எச்சரிக்கை செய்கின்றபோதெல்லாம், அது எந்தவிதமான சலனத்தையும் அரச தரப்பில் ஏற்படுத்தாத ஒரு போக்கே நிலவுகின்றது.
இத்தகைய நிலையில் தமது மக்களின் நலன்களுக்காக உரத்து குரல் கொடு க்க முடியாதவர்களாகவே அந்தத் தலைவர்கள் காணப்படுகின்றார்கள். இதனை, அளுத்கம சம்பவம் இன்னும் ஆழமாக அவர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் ஒரு பாடம்
அளுத்கம சம்பவமானது, முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல. தமிழர்களுக்கும் முக்கியமான ஒரு பாடத்தைப் புகட்டியிருக்கின்றது. பேரினவாதிகளின் கைகளில் சிக்கி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வழியின்றி சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்த பின்பும், யுத்தம் மூள்வதற்குக் காரணமாக இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், அரசியல் தீர்வு காண்பதில் அரசுக்கு எந்தவிதமான அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். அதன் ஊடாக இன நல்லிணக்கத்தை நாட்டில் உருவாக்க வேண்டும் என்று ஐ.நா.வும் சர்வதேசமும் இலங்கை அரசாங்கத்தை நெருக் கிக் கொண்டிருக்கின்றன.
1987 ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்தபோதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தவறிவிட்ட இந்தியாவின் காங்கிரஸ் இம்முறை நடைபெற்ற தேர்தலில் பதவியிழந்திருக்கின்றது. புதிதாக அரச பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கூடிய அக்கறையையும் கவனத்தையும் செலுத்தும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தச் சூழலிலேயே அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான வன்முறை இடம்பெற்றிருக்கின்றது, இந்த நிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட, தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகின்ற சிறுபான்மை இன மக்கள் என்ற ரீதியில் தமிழர்களும், முஸ்லிம்களும் இறுக்கமாகக் கைகோர்த்து தமது உரிமைகளுக்காகவும், பாதுகாப்பு மற்றும் தமது இருப்புக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்பது உணர்த்தப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்குமுறை மற்றும் தாக்குதல்களை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று அந்தக் கவனத்தை நீர்த்துப் போகவிடாமல் செய்திருந்ததன் காரணமாகவே மற்றுமொரு சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது அளுத்கமவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காட்டுத் தீ போல சர்வதேசத்தின் உடனடியான தீவிர கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
சர்வதேசத்தின் இந்த அவதானத்தையும், அக்கறை மற்றும் கரிசனையையும் தொடர்ந்து பேணி, சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடும், பிணைப்பும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தப் பிணைப்பையும், ஒன்றி ணைந்த செயற்பாட்டையும் சிறுபான்மையி னராகிய தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் உளப்பூர்வமாக முன்னெடுக்க வேண்டும். முன்னெடுப்பார்களா?
-வீரகேசரி-