இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள், இணையதளங்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன.
அதில், ''மோடியை சந்தித்து விட்டு இலங்கை திரும்பிய ராஜபக்ச வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஏதோ என்னை நட்பு ரீதியாகத்தான் அழைத்தார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை மரியாதையாக நடத்தவில்லை.
இதற்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
முதல் சந்திப்பிலேயே நம்மை இப்படி நடத்துகிறார் என்றால், ஒரு வருடத்தில் நம்மை இருக்கும் இடம் தெரியாமல் இவர் செய்துவிடுவார்.
எந்த இந்தியரையும் நாம் நம்பக் கூடாது’ என்று பொருமினாராம் ராஜபக்ச என்று சொல்லப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருந்துபசாரம் ரத்து - கழுகார் பதில்கள் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்வி - பதில்
ராஜபக்சவின் டெல்லி வருகையை எதிர்த்து, டெல்லி சென்று வைகோ போராட்டம் நடத்தினாரே... அதன் பயன் என்ன?
'ராஜபக்ச இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் கறுப்புக் கொடி காட்டப்படும்’ என்று வைகோ அறிவித்து இருந்தார். அதன்படி இந்தப் போராட்டமும் நடத்தப்பட்டு இருக்கிறது.
சார்க் நாடுகளின் அனைத்து தலைவர்களையும் அழைக்கிறோம் என்று மத்திய அரசு அதிகாரிகள் இதற்குக் காரணம் சொன்னார்கள். இந்த எதிர்ப்புகள் காரணமாக ராஜபக்சவின் வருகையைத் தடுக்க முடியவில்லை என்பது உண்மைதான்.
ஆனால், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மறுதினம் ராஜபக்ச உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை கடைசி நேரத்தில் பிரதமர் மோடி, ரத்து செய்துவிட்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விருந்து ரத்து செய்யப்படுகிறது என்று சொல்லப்பட்டது. உண்மையான காரணம, 'இப்படி ஒரு விருந்து நடப்பது விமர்சனங்களை இன்னும் அதிகமாக்கும்’ என்று அவர் நினைத்ததாக டெல்லி அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது.
வைகோ, பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், ம.க.இ.க மற்றும் பல்வேறு இயக்கத்தினர் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, கருணாநிதி வெளியிட்ட கருத்து... 'ஈழப்பிரச்னையை பக்குவமாகக் கையாள வேண்டும்’ என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.