நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக படையினரின் ஒழுங்கமைப்பில் மாற்றுப் போராட்டம் ஒன்றினை நடத்துவதற்கு முயன்ற சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனை தாக்க முற்பட்டதுடன், அங்கே பாதுகாப்பு கடமையிலிருந்து பொலிஸார் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்டுள்ளார்.
இன்றைய தினம் காலை 9மணிக்கு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம் பகுதிகளிலிருந்து பெருமளவு மக்கள் படையினரால் பேருந்துகளில் ஒழுங்க மைத்து ஏற்றிவரப்பட்டிருந்தனர். அவர்கள் காணாமல்போனவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை குழப்ப முற்பட்டதுடன், போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களை அவதூறாகப் பேசியதுடன் பெரும் கூச்சலிட்டுக் கத்திக் கொண்டு நின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அந்த இடத்திற்கு அவர்களுடன் பேச சென்றிருந்த நிலையில் அங்கிருந்த முதியவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்டார். இந்நிலையில் பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் பொலிஸார் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரின் தோளில் கைபோட்டு இழுத்தமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் அந்த பொலிஸாருடன் தர்க்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய தொப்பியையும், துப்பாக்கியையும் கொடுத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முயன்றார்.
எனினும் அதற்குள் அங்கிருந்த ஏனைய பொலிஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர் ஆகியோர் குறித்த முரண்பாட்டை தடுத்துவிட்டனர். இதனையடுத்து குறித்த பொலிஸார் தன்னுடைய அடையாள இலக்கத்தை கழற்றிவிட்டு அப்பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தார். முல்லைத்தீவில் புலனாய்வாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இன்று காலை காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு நேற்றுமுதல் இராணுவ புலனாய்வாளர்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, இருந்த நிலையில் இன்று அவற்றை தகர்த்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முல்லை மண்ணில் காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணாமல் போனவர்கள் தொடர்பில் வழக்கு விசாரணை ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில், அவ் உறவுகளின் குரல்களை பலப்படுத்தும் வகையில் இன்று முல்லைத்தீவு கச்சேரிக்கு அண்மையாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
காணாமல் போனோருக்கான ஆர்ப்பாட்டம் ஒன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் தலைமையில் நீதிமன்றத்திற்கு முன்னர் நடாத்த இருப்பதாகவும் அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் முன்னர் பொலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற இருந்த கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு முல்லைத்தீவில் ரவிகரன் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த காணாமல் போனோரின் உறவுகளுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக ரவிகரனுக்கும் அனந்தி சசிதரனுக்கும் மக்கள் தகவல்களை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் இராணுவப் புலனாய்வாளர்களின் முயற்சிகளை தகர்க்கும் பொருட்டு, முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டும் அவர்களையும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முயற்சிகளை முன்னெடுத்தார். இதனையடுத்து, இன்று காலை இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே ஆங்காங்கே இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு நிகழ்வுகளை அவதானிக்க விடப்பட்டிருந்தனர். அவர்களின் அழுத்தங்களை மீறியதாய் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காணாமல் போன உறவுகளுக்காய் குரல் கொடுத்து தமது கவலையினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், ரவிகரன், சிவாஜிலிங்கம், அன்ரனி ஜெகநாதன், மேரி கமலா குணசீலன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோருடன் வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் விதத்தில் இரண்டு பேரூந்து வண்டிகளில் மக்கள் வருவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கைகள் அவர்களால் ஏற்படுத்தப்பட அங்கு அவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
பின்னர் பொலிசாரின் கட்டுப்பாட்டில் குழப்ப வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட மீண்டும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து சுரேஸ் பிரேமச்சந்திரன், அன்ரனி ஜெகநாதன், சிவாஜிலிங்கம், கஜேந்திரன், ரவிகரன் ஆகியோர் தமது உரைகளையாற்றி 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தனர்.