வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்குப் பதிய தவிசாளராக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை துரைசிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தவிசாளராகக் கடமையாற்றியிருந்த அன்னலிங்கம் உதயகுமார் பதவியிழந்திருந்தார். பதவியிழப்பிற்கு பின்னராக தனது பதவியிழப்பிற்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையானது 21 உறுப்பினர்களைக் கொண்டதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி சார்பில் 5 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர். 2014 ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 07 உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி யுடன் இணைந்து தோற்கடித்திருந்தனர். வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கும் துரோகத்தனத்திற்கு எவரும் விலைபோகக் கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் கடுமையான அறிவுறுத்தல்களையும் வழங்கியதோடு மட்டுமல்லாது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை .சோ.சேனாதிராஜாவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சபை உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை மற்றும் சபை உறுப்பரிமை என்பன பறிக்கப்படும் என எச்சரித்தும் கூட 07 உறுப்பினர்களும் கடசியின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்படாமல் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ஈ.பி.டி.பி யுடன் இணைந்து வரவுசெலவுத்திட்டத்தை தோற்கடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 07 உறுப்பினர்கள் மீது எந்த விதமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமல் சபையினை எப்படிச் சீரான முறையில் கொண்டு செல்லமுடியும் என பொதுமக்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணி சார்பாக தெரிவான 03 உறுப்பினர்களை உடனடியாக நீக்கி பிரதேச சபையின் செயற்பாடுகளை சீராகக் கொண்டு நடாத்த உதவுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் பிரேமச்சந்திரன் மாவை .சேனாதிராஜாவிடம் கோரியுள்ளார். ஏனைய 04 உறுப்பினர்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.