புயலோடு சில நிமிடங்கள்…
சம்பவம்: 1பெருந்தலைவர் காமராஜர் முதல்வரான நேரம். ஆறு மாதக் காலத்துக்குள் தேர்தலில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய நிலை. குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் பெருந்தலைவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தோழர் கோதண்டராமன் களத்தில் நிற்கிறார். முதலமைச்சர் என்பதால் பெருந்தலைவரின் வெற்றி சுலபத்தில் சாத்தியமாகிற சூழல். ஒரு நாள் பரப்புரையின்போது மக்கள் பெரிதாகத் திரண்டுவந்து, ‘‘எங்க ஊருக்குப் பாலம் கட்டிக் கொடுங்க…’’ என்றார்கள் பெருந்தலைவரிடம். ‘‘அதெல்லாம் முடியாதுண்ணே…’’ என செவிட்டில் அடித்தாற்போல் சொல்லி, நடையைக் கட்டிவிட்டார் பெருந்தலைவர்.
அவருடைய ஆதரவாளர்களுக்குப் பேரதிர்ச்சி. ‘‘பாலத்தைக் கட்டிக் கொடுப்பேன்னு நீங்க சொல்லியிருந்தால் அந்தப் பகுதி மக்களோட ஓட்டு அவ்வளவும் உங்களுக்கே விழுந்திருக்கும்’’ என வருத்தத்தோடு சொன்னார்கள் அவர்கள். அதற்குப் பெருந்தலைவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘என்னண்ணே பைத்தியக்காரத்தனமா இருக்கு. நான் ஒரு செயலைச் செஞ்சு கொடுப்பேன்னு என்னோட பதவியைப் பயன்படுத்தி வாக்குறுதி கொடுப்பதும் ஒருவிதத்தில் மறைமுகமான லஞ்சம்தாண்ணே. என்கிட்ட முதலமைச்சர் பதவி இருக்கு. அதனால பாலத்தைக் கட்டித் தாரேன்னு சொல்லிடலாம். ஆனா, என்னை எதிர்த்துப் போட்டியிடுற தோழருக்கு என்ன இருக்கு? அதை யோசிக்கணுமில்ல…’’ சம்பவம்: 2 கடந்த வாரம்… விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட சின்ன தாதம்பட்டியில் தீவிர பரப்புரையில் இருக்கிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான அண்ணன் வைகோ. அப்போது பேச்சியம்மாள் என்கிற மாணவி, ‘‘நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன். என்னுடைய மேற்படிப்புக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?’’ எனக் கேட்கிறார்.
உடனே தனது உதவியாளருடைய அலைபேசி எண்ணைக் குறித்துக் கொடுத்து, ‘‘தேர்வு முடிவு வந்ததும் இந்த எண்ணுக்கு அழையுங்கள். நானே உங்களுக்குக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுக்கிறேன்.’’ எனச் சொல்லி இருக்கிறார் அண்ணன் வைகோ. இந்த செய்தி முக்கியமான ஒரு புலனாய்பு இதழில் புகைப்படத்துடன் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு சம்பவங்கள் குறித்தும் நான் ஏதும் ஒப்பீடு செய்யப் போவதில்லை. அதை உங்களின் விருப்பத்துக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், காமராஜர் என்கிற மாபெரும் மனிதர் வாழ்ந்தது ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்ல. நம் அப்பன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வாழ்வியல் நெறியாளர்தான் அவர். அரசியலில் அந்த மாமனிதன் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. அதற்காகத் தமிழகம் அவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடவில்லை. சொந்தத் தொகுதியிலேயே மண்ணைக் கவ்வுகிற நிலைக்கு அந்தத் தலைவன் ஆளாகப்பட்டார்.
ஆனாலும், அந்தத் தோல்விகூட பிழைப்புத்தனங்களை அந்தப் பெருந்தலைவனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. கடைசி காலம் வரை தன் இயல்பு மாறாத, நெறி பிறழாதத் தலைவனாகவே அவர் வாழ்ந்தார். ஆனால், இப்போதைய சூழலில் அரசியல் எப்படி இருக்கிறது? வெற்றியாளர்களை மட்டுமே அரசியல் தனது விளையாட்டு மைதானத்துக்குள் வைத்திருக்கிறது. சுய மரியாதை, ஞானம், ஒழுக்கம், திறமை என மெச்சத்தக்க அத்தனையும் இருந்தாலும், வெற்றி இல்லாவிட்டால் ‘வெளியே போ’ என விரட்டுகிற இக்கட்டே இன்றைய அரசியலில் நிலவுகிறது! தங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் வெற்றிக்காக, எவற்றையெல்லாம் இழக்கக்கூடாதோ…! அவை அனைத்தையும் இழந்து வெறிபிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நம் தலைவர்கள். அரசியல் அரங்கில் பத்தோடு பதினொன்றாக நிறைந்திருந்தவர்கள் பலரும் நிறம் மாறும் பச்சோந்திகளாக மாறிப்போனதில் அவ்வளவாக ஆச்சர்யமில்லை.
ஆனால், நாம் யாரை வாழ்வியல் வடிவமாக வரித்துக் கொண்டோமோ, யாருடைய உரைகளைக் கேட்டு உள்ளத்துக்குள் வைராக்கியம் பெருக்கினோமோ, ஒப்பற்ற தலைவனாக மனதுக்குள் யாரைத் தூக்கிச் சுமந்தோமோ…! அவர்கள் தலைகீழாக மாறி நிற்கும் அவலத்தை நாம் எப்படி சகிக்க முடியும்? கண்ணியக் கடமையாளனாக & திருப்புமுனை நாயகனாக & கடைசி நம்பிக்கையாக நாம் யார் பின்னால் ஓடினோமோ, அந்தத் தலைவன் நிறம் மாறி நிற்கும் கோலத்தை யாருடைய நெஞ்சம்தான் ஏற்கும்? இன்னும் என்ன பூடகப் புலம்பல்? புரட்சிப் புயலாக எங்களின் இதயம் உலுக்கிய இனமான அண்ணனே…! உங்களின் பின்னால் ஓடிக் களைத்தவனாக ஒரு சில நிமிடங்கள் நான் உங்களோடு பேச வேண்டும். வை.கோபாலசாமி என்கிற பெயர் எங்களுக்குள் நிகழ்த்திய பிரளயத்தை வேறு எந்தத் தலைவனும் இளைய தலைமுறை இதயங்களுக்குள் நிகழ்த்தியதில்லை.
கம்பீரமும் கணீர் குரலுமாய்க் கறுப்புத் துண்டை இழுத்துவிட்டபடி நீங்கள் உரையாற்றுகிற மேடைகளில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த மூர்க்கத்தன ஆதரவாளர்கள் நாங்கள். சட்டைப் பையில் தலைவர் பிரபாகரனின் படமும், உங்களின் படமும்தான் எப்போதும் இருக்கும். இதயத்துக்கு அருகாமையில் உங்கள் இருவரையும் சுமந்து, உள்ளத்து உணர்வு குன்றாமல் பார்த்துக் கொண்டவர்கள் நாங்கள். ஈழம் என்கிற வார்த்தையைச் சொல்வதற்கான தைரியமும், தகுதியும் உங்கள் நாவுக்கு மட்டுமே உண்டு என்பது எங்களின் அன்றைய நம்பிக்கை. ஈழப் பயணம் முடித்து நீங்கள் தாய்த் தமிழகத்துக்குத் திரும்பியபோது ‘தலைவனைக் கண்ட தலைவனாக’ நாங்கள் உங்களைக் கொண்டாடிக் களித்தோம். ஆனால், உங்களின் ஈழப் பயணமே கட்சிக்குள் எதிர்மறையாகி உங்களைக் கட்சியை விட்டே நீக்குகிற நிலையானபோது, தீக்குளித்து மடிந்த இடிமலை உதயனுக்கு நிகரான பரிதவிப்பில் உங்களின் கால்களைச் சுற்றிக் கிடந்தவர்கள் நாங்கள்.
அப்பா மணிவண்ணன் ‘அமைதிப்படை’ படம் எடுக்கும்போது அதன் முக்கிய பாத்திரத்துக்கு கோபால்சாமி எனப் பெயர் சூட்டி எங்களின் சகோதரன் செல்வபாரதியை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்தப் பெயரை நீக்கச் சொல்லி எங்களுக்கு நெருக்கடி. ‘படத்தில் இருந்துதானே அந்தப் பெயரை நீக்க முடியும்? இதயம் முழுக்க எழுதி வைத்திருக்கிறோமே…! அதை என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டுத்தான் அந்தப் பெயரை நீக்கினோம். தனித்துக் கிளம்பிய உங்களின் பின்னால் பசித்துக் கிளம்பினோம். நாங்கள் மட்டுமல்ல… அ.தி.மு.க&வுக்கும், தி.மு.க-வுக்கும் மாற்று தேடிய மனங்கள் யாவுமே உங்களின் பின்னால்தான் அணிவகுத்தன. தமிழகத்தில் எந்தத் தலைவனுக்கும் கிடைக்காத வானளாவிய வரவேற்பும், திகைக்க வைக்கும் பெரும் கூட்டமும் உங்களுக்கு மட்டுமே வாய்த்தது.
அண்ணா வழியில் மக்கள் உத்தரவிடும் வரை சமூக இயக்கமாக இருப்போம் என ஆவேசமாய் முழங்கிய நீங்கள், ஆறே மாதத்தில் அ.தி.மு.க&வுடன் கூட்டணி DSC_9682 அமைத்தீர்கள். மழைகொட்ட வருகிற மேகம் திசைகெட்டுப் போன தவிப்பில், சட்டைப் பையில் இருந்த உங்களை அன்றைக்குத்தான் வேதனையோடு வெளியே எடுத்துப் போட்டோம். ஆனாலும், உங்கள் மீதான அன்பு குறையவில்லை. ‘கருணாநிதியை எதிர்க்கத்தான் அம்மையாரோடு கூட்டணி’ என உங்களவர்கள் சொன்ன அரசியல் சாதுர்யத்தையும் சகித்துக் கொண்டோம். ஆனால், அடுத்த சில திருப்பங்களில் எந்த கருணாநிதி உங்களைத் துரோகி எனச் சொல்லித் தூக்கி வீசினாரோ…! அவரிடமே போய் நின்றீர்கள். ‘இவர் இல்லை என்றால் எவர்?’, ‘இப்போது இல்லை என்றால் எப்போது?’ என அண்ணா அறிவாலயத்தில் உணர்வு பீறிடப் பேசினீர்களே அண்ணா…! அப்போது முன் வரிசையில் உட்கார்ந்து உங்களின் மாற்றத்தைப் பார்த்து மனம் பதைத்தவன் நான்.
‘கருணாநிதியை எதிர்த்தவர்களுக்கே எதிர்காலம்’ என்கிற வாய்ப்பு எப்படி மரியாதைக்குரிய எம்.ஜி.ஆருக்கு வாய்த்ததோ…! அதே வாய்ப்பைத்தான் வரலாறு உங்களுக்கும் வழங்கியது. ஆனால், அதனைத் தக்கபடி பயன்படுத்த நீங்கள் தவறிவிட்டீர்களே அண்ணா? உங்களுக்கு எதிரிகள் என்று எவருமே இல்லை. எதிரி யார் எனத் தேடிப் பார்த்தால் நிலைக் கண்ணாடியில் நிச்சயம் நீங்கள்தான் தெரிவீர்கள். ஆமாம், உங்களுக்கு எதிரி நீங்களேதான்! தேர்தல் நெருங்குகிற நேரத்தில் எல்லாம் நீங்கள் எடுக்கிற நிலைப்பாடு என்றைக்காவது சரியாக இருந்திருக்கிறதா அண்ணா? அ.தி.மு.க.வோடும், தி.மு.க.வோடும் மாறி மாறி கூட்டணி வைத்தும், அவர்கள் அவமானப்படுத்திய சூழலில் தேர்தல் புறக்கணிப்பு செய்தும் கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த நிலைப்பாட்டை நீங்களே நினைத்துப் பாருங்கள்.
பேருந்து கிளம்புவதற்கு முன்னரே துண்டுபோட்டு இடம் பிடிக்கும் ஆளாக இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் நீங்கள் காட்டிய வாஞ்சையும் பேரன்பும் எந்தவிதத்தில் அண்ணா நியாயம்? மதசார்பின்மையை தீர்க்கமான கொள்கையாக மனதுக்குள் வரித்திருக்கும் நீங்களா பாரதிய ஜனதாவுடன் பந்தியில் அமர்ந்தீர்கள்? ‘காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி’ எனச் சொல்கிறீர்களே…! இனத்தை அழிக்கும் போர் ஈழத்தில் நடந்தபோது அதே காங்கிரஸ் கூட்டணியில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மௌனம் காத்தீர்களே…! அது ஏன் அண்ணா? காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கருணாநிதியும், அய்யா ராமதாசும் அன்றைக்கு ஈழத்துக் கொடுமையைக் கண்டித்து வெளியே வராததில் விசித்திரம் இல்லை.
அவர்களுக்குப் பதவிக்குப் பிறகுதான் இனமும் ஈழமும். ஆனால், ஈழத்து இதயக்கூடாக உங்களை வடிவமைத்து வைத்திருக்கும் நீங்கள் அன்றைக்கு இதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்த உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்திருக்கலாமே…! இன்றைக்கு நடக்கிற தெலுங்கானா பிரிப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆந்திர மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியைத் துச்சமெனத் தூக்கிவீசி நாடாளுமன்றத்தையே திகைக்க வைத்தார்களே…! மாநிலப் பிரிப்புக்கே அவர்கள் அப்படி கொந்தளிக்கையில் இனத்தின் எரிப்புக்கு நீங்கள் ஏதுமற்று நின்றது ஏன் அண்ணா? காங்கிரஸுக்குப் பாடம் புகட்ட நினைத்திருந்தால் அன்றைக்குத்தானே அண்ணா நீங்கள் போர்ப்பரணி பாடியிருக்க வேண்டும்.
பதவி இருந்தபோது மௌனம் சுமந்த நீங்கள் இன்றைக்கு ஏதுமற்றவராக நின்றுகொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆள் பிடித்துக்கொண்டு அலைகிறீர்களே…! ‘காங்கிரஸை வீழ்த்தியே தீருவோம்’ என வீறுகொண்டு கிளம்புகிறீர்களே…! தமிழகத்தில் காங்கிரஸின் நிலை என்னவென்று சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியுமே அண்ணா…! செத்த பாம்பை அடிக்க ஊரைத் திரட்டி ஓடி வருகிறீர்களே…! இது உங்களுக்கே நகைப்பை உண்டாக்கவில்லையா? கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன என்பது நினைவிருக்கிறதா? அ.தி.மு.க. கழுத்தை அறுத்த கணத்தில் உங்களின் மறைமுக ஆதரவு இதே காங்கிரஸுக்கும், தி.மு.க.வுக்கும் திரும்பியதை மறுக்க முடியுமா? ‘ம.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எங்கள் கூட்டணியை ஆதரித்துப் பணியாற்றுகிறார்கள்’ எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தபோது, அதை மறுத்து நீங்கள் அறிக்கை ஏதும் வெளியிட்டீர்களா என்ன? அன்றைய ம.தி.மு.க&வின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், இன்றைய அ.தி.மு.க&வின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளருமான நாஞ்சில் சம்பத், ‘கனி எவ்வளவு கனிந்தால் என்ன… கை எப்பக்கம் எழுந்தால் என்ன… சூரியன் எத்திசை உதித்தால் என்ன… இலை கருகினால் போதும்’ என முழங்கினாரே…! அதை ஏன் அண்ணா நீங்கள் கண்டிக்கவில்லை? காங்கிரஸைக் கருவறுக்க அன்றைக்கு நாங்கள்தானே அண்ணா களத்தில் நின்று போராடினோம்.
காங்கிரஸ் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தொண்டைத் தண்ணீர் வற்ற பரப்புரை செய்தோம்; தோற்கடித்தும் காட்டினோம். இன்றைக்கு காங்கிரஸை வீழ்த்தியே தீர இப்படி கூட்டணி போட்டுக் கிளம்புகிறீர்களே…! களத்தில் உங்களோடு சண்டையிட காங்கிரஸ் என்கிற ஒரு கட்சி இருக்கிறதா அண்ணா? பத்து வருட கோரத்தாண்டவ ஆட்சியின் வெறுப்பில் மொத்த தேசமுமே காங்கிரஸைத் துடைத்து தூர எறிகிற மனநிலையில் இருக்கும்போது, நீங்கள் ஏதோ முதல் ஆளாக அந்த வேலையைச் செய்யத் தொடங்கியதுபோல் தோற்றம் காட்டுவது முறையா அண்ணா? தற்கொலை செய்துகொண்ட ஒருவனைக் கொலை செய்யக் கிளம்பிய முதல் ஆள் நீங்களாகத்தானே இருப்பீர்கள்.
காங்கிரஸ் என்கிற கருநாகத்தைக் கொல்ல பாரதிய ஜனதா என்கிற பாம்பை அல்லவா நீங்கள் பிடித்து வந்திருக்கிறீர்கள்? ஒருமித்துப் போராடி ஒரு தேசியக் கட்சியை விரட்டி அடித்திருக்கையில், இன்னொரு தேசிய கட்சிக்கு வால் பிடித்தபடி வந்து நிற்கிறீர்களே…! இது நியாயமா? ஈழ எதிர்ப்பு மனோபாவத்தில் காங்கிரஸுக்கு எந்தவிதத்திலாவது குறைந்த கட்சியா பாரதிய ஜனதா? நீங்கள் உயிர் மூச்சாக எண்ணும் தனித் தமிழீழக் கோரிக்கையில் சோவும், சுப்ரமணிய சுவாமியும், வெங்கையா நாயுடுவும், சுஷ்மா சுவராஜும் என்ன நிலைப்பாட்டை அண்ணா எடுத்திருக்கிறார்கள்? இனத்தின் விடிவுக்காக இன்னுயிர் துறந்து போராடிய புலிகளை தீவிரவாதிகளாவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் அத்தகைய தலைவர்களோடு எப்படி அண்ணா நீங்கள் நிலைத்திருக்கப் போகிறீர்கள்? இனவெறிக் கொடூரன் ராஜபக்சேயின் வருகையைக் கண்டித்து
இங்கிருந்து பேருந்து பிடித்து பெரும் கூட்டத்தோடு சாஞ்சிக்குப் போய் நீங்கள் போராடினீர்களே..! ராஜபக்சேயை அங்கே வர வைத்தது பாரதிய ஜனதாவின் சுஷ்மா சுவராஜ்தானே அண்ணா…! புத்த விகாரங்களைத் திறக்க உலகில் எத்தனையோ புத்த மதத் தலைவர்கள் இருக்க கொடுங்கோலன் ராஜபக்சேயை அழைக்க வேண்டிய அவசியம் சுஷ்மாவுக்கு ஏன் வந்தது? சாஞ்சிக்குள் உங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததும் இதே பாரதிய ஜனதா ஆட்சிதானே…! இனவெறியில் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கும், மதவெறியில் முஸ்லிம்களைக் கொன்ற மோடிக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? ‘போரில் மடிந்தவர்களுக்குப் பொறுப்பேற்க முடியாது’ என ராஜபக்சேவும், ‘கலவரத்தில் மடிந்தவர்களுக்குக் காரணம் நானா?’ என மோடியும் கொடுக்கிற விளக்கம் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா அண்ணா? திருச்சி அரியலூர் ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்
தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாரே…! ரயிலை அவரா ஓட்டி வந்தார்? கொலைகாரன் ராஜபக்சே அதிபராவதற்கும், மோடி பிரதமராவதற்கும் ஏதும் வித்தியாசம் இருக்கிறதா அண்ணா? ‘மோடி வெற்றி பெற்றால் ஈழம் கிடைக்கும்’ என்கிறீர்களே…! என்றைக்காவது ஈழம் குறித்து மோடி முழங்கி இருக்கிறாரா அண்ணா? ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என அம்மையார் ஜெயலலிதா சொன்னதை நான் பரப்புரையில் சொன்னேன். அதற்கே ஏக விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால், மோடி சொல்லாத ஒன்றையே பரப்புரையாகச் சொல்லி வாக்கு சேகரிக்கிற உங்களை எப்படி அண்ணா ஈழமும், தமிழகமும் ஏற்கும்? தம்பிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் நீங்களே காத்ததாகத் தேர்தல் பரப்புரையில் திரும்பிய பக்கம் எல்லாம் சுவரொட்டிகள்.
மூவரையும் காக்க முழுமுதற் காரணம் நீங்களாகவே இருக்கலாம். யார் யாரோ இருக்கும்போது நீங்கள் இருப்பதில் தவறில்லை அண்ணா. திருநெல்வேலி மாநாட்டில் ‘மூன்று பேர் உயிர் காத்தேன்’ என நீங்களே புத்தகம் எழுதி வெளியிட்டீர்கள். நீங்கள் ஒன்றரை ஆண்டு பொடா சிறையில் இருந்தபோது, உங்களைச் சந்திக்க வந்த ஒருவரையாவது அந்தத் தம்பிகளைச் சந்திக்க நீங்கள் அனுமதித்தது உண்டா? ‘21 வருடங்களாகச் சிறைக்குள் வாடும் அந்தப் பிள்ளைகளைப் பார்த்து ஆறுதல் சொல்லுங்கள்’ என எவரிடமாவது நீங்கள் சொன்னது உண்டா? சிறையில் இருந்து மடல் மடலாக எழுதி அதனை மலராக்கினீர்களே…!
அதில் ஒரு இடத்திலாவது தம்பிகளின் பெயரைக் குறிப்பிடுகிற தைரியம் இருந்ததா அண்ணா உங்களுக்கு? ஆனால், இன்றைக்கு அரசியல் அறுவடைக்கு அதே தம்பிகளின் பெயர்களைச் சொல்ல வேண்டிய சூழல் உங்களுக்கு வந்துவிட்டதே! காலம் திரும்புகிறது என இதனைக் கணக்கில் கொள்ளலாமா அண்ணா! கூட்டணிக் கொடுமைகளைக்கூட சகித்துக்கொண்ட உங்களின் பற்றாளர்கள் சமீபத்தில் பதறிப்போனது ஏன் தெரியுமா அண்ணா? தமிழகத்தின் அறிவார்ந்த பெருமகன் ஒருவரை சமீபத்தில் நீங்கள் வீடு தேடிப்போய் சந்தித்தீர்களே…! மக்கள் செல்வாக்கு கொண்ட அந்த மகத்துவ தலைவனிடம் ஆதரவு கேட்டு நின்றீர்களே…! நீங்கள் தேடிப்போய் சந்திக்கிற அளவுக்கு அழகிரி என்ன அவ்வளவு பெரிய ஆளா அண்ணா? இனத்துக்காக எரிந்து தம்பி முத்துக்குமார் கரிக்கட்டையாகக் கிடக்க, நீங்களும் நானும் ஆறுதலற்று அழுது கதறிக் கொண்டிருக்கையில் பிரியாணி போட்டு பிறந்த நாள் கொண்டாடிய பெருந்தகையாளர் அல்லவா அந்த அழகிரி?
2008 மாநாட்டில் தீவட்டிக் கொள்ளைக்காரன் என்றும், கொலைகாரன் என்றும், இவனுக்கா பட்டுக்கோட்டை அழகிரியின் பெயர் என்றும் கொந்தளித்தீர்களே…! அவருக்குத்தான் பழைய பாடல்களைப் பரிசளித்தீர்களா? ‘உங்கள் நாக்கை மியூசியத்தில் வைக்கலாம்’ என இணையதளங்கள் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லையே அண்ணா? ‘நானா அவரைக் கூப்பிட்டேன். அவரா வந்தார். ஆதரவு கேட்டார். நான் அதரவு கொடுக்குறேன்னு சொல்லலையே…’ என அழகிரி உங்கள் சந்திப்பைக்கூட உப்புச்சப்பற்ற நிகழ்வாகச் சித்தரித்துச் சிரித்தபோது எனக்கு வந்த ஆத்திரமும், கோபமும் உங்களுக்கும் வந்ததா அண்ணா? மார்க்ஸ், சாக்ரடீஸ், பெரியார், அம்பேத்கார், புத்தன், பூலே, அரிஸ்டாட்டில், ஸ்டாலின், கரிபால்டி, மா&சே&துங், சேகுவேரா, கோசிமின், பிடல் காஸ்ட்ரோ, ஆபிரகாம் லிங்கன், மால்கமேக்ஸ், மார்டின் லூதர் கிங், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், உயிர்நிகர் தேசியத் தலைவர் பிரபாகரன் என உலகின் அறிவுசார் பெருமக்களை எல்லாம் சுட்டிக்காட்டி மேடையில் முழங்குவீர்களே…!
எங்கள் நரம்புக்குள் முறுக்கேற்றிய உரைகள் அல்லவா அவை. உலகளாவிய பெருமக்களைப் பற்றிய அறிவை இளைய சமுதாயத்துக்கு ஏற்படுத்திய நீங்கள் இன்றைக்கு யாருக்கு அருகே போய் நிற்கிறீர்கள் என்பதைப் பார்த்தீர்களா? பேசுகிறாரா பிதற்றுகிறாரா என்றே தெரியாத ஒரு தள்ளாட்டத் தலைவனுக்கு அருகே நிற்கத்தான் உலகத்தின் பேரறிவாளர்களைப் பற்றியெல்லாம் பேசினீர்களா நீங்கள்? ‘கேப்டன் 40 தொகுதிகளிலும் பரப்புரை செய்வதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்’ என நா கூசாமல் சொல்கிறீர்களே…! இந்தளவுக்கு இறங்கிப்போக கேடுகெட்ட அரசியல் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து விட்டதா அண்ணா? அவர் இருக்க வேண்டிய இடத்தில் 14 தொகுதிகளோடு நீங்கள் தலைமைத் தலைவனாக நிலைத்திருந்தால் எங்கள் நெஞ்சங்கள் எப்படிச் சிலிர்த்திருக்கும்.
அவருக்குக் கீழ் இயங்குகிற நிலையை நீங்களே ரசிக்கத் தொடங்கியது ஏன் அண்ணா? மனம் முழுக்க இன்னும் இன்னும் எவ்வளவோ ஆதங்கமும், கேள்விகளும் இருக்கின்றன. ஆனாலும், நீங்கள் தோற்றுவிடக் கூடாது என்கிற துடிப்பு நெஞ்சை உலுக்குகிறது அண்ணா. நாடி நரம்புகளில் நீங்கள் ஏற்றிய இனவெழுச்சியும், உணர்வெழுச்சியும் துளியும் குறையாதவனாகச் சொல்கிறேன். உங்களின் நாளைய வெற்றிக்கு இப்போதே எனது இதயமார்ந்த வாழ்த்துகள். -பற்றி எரியும்…