ரசிகர்களில் பெரிய எதிர்பார்ப்புடன் ஐ.பி.எல் 7வது
தொடரின் போட்டிகள் ஏப்ரல் 16ம் திகதி முதல் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு பலத்த போட்டி நிலவும். இன்னும் இரண்டாம் கட்டப்போட்டிகள் முடியாமல் இருப்பதால் கிண்ணத்தை கைப்பற்றப் போகும் அணி எது என்பதை கணிப்பது கடினமான ஒன்றாகவே உள்ளது.அந்த வகையில் சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஐ.பி.எல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அடுத்த மாதம் பிரேசிலில் நடக்கவிருக்கும் உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு இப்பொழுதே ரசிகர்கள் தயாராகி விட்டனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கிண்ண கால்பந்து தொடர் வரும் யூன் 12ல் பிரேசிலில் தொடங்குகிறது. ஒரு மாத காலம் நடக்கும் இத்திருவிழாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
இருபதாவது உலகக்கிண்ணத் தொடர், கால்பந்து மோகம் கொண்ட பிரேசில் மண்ணில் வரும் யூன் 12 முதல், ஜூலை 13வரை நடக்கிறது. மொத்தம் 32 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 64 போட்டிகள் நடக்கவுள்ளன. பிரேசிலை விட, இந்தியாவின் நேரம் 8.30 மணி நேரம் முன்னதாக உள்ளதால், இந்திய நேரப்படி போட்டிகள் இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30, 1.30க்கு தொடங்கும். இது தவிர, அதிகாலை 3.30க்கும், ஒரு சில போட்டிகள் காலை 6.30 மணிக்கும் தொடங்குகிறது.
கால்பந்தின் தோற்றம்
உலகின் மிகவும் பழமையான விளையாட்டு கால்பந்தாகத் தான் இருந்துள்ளது.முதலில் ஆதிமனிதர்கள் மண்டை ஓடுகளை கால்களால் உருட்டி கால்பந்து விளையாடினர். அதுமட்டுமல்லாது மூன்றாம் நுாற்றாண்டில் சீனாவில், கால்பந்து பிறந்ததாக கூறப்படுகிறது. இங்கு முதலில் ‘சிஜு’ என்ற பெயரில் இறகுகள் நிரப்பப்பட்ட தோல் பந்துகளில் கால்பந்தாட்டங்களை விளையாடினர். பின் ‘டாங்’ அரச பரம்பரை காலத்தில் காற்று நிரப்பிய பந்துகள் அறிமுகமானதாக கூறப்படுகிறது.
‘ஃபிபா’ அறிமுகம்
பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் (ஃபிபா) தேசிய அணிகளுக்கிடையே நடத்தப்படும் கால்பந்தாட்டப் போட்டியாகும். கடந்த 1863ல் நவீன கால்பந்து இங்கிலாந்தில் உருவானது. இதைத் தொடர்ந்து போட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதனால் 1904, மே 21ம் திகதி பாரிசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) உதயமானது.
முதல் உலகக்கிண்ணம்
ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டிக்கு அமோக வரவேற்பு கிடைக்க, சர்வதேச அளவில் உலகக்கிண்ணத் தொடரை நடத்தும் யோசனை பிரான்ஸ் கால்பந்து சங்க தலைவர் ஜூல்ஸ் ரிம்மட் மனதில் தோன்றியது. இதையடுத்து ‘ஃபிபா’ சார்பில் 1930ல் முதலாவது உலகக்கிண்ணம் தொடர் உருகுவேயில் நடந்தது. தற்போது ‘பிபா’ உறுப்பினர்களாக உள்ள 204 நாடுகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதிலிருந்து 32 நாடுகள் உலகக்கிண்ணத் தொடரில் கலந்து கொள்கின்றன.
கால்பந்து காதலர்கள்
உலகின் மற்ற இடங்களில் பிப்ரவரி 14ல் கொண்டாடப்படும் காதலர் தினம், பிரேசிலில் யூன் 12ல் கொண்டாடப்படுகிறது. இதே நாளில் உலகக்கிண்ணத் தொடரும் தொடங்குவதால், ‘சம்பா’ நடனம் உள்ளிட்ட உற்சாகங்களுக்கு குறைவிருக்காது.
கடந்த கால கால்பந்தின் முக்கிய நிகழ்வுகள்
ரெட் கார்டு
1974ல் மேற்கு ஜேர்மனி அணிக்கெதிரான முதல் சுற்று ஆட்டத்தில் முரட்டுத்தனமாக ஆடி உலகக்கிண்ண வரலாற்றில், ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு முதன்முதலாக வெளியேற்றப்பட்ட வீரர் சிலியை சேர்ந்த கார்லஸ் கேஸ்ஜெலி ஆவார்.
5 முறை சாம்பியன்
உலகக்கிண்ணத்தொடரில் பிரேசில் அணி தான் அதிகபட்சமாக 5 முறை (1958, 1962, 1970, 1994, 2002) கிண்ணம் வென்றது. தவிர, 7 தொடர்களில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்திய இந்த அணி, உலகக்கிண்ண கால்பந்து வரலாற்றில், மொத்தம் 210 கோல்கள் அடித்துள்ளது.
கால்பந்துக்கு தடை
கால்பந்து மோகம் கொண்ட இங்கிலாந்து, அதற்கு தடை விதிக்கப்பட்ட வரலாறும் உண்டு. இங்கிலாந்து – பிரான்ஸ் இடையே சுமார் 100 ஆண்டுகள் (1338–1453) நடந்த போரின் போது, முக்கியமான வில்வித்தையை மறந்து, படை வீரர்கள் அனைவரும் கால்பந்து விளையாடினர். இதனால் ஆத்திரமடைந்த மூன்றாம் எட்வர்ட், கால்பந்துக்கு தடை விதித்தார். அதன் பின் ராணி எலிசபெத் காலத்தில் தடை நீக்கப்பட்டு, கால்பந்து மகத்தான வளர்ச்சி கண்டது.
உலகக்கிண்ண தகுதி
உலகக்கிண்ணத் கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இரண்டு ஆண்டுகளாக (2011, யூன் 15- 2013, நவம்பர் 20 வரை) உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த 820 தகுதிச்சுற்று போட்டிகளின் முடிவில் தான், 31 அணிகள் இத்தொடருக்கு முன்னேறியுள்ளது. தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பிரேசில் அணி 32வது அணியாக நேரடியாக தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
உலகப்போர்
முதல் மூன்று உலகக்கிண்ணத் தொடர்கள் (1930, 34, 38) வெற்றிகரமாக நடந்தன. அதன் பின் இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 46ல் நடக்க இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
‘கோல் லைன்’
தொழில்நுட்பம் பந்து கோல் எல்லையை தாண்டியதா, இல்லையா என்பது குறித்து தெளிவாக அறிய, உலகக்கிண்ணத் தொடரில் முதன் முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன்படி, பந்துக்குள் சிறிய அளவிலான ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டு, இதிலிருந்து வரும் சிக்னல்கள் மூலம், முடிவு அறியப்பட்டது.