சிறுவர்களை கதைக்கள ஹீரோக்களாகக் கொண்டு வெற்றியடைந்த படங்களின் வரிசையில் ’பூவரசம் பீப்பீ’ திரைப்படமும் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மிஷ்கின், சமுத்திரக்கனியிடம் அசிஸ்டண்டாக பணியாற்றிய ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனரின் படைப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தில் கௌரவ் கலை, ப்ரவீன் கிஷோர், வசந்த், வர்ஷினி, அகல்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, சமுத்திரக்கனி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
6-ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வை எழுதிமுடித்து விடுமுறையைக் கொண்டாடுகிறார்கள் ஹரிஷ்(ஆண்டனா), வேலுக்கண்ணா, கபில்தேவ் ஆகிய நண்பர்கள். ஹரிஷ் வகுப்பில் முதல் மாணவனாகவும், அறிவியல் ஆர்வம் உள்ளவனாகவும் இருக்கிறான். வேலுக்கண்ணா சுமாராக படித்தாலும் ஸ்போர்ட்ஸில் திறமை மிக்கவனாகவும், தீயணைப்பு வீரனாக வரவேண்டும் என்ற ஆசையுடனும் இருக்கிறான். கபில்தேவ் வகுப்பில் சரியாக படிக்காத மாணவர்களில் ஒருவன்.
காலையில் விளையாடக் கிளம்பிச் சென்றால் எப்போது வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. பொன்வண்டை பிடித்து டப்பாவில் அடைத்து சந்தையில் விற்று காசாக்கி, ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டு ஊரைச் சுற்றித் திரியும் சிறுவர்கள் ஒருநாள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, ஆற்றின் ஓரத்தில் உள்ள மோட்டார் ரூமில் ஒரு பெண் கற்பழிக்கப்படுவதைப் பார்த்துவிடுகிறார்கள். கொடூர காட்சியினைக் கண்ட பாதிப்பால் அமைதியாக வீட்டிற்குச் சென்றுவிடும் சிறுவர்களுக்கு, அந்தப்பெண் இறந்துவிட்ட செய்தி மறுநாள் காலை தான் தெரிகிறது. சலவைத் தொழில் செய்து வந்த பெண் மழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டால் என்று போலிஸ் கேஸை முடித்துவிட, தவறு செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என துடிக்கிறது நடந்தது கொலை என்று அறிந்த சிறுவர்களின் மனது.
சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கும் ஆதாரத்தை வைத்து, நான்கு குற்றவாளிகளில் மூவரை கண்டுபிடிக்கிறார்கள் சிறுவர்கள். மேலும் அவர்கள் செய்த குற்றத்தைப் பற்றி பேசுவதை ஹெலிகாப்டர் ஸ்பை கேமரா மூலம் பதிவு செய்கிறான் ஹரிஷ். தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க, போலிஸுக்கு நெருக்கமான தங்கள் கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் கொடுக்கச் செல்லும்போது தான் தங்களது ஆசிரியர் தான் அந்த நாலாவது குற்றவாளி என்பது சிறுவர்களுக்கு தெரிய வருகிறது. அரசியல் பலம், ஆல் பலம் இவற்றையெல்லாம் மீறி குற்றவாளிகளுக்கு சிறுவர்கள் எப்படி தண்டனை வாங்கித் தருகிறார்கள் என்பது மீதிக்கதை.
சிறுவர்களாக நடித்துள்ள மூவருமே பாராட்டுதல்களுக்கு உரியவர்கள். வசந்த் ஆரண்ய காண்டம், வெயில் ஆகிய படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும், மற்ற சிறுவர்கள் இருவருமே நடிப்பிற்கு புதியவர்கள். அனால் புதியவர்கள் என்று தெரியாத விதத்தில் அவர்கள் நடித்திருப்பதும், இயக்குனர் நடிக்க வைத்திருப்பதும் படத்திற்கு பலம். காதல் காட்சிகளில் வேலுக்கண்ணா கொடுக்கும் ரியாக்ஷன் நம் முகத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது. வேலுக்கண்ணாவின் காதலியாக வரும் சிறுமி கொள்ளை அழகு.
அருள்தேவ் இசையில் ’கொ கொ கொ’ பாடல் நம்மையும் சிறுவர்களாக மாற்றுகிறது. ’என் உலகம் நீதானே நண்பா’ என்ற பாடல் அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய பாடலாக இருக்கிறது. தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். திரையில் தோன்றும் வாய்க்கால் வரப்புகளும், ஆறும் கிணறும், விண்ட்மில்லும், மொட்டைப் பாறைகளும் நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் எதையோ நினைவுபடுத்துகிறது.
திரைக்கதை சோர்வடையும் சமயங்களில் சிறுவர்களின் அட்டகாசமான சேட்டைகளை நுழைத்து தன் திறமையை நிரூபித்துவிட்டார் ஹலிதா ஷமீம். வீட்டை விட்டு வெளியே செல்லும் சிறுவர்கள் எந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளுக்குள் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை அருமையாக பதிவு செய்திருக்கிறார். தனக்கு முந்தைய தலைமுறையும், அதற்கு முந்தைய தலைமுறையும் செய்யும் தவறுகளைக் கண்டு சிறுவர்கள் மனம் கொதிப்பது நியாயம். ஆனால் அந்த சிறு வயதில் அவர்கள் காதலிப்பது, காதலுக்காக அடித்துக்கொள்வது போன்ற காட்சிகளும் இருப்பது நெருடல்.
அப்பா குடித்துவிட்டு ரோட்டில் இருப்பதை கண்டதும் ’என் அப்பா குடிகார நாய். நான் ஒரு படிக்காத நாய்’ என கபில் அழும்போது நமது மனமும் கனமாகி தந்தை குடிப்பதால் குழந்தைகள் மனம் எவ்வாறு காயப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. ’உனக்காவது பரவால்லடா உன் அப்பா குடிச்சிட்டு வந்து ஏதாவது பேசுறாரு. என் அப்பா என் கிட்ட பேசுறது கூட இல்லடா. ஏதாவது வேலை செஞ்சிகிட்டே இருக்காரே தவிர எதுவுமே பேசமாட்டாருடா’ என்று ஹரிஷ் கவலையுடன் சொல்வது, பள்ளிகளில் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு நேரமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு சவுக்கடி.
சீரியஸ் காட்சிகளை தவிர்த்து, சிறுவர்கள் சேட்டை செய்யும் காட்சிகளில் படம் பார்ப்பவரையும் சிறுவர்களாக மாற்றிவிடக் கூடியது பூவரசம் பீப்பீ. கோடை விடுமுறைக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் சென்று தாராளமாக பார்க்கலாம்.