இலங்கை மனித உரிமை விவகாரங்கள் குறித்து
விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழு வட அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு சாட்சியங்களை திரட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியான டேம் சில்வியா கார்ட்ரைட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குழுவின் விசேட நிபுணராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டியும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன.
அதன்படி விசாரணைக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள டேம் சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் நீதிபதி பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டேம் சில்வியா கார்ட்ரைட் இந்த அனைத்துலக தீர்ப்பாயத்தின், இரண்டு நீதிபதிகளில் ஒருவராக செயலாற்றிவந்தார்.
இந்நிலையில் விசாரணைக் குழு நியமனம் குறித்து இம்மாதம் 15 ஆம் திகதியளவில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. விசாரணை செயற்பாடுகளுக்கான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் வட அமெரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கான விஜயங்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெறும் என்றும் ஜெனிவாத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த செயற்பாடுகளுக்கான நிதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாகும்.
எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியாகும்போது விசாரணைக் குழுவின் முழுமையான அறிக்கை தயார் செய்யப்படவுள்ளதுடன் அதனை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரில் விசாரணைக் குழுவின் வாய்மூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
ஜூன் 15 ஆம் திகதியிலிருந்து விசாரணை செயற்பாட்டுக்கான ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் ஜூலை மாதத்தில் விசாரணை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் பின்னரே விசாரணைக் குழுவின் நாடுகளுக்கான விஜயங்கள் இடம்பெறவுள்ளன.
இது இவ்வாறு இருக்க கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 26ஆவது அமர்வில் உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான பரந்துபட்ட விசாரணையை மேற்கொள்வதற்கான நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள் உள்ளடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாக குறிப்பிட்டார்.
விசாரணை செயற்பாட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களே நடத்துவார்கள் என்றும் நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள் அவர்களுக்கு உதவுவார்கள் என்றும் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டார். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மற்றும் விசாரணைக் குழு என்பனவற்றை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேரவையில் கடந்த 10 ஆம் திகதி உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவினரின் பரந்துபட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பிரேரணையானது உள்நாட்டு நல்லிணக்க செயற்பாட்டை கடுமையாக பாதிக்கும். இலங்கை விடயத்தில் முற்கூட்டிய தீர்மானம் மற்றும் பக்கச்சார்பு செயற்பாடு என்பன மனித உரிமை ஆணையாளர் மற்றும் மனித உரிமை பேரவையிடம் தொடர்ந்து காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.