இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையிலான
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களும் சிரேஷ்ட வீரர்களுமான மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காரவும் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் விளையாடும் கடைசி டெஸ்ட் கிரிக்கட் போட்டியாக இது அமையவுள்ளது.
இங்கிலாந்தில் முதல் தடவையாக இலங்கை டெஸ்ட் அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸ் தலைமை தாங்கவுள்ளார். நாளைய போட்டியில் இலங்கையின் இறுதி அணியில் வேகப்பந்துவீச்சில் இருவரையா, மூவரையா இடம்பெறச் செய்வது என்பது குறித்து ஆடுகளத்தின் தன்மையை இன்று ஆராய்ந்த பின்னர் தெரிவாளர்கள் தீர்மானிக்கவுள்ளனர். எவ்வாறாயினும் சுழல்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் அணியில் இடம்பெறுவது உறுதி எனத் தெரிகின்றது.
இலங்கையின் துடுப்பாட்டம் திமுத் கருணாரத்ன- கௌஷால் சில்வா- மஹேல ஜயவர்தன- குமார் சங்கக்கார- லஹிரு திரிமான்ன- ஏஞ்சலோ மெத்யூஸ்- விக்கட் காப்பாளர் ப்ரசன்ன ஜயவர்தன ஆகியோரால் பலப்படுத்தப்படவுள்ளது.
இவர்களைவிட வேகப்பந்து வீச்சாளர்களான ஷமிந்த எரங்க- நுவன் ப்ரதீப்- நுவன் குலசேகர- சானக்க வெலகெதர- தம்மிக ப்ரசாத் ஆகியோரில் இருவர் அல்லது மூவர் இறுதி அணியில் இடம்பெறுவர். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் அணியில் இடம்பெற்றால் இரண்டாவது சுழல்பந்துவீச்சாளராக சகலதுறை வீரர் டில்ருவன் பெரேராவுக்கு அணியில் இடம்கிடைக்க வாய்ப்பு உள்ளது.