வடபகுதி மக்கள் மத்தியில் நலிந்து செல்லும் நம்பிக்கை - செ. சிறிதரன் - TK Copy வடபகுதி மக்கள் மத்தியில் நலிந்து செல்லும் நம்பிக்கை - செ. சிறிதரன் - TK Copy

  • Latest News

    வடபகுதி மக்கள் மத்தியில் நலிந்து செல்லும் நம்பிக்கை - செ. சிறிதரன்

    பல்வேறு தடைகள் தாமதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட
    தேர்தலின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டிய வடமாகாண சபை பொறுப்புக்களை ஏற்று ஏழு மாதங்களாகின்றன. ஆயினும், இந்தக் காலப்பகுதியில் மாகாண சபையின் செயற்பாடுகளில் மக்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. மாகாண சபையினருக்கும் தமது செயற்பாடுகளில் திருப்தி இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

    மாகாண சபைக்குரிய அதிகாரங்கள், ஆளணி வசதிகள், நிதி வளங்கள் என்பவற்றை வழங்குவதில் இடம்பெற்று வருகின்ற இழுத்தடிப்பும், அரசாங்கத்தி;ன் பாரமுகச் செயற்பாடுகளுமே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. மாகாண சபைகளுக்குரிய அமைப்பு விதிகளுக்கமைவாக வடமாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டிய சாதாரண அதிகாரங்களைக் கூட அரசாங்கம் பகிர்ந்தளிக்கவில்லை. மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்தியிருந்தாலும்கூட, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. ஏனெனில், ஒற்றையாட்சி முறையை மேலும் வலுப்படுத்தி அதிகாரங்கள் முழுதையும் மத்தியில் – கொழும்பில் நிலைகொள்ளச் செய்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. 

    நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் மாகாணசபை செயற்பட்டு வருகின்ற போதிலும், வட மாகாணத்தில் மாத்திரமே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உரமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதிகாரப் பகிர்வு குறித்து வலிறுத்தப்பட்டு வருகின்றது. அதற்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றது என்றுகூடச் சொல்லலாம். வடமாகாண சபையில் மாத்திரமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கின்றது. அதாவது தமிழ் மக்கள் அந்த சபையில் அதிகார பலமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். நாட்டில் உள்ள பெரும்பான்மை இன மக்களைப் போன்று தாங்களும் சமமான அரசியல் உரிமைகளைக் கொண்டவர்களாகத் தமது பிரதேசங்களைத் தாங்களே ஆளத்தக்கவர்களாக இருக்க வேண்டும் என்று கோரி வருகின்றார்கள். 

    அதற்காக நீண்டகாலமாக அவர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றார்கள். ஆனாலும். ஆவர்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய அரசியல் உரிமைகளையும், அரசியல் அதிகாரங்களையும் வழங்குவதற்கு மாறி மாறி ஆட்சி பீடமேறிய ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றார்கள். பெரும்பான்மை பலமே ஜனநாயகத்தில் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது. அந்த பெரும்பான்மை பலத்திற்கே அதிகாரங்கள் யாவும் சொந்தம் என்ற வகையில், ஜனநாயகத்தின் உண்மையான தன்மைகளையும் செயற்படு தளங்களையும் திரிபுபடுத்தி, சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்குத் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார்கள். 

    இத்தகைய பின்னணியில்தான் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள வடமாகாண சபைக்குரிய அதிகாரங்களையும் அரசாங்கம் வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது. வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அரசாங்கக் கட்சிகளும், அரசுக்கு ஆதரவானவர்களுமே ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார்கள். இதனால் அந்த மாகாண சபைகளில் எல்லாம் அதிகாரப் பரவலாக்கல் குறித்து யாரும் எதுவும் பேசுவதில்லை. அரசாங்கத்தில் அதிகார பலமுள்ளவர்களாக இருப்பவர்களின் ஆதரவாளர்கள் அல்லது கட்சியைச் சேர்ந்தவர்களே இந்த மாகாண சபைகளில் உறுப்பினர்களாகவும், மாகாண முதலமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே, தமது மக்களுக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாகாண சபையில்தான் தங்கியிருக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கில்லை. 

    அரசாங்கத் தரப்பு அதிகாரங்களையும், மத்திய அரசின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நேரடி செயற்பாடுகளின் மூலம் அவர்கள் தமது மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத்தக்க அரசியல் வசதிகளைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், வடமாகாண சபையில் அத்தகைய நிலைமைகள் கிடையாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், அதிகார பலமுள்ளவர்களாகவும் இருந்த போதிலும், தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்p செய்வதில் பெரிதாக எதனையும் செய்ய முடியாதவர்களாகவே அவர்கள் இருக்கி;ன்றார்கள். வெறும் அரசியல் அலங்காரப் பொம்மைகளாகவே அவர்கள் காணப்படுகி;ன்றார்கள். இணக்க அரசியல் செய்கின்றோம். 

    அதன் மூலம் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று இவ்வாறானவர்கள் காலம் காலமாகக் கூறி வந்த போதிலும் சாதாரண பிரச்சினைகளுக்குத் தீர்வ காண்பதற்குக் கூட அவர்களால் இயலாமல் இருக்கின்றது. அரசுக்கு தாங்கள் அளித்து வருகின்ற அரசியல் ஆதரவு என்ற பலத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை வளைத்துத் திருப்பி தமக்கு வாக்களித்த மக்களுக்குக்கூட அவர்களால் பெரிதாக எதனையும் செய்ய முடியாமல் உள்ளது. இத்தகைய ஒரு நிலைமையில்தான் வடமாகாண சபை அதிகார பலமற்றதாக, ஆட்சி nhபாறுப்பைக் கையில் கொண்டிருந்தாலும், அதன் முதலமைச்சராகிய விக்னேஸ்வரனும், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் தமிழ் மக்கள் மீள்குடியேற்றத்தில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாதவர்களாக இருக்கின்றார்கள். 

    முதலமைச்சரின் முல்லைத்தீவு விஜயம் வடமாகாண சபை செயற்படத் தொடங்கி ஏழு மாதங்களாகின்ற நிலையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு முதற் தடவையாக விஜயம் செய்து மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்துள்ளார். இங்குள்ள மக்களுடைய குறை நிறைகள், தேவைகள் என்பவற்றை நேரடியாக அவர்களிடமே அவர் கேட்டறிந்துள்ளார். அரசியல் ரீதியாகவும், அதேநேரம், மக்களுக்கு மாகாண சபை ஆற்ற வேண்டிய சேவைகள் என்ன, அவற்றை எப்படியெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது என்ற ரீதியிலும் வடமாகாண முதலமைச்சருடைய இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. 

    வடமாகாண சபையில் சபை உறுப்பினர்கள் போட்டி போட்டுக் கொண்டு, தமது பிரதேச மக்களின் தேவைகள் குறித்த பல பிரேரணைகளைக் கொண்டு வந்துள்ளனர். அநேகமாக இந்தப் பிரேரணகைள் அனைத்தும் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவைபற்றிய விரிவான அறிக்கைகள் செய்தித் தகவல்களாக ஊடகங்களில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகியிருக்கின்றன. ஆயினும் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாகாண சபையினால் எடுக்கப்படவில்லை என்ற குறை வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்ணுற்ற மக்கள் அதாற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாத நிலைமையே காணப்படுகின்றது. 

    பிரேரணைகளை சபையில் கொண்டு வந்த மாகாண சபை உறுப்பினர்களும் இன்னின்ன பிரேரணைகளை சபையில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கின்றோம் என்ற உப்புச் சப்பில்லாத வசனத்தையே பொதுமக்களைச் சந்திக்கும் போது திரும்பத்திரும்ப கூற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இதனால், அவர்களும்கூட திருப்தியற்றவர்களாக பொதுமக்களை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இத்தகைய ஒரு பின்னணியில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் அழைப்பையேற்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

    அவருடன் மாகாண கல்வி அமைச்சர் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரும் முல்லைத்தீவு மாவட்டத்தி;ன் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களும் மற்றும் முதலமைச்சரின் அதிகாரிகளும் ஒட்டுசுட்டான், கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர். ஓட்டுசுட்டான் பகுதியில் உள்ள பாவட்டிமலை தட்டயமலை கல்குவாறி மற்றும் மணல் குவாறிகளினால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன், அயால் கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவர்கள் வெபத்து வீடுகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மக்கள் முறையிட்டிருந்தார்கள். நீண்டகாலமாக யுத்தச் சூழலில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், எறிகணை குண்டு வெடிப்புச் சத்தங்கள், கிளேமோர் குண்டுகள், கைக்குண்டுகள், விமானக் குண்டுகள் என்பவற்றின் ஓசையினால் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமே என்று ஏற்பட்டிருந்த யுத்த காலத்து அச்சம் அதிர்ச்சி என்பவற்றில் இருந்து இந்த மக்கள் இன்னும் பூரணமாக வெளிவரவில்லை. 

    இதற்குரிய முறையான உளவியல் ஆற்றுப்படுத்தல் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த கல்குவாறிகளில் இருந்து எழுகின்ற வெடியோசையும் அதனுடன் கூடிய நில அதிர்வும், இந்த மக்களின் மனங்களில் ஆழ்ந்து கிடக்கின்ற யுத்த காலத்து அச்ச உணர்வும், அதிர்ச்சியும் அவர்கள் அறியாமலே பலதரப்பட்ட வழிகளில் அவர்களுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். எனினும் இந்தப் பகுதிக்கு விஜயம செய்த முதலமைச்சர் குழுவினருக்கு இத்தகைய கல்குவாறிகளை நடத்துபவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகள் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதனால் சுற்றுச் சூழலுக்கும் அயலில் உள்ள மக்களுக்கு எற்பட்டுள்ள ஏனைய புறப்பாதிப்புகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. இருந்த போதிலும், இவற்றினால் அந்தப் பகுதி மக்களுக்கு எற்பட்டுள்ள புறச்சூழல் மற்றும் அகச்சூழல் வழியில் ஏற்பட்டுள்ள முழுமையான பாதிப்புகளை முதலமைச்சர் குழுவினர் புரிந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை. 

    ஆயினும், இந்தப் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்கின்ற ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து அதன் மூலம் இந்தப் பிரச்சினையின் முழு விபரத்தை அறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப் போவதாக முதலமைச்சர் கூறியிருக்கின்றார். அறுதி உறுதி காணிகளுக்கு நேர்ந்துள்ள கதி கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு விஜயம் செய்த முதலமைச்சர் குழுவினர் அந்தப் பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்தப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அவர்களுடைய மீன்பிடி தொழிலுக்கான பாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதும் பற்றி விசேடமாக அந்த மக்கள் கவலையோடும் கண்ணீரோடும் எடுத்துரைத்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் நிரந்தர உறுதிப் பத்திரங்களின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணிகளுக்குரிய பதிவுகளை அவர்கள் வருடந்தோறும் புதுப்பிக்கத் தவறிய காரணத்தினால், அந்தக் காணிப் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டு வேறு ஆட்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்திருப்பதாக இந்தப் பகுதி மக்கள் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்கள். 

    இந்த நிலையில், ஏற்கனவே உறுதி (ழுனுனுந) வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கு புதிதாக இப்போதுள்ள காணி வழங்கல் நடைமுறைக்கு அமைவாக அனுமதிப்பத்திரம் வழங்கி, அந்தக் காணிகளை இந்த மாவட்டத்தைச் சேராதவர்களுக்கு வழங்க முடியுமா? இதற்கு சட்டத்தில் இடமிருக்கின்றதா? என்று முதலமைச்சரிடம் இந்தப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். சட்டத்துறையில் நீண்ட அனுபமுள்ள முதலமைச்சர் இந்த நிலைமை குறித்து தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு சட்டத்துறை சார்ந்த அவர் தீர்வ காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

    இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சட்டத்திற்கு அமைவாக முடிக்குரிய காணிகள் பொதுமக்களுக்கு உறுதிக்காணிகளாக வழங்கப்பட்டதன் பின்னர், அவற்றை இரத்துச் செய்யாமல் இந்த நாட்டு ஜனாதிபதியாக இருந்தாலும்கூட, அந்தக் காணிகளை வேறு எவருக்கும் வழங்க முடியாது என தெரிவித்தார். அத்துடன் இந்த மக்கள் அறியாத வகையில் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்தக் காணிகளின் உறுதிகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார். இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் காணிகள் குறிப்பாக விவசாயக் காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டிருக்கின்றன. 

    காலம் காலமாக இந்;த மக்கள் விவசாயத்தையே தமது ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டிருந்த காணிகள், அவர்கள் இல்லாத நேரத்தி;ல் அவர்கள் அறியாத வகையில் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. தமது குடியிருப்புக்காகவும், ஜீவனோபாயத்திற்காகவும் ஒரு நாட்டில் மக்கள் காணிகளை உடைமையாகக் கொண்டிருப்பது இயற்கை நீதியின்பாற்பட்ட உரிமையாகும். வாழ்வதற்காக மக்கள் காணிகளைக் கொண்டிருப்பது அவர்களின் இறைமையாகும். அதனை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஒரு ஜனநாயக அரசு அவற்றை அபகரிக்கவோ அல்லது, , அந்தக் காணிகளில் இருந்து அவர்களை வெளியேற்றவோ ஒருபோதும் முயற்சிக்க மாட்டாது. 

    அதிகாரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கின்ற சர்வாதிகார ஆட்சியுள்ள நாடுகளிலேயே இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறும். ஏனெனில் சர்வாதிகாரிகள் மக்களின் உரிமைகள், இறைமை என்பவற்றைக்குறித்து எண்ணிப்பார்ப்பதுமில்லை. அது குறித்து அவர்கள் அக்கறை கொள்வதுமில்லை. ஜனநாயக நாட்டில் இறைமை என்பது மக்களுக்குரியது. இயற்கை முறையின்படி, அவர்களுக்கே காணிகளின் ஆட்சியுரிமை உண்டு. ஜனநாயக முறைப்படி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமானது மக்களினதும், மண்ணினதும் காவலனாக இருக்க முடியுமே தவிர, அவற்றுக்கு உரிமையோ சொந்தமோ கொண்டாட முடியாது. ஏனெனில் அரசு என்பது மக்களால் தெரிவு செய்யப்படுவதாகும். 

    எனவே மக்களுக்கு சேவை – சேவகம் செய்வதே ஜனநாயக அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கம் என்பதற்காக மக்களை அடிமைப்படுத்தவோ, அவர்களின் உரிமைகளில் தலையிடுவதற்கோ ஜனநாயக நாட்டின் அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை. உரிமையுமில்லை. இதுபோன்ற பல விடயங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சுட்டிக்காட்டத்தக்க வகையில் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பிரதேசத்து மக்கள் முதலமைச்சர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். மாகாண சபையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் என்ன செய்யப் போகின்றன? தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து வடபகுதி மக்கள் மாகாணசபையைப் பெரிதும் நம்பியிருந்தார்கள். 

    தேர்தல் காலத்தில் வடக்கில் இருந்து இராணுத்தை வெளியேற்றப் போவதாகவும், அதற்காக மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வகையில் கூட்டமைப்பினர் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர். இந்தத் தேர்தல் பிரசாரங்களை முதலமைச்சரிடம் நினைவூட்டிய இந்தப் பகுதி மக்கள் இதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பி;யிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் மாகாண சபையையும் மக்கள் மலைபோல நம்பியிருந்தார்கள் என்பதை நேரடியாகத் தெரிவி;த்த மக்கள் தாங்கள் நில ஆக்கிரமிப்பு, தமது வணக்கத்தலங்களின் ஆக்கிரமிப்பு என்பவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதற்கு எதிராக தமிழ்த்தேசிய கூட்டமைப்போ அல்லது மாகாண சபையோ ஆக்கபூர்வமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். 

    முதலமைச்சருடனான மக்கள் சந்திப்பின்போது கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஜோய் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், ‘நாளாந்தம் இந்தப் பகுதியில் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்ருக்கின்றன. மக்கள் நிம்மதியிழந்து இருக்கின்றார்கள். பிரச்சினைகளுக்கு எமது பிரதிநிதிகள் தீர்வு காண்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால் இப்போது தங்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் எடுத்துக் கூறி, மக்கள் களைப்படைந்திருக்கி;ன்றார்கள். எல்லோரிடமும் பிரச்சினைகளை எடுத்துக் கூறியுள்ள போதிலும், அவர்கள் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாததால், இனி எவரிடமும் தங்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசுவதில் பயனேதும் இல்லை என்று அலுத்துப் போயிருக்கின்றார்கள். 

    தமது அரசியல் தலைமைகள் மீது கொண்டிருந்த நம்பிக்கை கருகி, காய்ந்து சுருங்கிப் போயிருக்கின்றது’ என்று மிகுந்த ஏமாற்ற உணர்வோடு; கவலையோடும் எடுத்துக் கூறினார். ‘இந்த நிலைமையைத் தொடர்வதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது. மக்கள் நாளாந்தம் படுகின்ற கஸ்டங்களுக்குத் தீர்வு காண்பதற்கு தங்களிடம் அதிகாரமில்லை. செய்வதற்கு வழியேதும் இல்லை என்று அரசியல்வாதிகள் வெறுமனே சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் அதிகாரமற்றவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், மோசமடைந்து செல்கின்ற மக்களின் நிலைமையில் சிறியதோர் மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும். 

    அதற்காக மாகாண முதலமைச்சரும், மாகாண சபையிரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் ஏதாவது செய்தே ஆக வேண்டும்’ என்று அருட் தந்தை ஜோய் பெர்னாண்டோ வலியுறுத்தி கூறினார். அருட் தந்தை ஜோய் பெர்னாண்டோ மட்டுமல்ல, முதலமைச்சர் குழுவினர் விஜயம் செய்திருந்த கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் இதே கருத்தைத்தான் மறைமுகமாகவும் வேறு வேறு வார்த்தைகளின் ஊடாகவும், பல்வேறுபட்ட உணர்வுகளின் மூலமாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள். இவற்றை நன்றாகப் புரிந்து கொண்டதாக முதலமைச்சர் அந்த மக்கள் மத்தியில் உரையாற்றியபோது குறிப்பிட்டார். 

    இருந்த போதிலும், இதுபோன்று பல்வேறு பிரச்ச்pனைகளில் உழன்று கொண்டிருக்கின்ற வடபகுதி மக்கள் மத்தி;யில் நலிந்து செல்கின்ற நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கு மாகாண சபையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் என்ன செய்யப் போகின்றன என்பது தெரியவில்லை. ஏதாவது உடனடியாகச் செய்வார்களா?
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: வடபகுதி மக்கள் மத்தியில் நலிந்து செல்லும் நம்பிக்கை - செ. சிறிதரன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top