'' 'கடல்’ படம் எனக்கு கிடைச்ச மிகப் பெரிய கிஃப்ட். முதல் படத்திலேயே
மணிரத்னம் சாரோட டைரக்ஷன்ல நடிக்கிறதுக்குக் கொடுத்துவெச்சிருக்கணும். மணி சார் என்னை 'டீ’னு நிக்நேம் சொல்லிக் கூப்பிடுறது ரொம்பப் பிடிக்கும். இப்போ 'யான்’ல நடிச்சிருக்ருக்கேன். எனக்கு ஸ்கூல் எக்ஸாம் நடக்கிறதால, கொஞ்ச நாளைக்கு படிப்பு மட்டும்தான்'' மழலை மாறாமல் பேசுகிறார் துளசி.
''கதையைக் கேட்கிறதுல இருந்து, படத்தை ஓகே பண்றவரை... எல்லாமே அம்மாதானாமே?''
'' எந்தக் கதையையும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் கேட்போம். சின்னச் சின்ன அட்வைஸ் சொல்றதைத் தவிர, வேற எந்த விஷயத்திலேயும் தலையிட மாட்டாங்க. அப்படியே இருந்தாலும், அம்மா பிரபலமான நடிகை. அவங்க தலையிடுறதுல ஒண்ணும் தப்பில்லையே?''
''தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஜெயிக்கிற அளவுக்கு, வாரிசு நடிகைகள் ஜெயிக்க மாட்டேங்கிறாங்களே?''
''கவலைப்படாதீங்க. நான் மட்டுமில்ல. எல்லா வாரிசு நடிகைகளும் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து, வாரிசு நடிகர்களுக்கு டஃப் கொடுப்பாங்க, பாருங்களேன்.''
'' 'அக்காவோட நடிச்சதுக்கும், என்கூட நடிச்சதுக்கும் என்ன வித்தியாசம்?’னு ஜீவாகிட்ட கேட்டீங்களா?''
''கேட்காம இருப்பேனா? 'அக்கா ரொம்ப போல்டா, தைரியமா இருப்பாங்க. நீ கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் கேலினு பச்சைக் குழந்தையா இருக்கே’னு கமென்ட் பண்ணார். 'ஷூட்டிங்ல டேக் போகும்போது பாருங்க, சீரியஸ் ஆயிடுவேன்’னு சொன்னதோட, ஒரே டேக்ல ஓகே வாங்கி அசத்தியிருக்கேன்.''
''ஜீவாவுக்கு சினிமாவில் நண்பர்கள் அதிகம். உங்களுக்கும் அவங்களோட அறிமுகம் கிடைச்சிருக்குமே?''
''அந்த மாதிரி வாய்ப்புகள் எனக்கு வரலை. அக்கா கார்த்திகா, 'கடல்’ல நடிச்ச கௌதம், அர்ஜூன் சார், லக்ஷ்மி மஞ்சு இவங்கதான் என்னோட நண்பர்கள். 'யான்’ல நடிச்சதுக்கு அப்புறம் ஜீவாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆகிட்டார். ஒவ்வொரு சீனுக்கும் 'இப்படி பண்ணா சூப்பரா இருக்கும்’னு டிப்ஸ் கொடுப்பார். 'யான்’ படத்துல எனக்கும் ஜீவாவுக்குமான ரொமான்ஸ் சூப்பரா வந்திருக்கும். அதுக்குக் காரணம் அவர்தான்!''
''அக்கா கார்த்திகாவும் நடிகை, நீங்களும் நடிகை... உங்களுக்குள்ளே போட்டி வரலையா?''
''வயசுல மட்டுமில்ல, நடிப்புலேயும் கார்த்திகா என்னோட குரு, ரோல்மாடல், இன்ஸ்பிரேஷன் எல்லாமே. அவளோட வளர்ச்சி, தங்கச்சியான எனக்கு ரொம்ப சந்தோஷம். ஷூட்டிங் இல்லாத சமயத்துல ஏ டு இஸட் சினிமா விஷயங்களை அலசுவோம்.''
''உங்களுக்கும் அக்காவுக்கும் நடந்த சுவாரஸ்யமான சண்டை ஏதாவது?''
''அடிக்கடி சண்டை வர்றது டிரெஸ் விஷயத்துலதான். என்னோட டிரெஸ்ஸை அவ எடுத்துப் போட்டுக்குவா... அப்புறமென்ன? ஒருத்தருக்கு ஒருத்தர் முடியைப் பிடிச்சுக்கிட்டு அடிச்சுக்குவோம். ஆனா, சண்டை போட்ட ரெண்டாவது நிமிஷம் சேர்ந்துடுவோம்.''
''டீன் ஏஜ் பொண்ணுக்கு லவ் வராம இருந்திருக்காதே?''
''(சத்தமாகச் சிரிக்கிறார்) எல்லாருக்குமே கையில ராக்கி கட்டிவிட்டு 'அண்ணா’னு சொல்லிடுவேன். 'நல்லா படிக்கணும், கல்யாண வயசு வந்ததும் நாயர் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும், அதுவும் அரேஞ்ச்டு மேரேஜாதான் இருக்கணும்’னு மனசுல தீர்மானிச்சு வெச்சுட்டேன்''
ரொம்ப உஷார் பார்ட்டி!