ஆணைக்குழுவிடம் 18600 முறைப்பாடுகள் - இரகசியமாக பான் கீ மூனிடம் சிறிலங்கா அமைச்சர் - TK Copy ஆணைக்குழுவிடம் 18600 முறைப்பாடுகள் - இரகசியமாக பான் கீ மூனிடம் சிறிலங்கா அமைச்சர் - TK Copy

  • Latest News

    ஆணைக்குழுவிடம் 18600 முறைப்பாடுகள் - இரகசியமாக பான் கீ மூனிடம் சிறிலங்கா அமைச்சர்

    இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற
    போரின் போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 18,600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை குறித்த ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த ஜனவரியில் இருந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மூன்று அமர்வுகளை நடத்தியுள்ளது.

    நான்காவது அமர்வு இந்த வாரத்தில் மட்டக்களப்பில் நடத்தப்படவுள்ளது. இந்தநிலையில் இதுவரை ஆணைக்குழுவுக்கு 18,600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் 5000 முறைப்பாடுகள் பாதுகாப்பு படையினர் தொடர்பானதாகும் என்று ஆணைக்குழுவின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணைக்குழு 1990 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துகிறது. இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமானது. 

    காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்றைய அமர்வு நடைபெற்றது. ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக இன்றைய தினம் 59 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 49 பேர் சமூகமளித்து சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவிக்கின்றார். இதுதவிர இன்றைய தினம் புதிதாக மேலும் 16 பேரின் முறைபாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதான அவர் குறிப்பிட்டார். 

    குருக்கள் மடத்தில் 163 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இன்று அநேகமானோர் சாட்சியமளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அமர்வுகள் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நாளையும் இடம்பெறவுள்ளன. இரகசியமாக பான் கீ மூனைச் சந்தித்த சிறிலங்கா அமைச்சர் சிறிலங்காவின் இளைஞர் விவகார அமைச்சர், திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும, கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 

    இந்தச் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா தலைமையகம், இதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேவேளை, சிறிலங்கா அரசாங்கமும் இந்தச் சந்திப்புக் குறித்த காரணத்தையோ, அதுபற்றிய எந்த விபரங்களையோ வெளியிடவில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணைக் குழுவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடவுள்ள சந்தர்ப்பத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஆணைக்குழுவிடம் 18600 முறைப்பாடுகள் - இரகசியமாக பான் கீ மூனிடம் சிறிலங்கா அமைச்சர் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top