முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்
தொடர்பில் தாம் சட்டநடவடிக்கைகளுக்கு தயாராவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் செய்ட் அல் ஹுசைன், இலங்கை தொடர்பில் உரிய முனைப்புக்களை மேற்கொள்வார் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக இலங்கையின் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் தொடர்பில் அவரிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கை மாத்திரமல்ல ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணைக்கு வடகொரியாவும் தமது ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டினார். போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளப்போகும் ஐக்கிய நாடுகளின் குழுவை பொறுத்தவரையில் அது இலங்கையில் வெளியில் இருந்து மேற்கொள்ளும் விசாரணையே நியாயமானதாக இருக்கும்.
ஏனெனில் இலங்கையில் நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டைகளை நிச்சயமாக ஏற்படுத்தும் என்று உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்ற விசாரணையின்போது சாட்சி பாதுகாப்பு அவசியமானதாகவும் இந்தநிலையில் இலங்கையில் வெளியில் இருந்து தரப்படும் சாட்சியமென்றாலும் இலங்கை அரசாங்கத்தினால் குறித்த சாட்சிகளுக்ககு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வழிவகுக்கும் என்று ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.