டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கி காயமடைந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது மாரடைப்பால் முண்டே உயிரிழந்தார். காலை 8 மணிக்கு முண்டே மரணமடைந்ததாக பாஜக தலைவர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் முண்டேவின் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோனைக்குப் பின் அவரது உடல் பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
மோடியின் அமைச்சரவையில், கோபினாத் முண்டே ஊரக வளர்ச்சித்துறையை கவனித்து வந்தார். மராட்டிய மாநிலம் பீத் தொகுதியில் இருந்து முண்டே மக்களவைக்கு தேர்வாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை இறுதிச்சடங்கு
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரான மராட்டி மாநிலம் பரலியில் முண்டேவின் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது.
5 முறை எம்.எல்.ஏ
மராட்டிய சட்டப்பேரவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோபிநாத் முண்டே.1995-1999 வரை மராட்டிய மாநில துணை முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மராட்டிய மாநிலம் பரலியில் 1949-ம் ஆண்டு டிசம்பர் 12-ல் பிறந்தார் கோபிநாத் முண்டே.
பிரதமர் மோடி இரங்கல்
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.