வடமாகாண சபைத் தேர்தலில் முன்னாள்
நீதியரசர் சி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு வடபகுதி மக்கள் வரலாற்றுப் பெரு வெற்றியை பெற்றுக்கொடுத்து ஏறத்தாழ ஒன்பது மாதங்களாகின்றன.
எதனையும் சீர்தூக்கி பார்த்து நிதானமான ஆனால் தீர்க்கமாக காரியமாற்றக் கூடிய கற்றறிந்த நீதிமான் என்ற வகையில் தமிழ்த் தரப்பினர் ஏகோபித்து தமது முதலமைச்சராக சி. விக்னேஸ்வரனைத் தெரிவு செய்ததும் அவரின் தெரிவினை தமிழ் மக்கள் மட்டுமல்லாது இலங்கையில் உள்ள ஏனைய இன மக்களும் மரியாதை கலந்து ஏற்றுக் கொண்டமையும் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆயினும் இவ்வாறான அங்கீகாரம் மிக்க ஒருவர் தமிழர்களின் அரசியல் தலைமையினை ஏற்று நடப்பதனை விரும்பாத இலங்கை அரச தரப்பும் அதனோடு இணைந்த சக்திகளும் நன்கு திட்டமிட்ட வகையில் தந்திரோபாய காய் நகர்த்தல்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதன் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஓர் நெருக்கடி நிலைக்குள் வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயற்பட அனுமதியாத ஓர் நிலைமையை தோற்றுவித்து காலப்போக்கில் அவரை ஓர் செயற்திறனற்ற சாதனைகள் புரிய தகுதியற்ற ஒரு தலைவர் என்கின்ற தோற்றப்பாட்டை உருவாக்குதல் என்பதே அத்திட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது.
இந்தப் பாரிய திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்தும் பொருட்டு அதிகாரிகள் தேசிய மற்றும் உள்ளூர் மட்ட அரசியல்வாதிகள், ஊடகத்துறையினர் என பல்வேறு தரப்பினரையும் பயன்படுத்திக்கொண்ட அரசு தற்போது பொதுமக்கள் மத்தியில் சில வாதப்பிரதிவாதங்களை திட்டமிட்டு தோற்றுவிப்பதன் ஊடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கொடுத்து வருகின்ற நெருக்கடிகள் மேலும் அதிகப்படுத்துவது வடமாகாண சபையின் செயற்பாடுகளில் ஓர் நிலையற்ற தன்மையினை உருவாக்கி அதன் மூலம் தமிழரின் அரசியல் தலைமைத்துவத்தை செயற்திறனற்றதாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதனை அறியக் கூடியதாக உள்ளது.
சர்வதேச அழுத்தங்களுக்கு அடி பணிந்து வடமாகாண தேர்தலை இலங்கை அரசாங்கம் நடத்தியிருந்தாலும் கூட தமிழர்களைத் தலைமையாக கொண்ட ஓர் அதிகார மையம் உருவாகுவதையோ அல்லது அது திறம்பட செயற்படுவதையோ இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கம் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. அதிலும் குறிப்பாக விக்னேஸ்வரன் போன்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட சட்ட நுணுக்கங்களை ஆய்ந்து அறிந்து கொண்ட ஓர் உறுதியான மற்றும் நேர்மையான சலுகைகளுக்கு விலைபோக விரும்பாத ஓர் தலைமைத்துவத்தின் கீழ் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடமாகாண சபை அதிகாரிகளுடன் முழுமையாக இயங்குவதை அரசு விரும்பவில்லை.
விக்னேஸ்வரனின் இடத்தில் இன்னுமோர் சாதாரண அரசியல்வாதி இருந்திருப்பாராயின் அவரை மிக எளிதில் சாம, பேத, தான, தண்டத்தை பயன்படுத்தி அரசு தன் வழிக்கு கொண்டு வந்திருக்கும். குறித்த அரசியல்வாதி தனக்கு சாதகமாக இல்லா விட்டாலும் கூட அரசுக்கு பாதகமாக செயற்படாத நிலைமையினை உருவாக்கிக் கொண்டிருக்கும். ஆனால் விக்னேஸ்வரன் விடயத்தில் அரசின் தந்திரோபாயங்கள் பலிக்காத ஓர் நிலைமையே காணப்படுகின்றது.
அதற்கு விக்னேஸ்வரன் என்கின்ற தனிமனித ஆளுமையும் தனக்கு சரியென பட்டதை நேர்பட உரைக்கும் திறனும் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காணப்படுகின்ற அங்கீகாரமும் காரணிகளாக அமைந்துள்ளன. வட மாகாணத்தின் எங்கோ ஓர் குக் கிராமத்தின் மூலையில் உள்ள ஏனைய தமிழ் தலைமைகளைக் காட்டிலும் விக்னேஸ்வரனுக்கு இருக்கக் கூடிய பலம் அதுவே எனலாம். இவ்வாறான ஆளுமையையும் அங்கீகாரத்தையும் கொண்ட விக்னேஸ்வரனை முழுமையாக இயங்க அனுமதிக்க கூடாது என்பதில் அரச இயந்திரம் ஆரம்பம் தொட்டே மிகக் கண்ணும் கருத்தாகவும் இருந்து வருகின்றது.
வட மாகாண அமைச்சுக்குப் பொருத்தமான அதிகாரிகளை தெரிவு செய்வதில் தொடங்கி சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடத்தொடங்கியது. அரச அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஓர் முரண்பாட்டினை நிலவச் செய்தல் மக்களின் உணர்வுகளோடு தொடர்பட்ட விடயங்களை பெரிதாக்கி வட மாகாண சபையினை இக்கட்டான நிலைமை ஒன்றிற்குள் தள்ளி விடுதல் பிரதேசங்களுக்கிடையில் பிரிவினையினை அல்லது மாவட்டங்களுக்கிடையில் வேற்றுமைகளை உருவாக்கக் கூடிய விடயங்களை மேற்கொணர்ந்து விவாதப் பொருளாக்கி அரசியல் இலாபம் தேடல் என்கின்ற பல்வேறு வகைகளில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் அவரது மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அரச சார் தரப்பு தொடர்ந்தும் நெருக்கடி நிலை ஒன்றை தோற்றுவித்த வண்ணம் உள்ளது.
இவ்வாறான ஓர் அமுக்க நிலைமையினை உருவாக்கி அதன் மூலம் இரண்டு விடயங்களை சாதிக்கலாம் என அரசாங்கம் திட்டமிட்டது. ஒன்று வடமாகாண சபையினை பூரணமாக இயங்க விடாமல் செய்வதன் மூலம் பெரும் எதிர்பார்ப்பில் வாக்களித்த மக்கள் மத்தியில் ஓர் அதிருப்தியை உருவாக்கி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீதும் அதன் தலைமைத்துவங்கள் மீதும் ஓர் எதிர்ப்பலையினை உருவாக்கிக் கொள்வது இரண்டாவது இவ்வாறான எதிர்ப்பலைகளுக்கு அஞ்சி வட மாகாண சபை இருக்கின்ற அரைகுறை அதிகாரங்களை வைத்துக்கொண்டு அரசுடன் இணைந்து செயற்பட தொடங்குவார்களாயின் வட மாகாண சபை தற்போது பூரணமாக செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என்ற தோற்றப்பாடு ஒன்றினை உருவாக்கி தமிழர் தரப்புக்கு எந்த ஓர் அதிகாரப் பரவலாக்கத்தையும் செய்யாது தவிர்க்கின்ற ஓர் நிலைமையினை உருவாக்கிக் கொள்வது. ஆனால் அரசு நினைத்தவாறு இரண்டு விடயங்களும் இடம்பெறவில்லை என்பதே இன்றைய யதார்த்தமாகும். அரசின் முதலாவது இலக்கான பொதுமக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீதும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதும் அதிருப்தியினை உருவாக்குவது என்பது வடமாகாணத்தை பொறுத்தவரையில் அவ்வளவு எளிதில் கைகூடவில்லை.
பொதுமக்கள் அரசியல் நிலைமை பற்றி விளங்கிக் கொள்பவர்களாக இருந்தமையும் ஊடகங்கள் மூலம் அரசின் முட்டுக் கடைகள் பற்றி பொதுமக்களுக்கு வெற்றிகரமாக எடுத்து செல்லப்பட்டமையும் இதற்கான காரணங்களாக சொல்ல முடியும். மறுபுறத்தில் அரசின் இரண்டாவது இலக்கான தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வினை தந்திரமாக தவிர்த்துக் கொள்வது என்பதுவும் சாதகமற்ற ஓர் நிலைமையினை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது எனலாம். ஏனெனில் மத்திய அரசால் வடமாகாண சபைக்கான அதிகாரங்கள் முழுமையாக தரப்படவில்லை.
அதனால் வட மாகாண சபையால் முழுமையாக இயங்க முடியாது உள்ளதுடன் மக்களுக்கு எதனையும் செய்ய முடியாது உள்ளது என்கின்ற உண்மை நிலைமையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சர்வதேசத்துக்கு மிகக் கவனமாக எடுத்துச் சென்றுள்ளனர்.வட மாகாண சபை தொடர்பிலான அரசின் இவ் இரு நோக்கங்களை மிகத் தந்திரமாக முறியடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஓர் சாதகமான நிலையினை உருவாக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் மூல காரணமாக அமைந்துள்ளன என எண்ணத் தோன்றுகிறது.
வடமாகாண சபையின் இவ்வாறான செயற்பாடுகளால் அரசு தற்போது ஓர் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாகாண சபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக வழங்குமாறு சர்வதேச அழுத்தங்கள் மெல்ல மெல்ல வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றதை தொடர்ந்து இலங்கை அரசுக்கான இந்த அழுத்தம் அதிகரிக்க தொடங்கியுள்ளதுடன் இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என கருத இடமுண்டு.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கின்ற பட்சத்தில் தமிழர் தரப்புக்களுடனான சர்வதேச தொடர்புகளும் உறவுகளும் அதிகரிக்கின்ற ஓர் நிலைமை இதன் போது விக்னேஸ்வரன் போன்ற சட்ட நுணுக்கங்கள் தெரிந்த உறுதியான ஓர் ஆளுமை வடமாகாண முதலமைச்சராக இருப்பது அரசுக்கு பல சங்கடங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விக்னேஸ்வரன் மீதான நெருக்கடிகளை மேலும் அதிகப்படுத்தி அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான புதியதோர் ஆட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஆட்டத்தை மக்களிடையே வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்தல் என்கின்ற தந்திரோபாயத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுவும் தமிழ் மக்களிடையே பெரியளவில் எந்த ஓர் அதிர்வையும் ஏற்படுத்தவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் தமிழ் மக்கள் எப்போதும் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்கின்ற ஆளுமையில் இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர் இந்த ஒன்பது மாத காலப் பகுதியில் வடமாகாண சபையும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எதனையும் சாதிக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு பதிலைதான் முன் வைக்க முடியும்.
அரசியல் என்பது சாணக்கியத்தனம் மிக்கது. அது வெறுமனே வேகமாக செயற்படுவதும் புள்ளி விபரங்களின் இலக்குகளை அடைந்து கொண்டு சாதனைகளை பட்டியலிடுவதும் அல்ல. அதையும் தாண்டி அடைய வேண்டிய இலக்கு நோக்கி தந்திரோபாயமாக நகர்வுகளை மேற்கொள்ளுதல் ஆகும். அதற்கு வினை வலிதம் தன் வலிதம் மாற்றான் வலிதம் துணை வலிதம் சீர் தூக்கி காரியங்களை ஆற்ற வேண்டியிருக்கும். வெற்றியை விரும்புபவன் தனக்கு சாதகமான நிலைமை வரும் வரை காத்திருத்தல் அவசியம்.
அடைய வேண்டிய இலக்கு நோக்கி சாதகமான காலம் வரும் வரை வடமாகாண சபையினரும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் காத்திருக்கும் காலப்பகுதிதான் இதுவென எண்ணத்தோன்றுகின்றது. 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.'
- சுந்தரம் பாண்டியன் -