முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு சிங்கப்பூரில்
தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கப் படையினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு இவ்வாறு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 40 முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க விரும்புவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜயதிலக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, 132 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கே தற்போது புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற போது, 12000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்தும், கைதுசெய்யப்பட்டும் இருந்ததாக புனவர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் தற்போது 132 பேர் தற்போது வவுனியா முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புனர்வாழ்வளிக்கப்பட்ட குழுவினர் சமூகத்தில் இணைக்கப்பட்டதாகவும், அடுத்த குழு ஜூன் மாதம் விடுவிக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட, 230 பேர் உயர் கல்வியைத் தொடர தகுதி பெற்றுள்ளதாகவும், பல்கலைக்கழகங்களில் 35 பேர் உயர்கல்வியை தொடர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.