வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிதி, நியதிச்சட்டங்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்படுகின்றதென நேற்று மாகாண சபையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை நிதி, நியதிச்சட்டங்களை உருவாக்கியுள்ள நிலையில் இச் சட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டமொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கூட்டத்திற்கு முதலமைச்சர் உள்ளிட்ட இச்சபையின் உறுப்பினர்கள் சமுகமளித்திருந்த நிலையில் ஆளுநர் இச் சட்டங்கள் தொடர்பாக ஆராயவேண்டும் என்பதற்காகவும் அவருடைய அனுமதியைப் பெறுவதற்காகவும் இக்கூட்டத்தை இம்மாதம் 26ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாகவும் அவைத் தலைவர் அறிவித்தார்.
இந்த விசேட கூட்டத்தில் அவைத் தலைவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்டுள்ள நிதி,நியதிச் சட்டங்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்து இது தொடர்பான முடிவுகளை இரண்டு வாரகாலத்திற்குள் அனுப்பி வைப்பதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண சபைகள் கட்டளைச் சட்டத்தில் 24(1) பிரிவின் செயற்பாடுகளையும் அவர் கவனத்திற்குக்கொண்டு வந்துள்ளார்.
இப்பிரிவிற்கமைய இவ் நிதி,நியதிச்சட்டங்களை ஆக்குவதற்கு சட்ட அதிகாரம் இருக்கிறதா. அத்தகைய ஏதேனும் விடயங்கள் தொடர்பில் உருவாக்கப்படுகின்ற நிதி,நியதிச் சட்டமானது பின்வரும் எவையேனும் கருமங்களுக்கு அத்தகைய நியதிச் சட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் ஆளுநரின் விதப்புரையின் மீதன்றி மாகாண சபையொன்றில் கொண்டு வரப்படுதலுலோ அல்லது முன்மொழியப்படுதலோ ஆகாது.
வரியை எதனையும் ஒழித்தல், குறைத்தல், மாற்றுதல், ஒழுங்குபடுத்தல் இந்த விடயங்களுக்குள் எமது நியதிச் சட்டம் உள்ளடக்கப்படுகின்றது என்ற காரணத்தினாலும் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எமக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதியை வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சபை நடவடிக்கை குழுவில் விவாதித்துள்ளோம். இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன.
ஒன்று நாங்கள் அனுப்பி வைத்துள்ள முதலமைச்சர் நிதியில் திருத்தங்கள் செய்யவேண்டியுள்ளது. இதேபோல் அங்கத்தவர்களும் அந்த வரைபினுடைய முழுமையான தமிழ்ப்
பிரதி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இதனையும் அனுப்பி வைக்க வேண்டும். இதேபோல் எங்களுடைய நிதி,நியதிச்சட்டமானது கிழக்கு மாகாண சபையின் நிதிநியதிச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தையும் ஆளுநருக்கு நான் தெரியப்படுத்தியுள்ளேன்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாண சபையின் ஒரு பிரதியையும் நாங்கள் வரைவு செய்துள்ள சட்டத்தின் ஒரு பிரதியையும் அதில் செய்யப்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு அனுப்புவதன் மூலம் இதனை ஆளுநர் வரைவாக அங்கீகரிக்கக்கூடியதாக இருக்கும். இலகுபடுத்தக்கூடியதான நடவடிக்கைகளை பிரதம செயலாளர் செய்யவேண்டும் என்றார்.
மாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கமைய நிதி நியதிச் சட்டங்கள் மீதான விவாதம் இடை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சபையின் இரண்டுவார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று இடம்பெற்றுவருகிறது. இந்த அமர்வின் போது நிதியியல் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இன்றைய அமர்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி விடுத்த கோரிக்கைக்கு அமைய இரண்டு வார காலத்துக்கு குறித்த விடயம் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.