பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்
தொடங்கப்பட்ட 5 நாட்களுக்குள் 17 லட்சம் லைக்களை பெற்று சாதனை படைத்துள்ளது. புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடி, சமூக வலைதளங்களில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல் அவரது அமைச்சரவை சகாக்களும் செயல்பட வேண்டும் அவர் எதிர்பார்க்கிறார். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்துக்கென அதிகாரப்பூர்வ இணையதளம், டுவிட்டர் கணக்கு இருக்கும் நிலையில், பேஸ்புக் பக்கம் புதிதாக தொடங்கப்பட்டது.இதில், முகப்பு படமாக, பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தில் பணியாற்றும் படம் இடம் பெற்றுள்ளது. மேலும், பிரதமரை பார்க்க வரும் தலைவர்கள், அவர்களை வாழ்த்தும் படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்ட 5 நாளில் 17 லட்சத்துக்கும் அதிமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் பக்கத்தில் புகையிலை எதிர்ப்பு தினத்தில் பிரதமர் தெரிவித்த கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், நூற்றுக்கணக்கான பரிந்துரைகளும் கொடுத்துள்ளனர். ஏற்கனவே, பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்தை 17 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.