ஒரு கல்யாணம்... ஒரு கடத்தல். அந்தக் கடத்தல் ஒரு நிமிடம் முன் பின்னாக
நடந்தால் என்ன ஆகும் என்ற ஃபேன்டசி கற்பனையே இந்தக் களவாணி களின் கதை!
நடந்தால் என்ன ஆகும் என்ற ஃபேன்டசி கற்பனையே இந்தக் களவாணி களின் கதை!
அருள்நிதியின் காதலி ஹஷ்ரிதாவுக்கு 'கட்டாயத் திருமணம்’ முடிக்கத் திட்டமிடுகிறார்கள் அவரது பெற்றோர். திருமணத்தில் புகுந்து தன் காதலியைக் கடத்த நண்பர்கள் பிந்து மாதவி, பகவதி பெருமாளோடு திட்டமிடுகிறார் அருள்நிதி. 'நாரதர் கலகம்’ காரணமாக இதை 'மேலே’ இருந்து கவனிக்கும் சிவபெருமான், அருள்நிதி குரூப் கடத்தலுக்குக் கிளம்புவதை ஒரு நிமிடம் முன் பின் நிகழ்த்திக் காட்டுகிறார். ஒரே சம்பவம் ஒரு நிமிட வித்தியாசத்தில் மூன்று விளைவுகளைக் கொடுப்பதே படம்!
'ரன் லோலா ரன்’ படத்தின் 'நிமிட வித்தியாச’ முடிச்சை எடுத்துக்கொண்டு, சிவன், நாரதர், காதலி கடத்தல் என லோக்கல் டச் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். (ஜெர்மனியில் காதலனைக் காப்பாற்ற காதலி ஓட, சென்னையில் காதலியை மீட்க காதலன் ஓடுகிறார்!) அந்நியத் தழுவல் என்றாலும் குட்டிக் குட்டி ட்விஸ்ட்கள் மற்றும் சுவாரஸ்யத் திருப்பங்கள் மூலம் ரசிக்கவைக்கிறார் சிம்புதேவன். ஒரே 200 ரூபாய் ஒவ்வொரு வெர்ஷனிலும் வெவ்வேறு நபர்களிடம் கைமாறுவதும், ஒரு போலீஸ் - ரவுடி கதை வெவ்வேறு க்ளைமாக்ஸுடன் முடிவதும், துப்பாக்கியைக் கையாளாத அத்தியாயத்தில் நல்லதே நடப்பதும் என க்ளீன் ட்ரீட்மென்ட்!
ஓடிக்கொண்டே இருப்பதைத் தவிர அருள்நிதிக்குப் பெரிய வேலை இல்லை. கையில் அடிபட்டிருக்க, ஹஷ்ரிதா 'அந்த சமயம்’ உதவும் காட்சியில் மட்டும் கொஞ்சமாக நடித்துக் காண்பித்திருக்கிறார். ஏஞ்சலினா ஜோலியின் கோடம்பாக்க ஜெராக்ஸாக வெடவெடக்கிறார் பிந்து மாதவி. பென்சில் அழகிக்கு ஆக்ஷன் ரோல் நன்றாகவே கை கொடுக்கிறது. மூன்று அத்தியாயங்களில் ரிப்பீட் காட்சி அலுப்பு சலிப்பில் இருந்து காப்பாற்றுவது பிந்து மாதவியின் கிறக்கக் கண்களும் ஹனி ஸ்மைலும்தான்!
மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சீரியஸாக உலாவர, சிரிசிரிக்க வைக்கிறார் பகவதி பெருமாள். 'என்கிட்டலாம் ஃப்ளாஷ்பேக் கேட்காதீங்கப்பா... என் முஞ்சைப் பார்த்தாலே தெரியலை, எனக்கு பணப் பிரச்னை இருக்குனு’, 'பணத்தை வாங்கிராதே... டோல்கேட் காசு 40 ரூபா சேர்த்து வாங்கு’ என அப்பாவி முகத்துடன் டைமிங் கமென்ட் அடிப்பதும் 'பார்ட்னர் பதற்றத்திலேயே’ வெலவெலப்பது மாகக் கலகல!
ஒவ்வொரு நிமிட இடை வெளியில் மறித்து நிற்கும் லாரி, பள்ளிப் பேருந்து, தர்பூஸ் பெண் மணி... என நுணுக்கமான காட்சி களிலும், 'இந்த முறை ஐந்து உயிர்கள் சாகப்போகின்றன’ என்ற சிவனின் பில்டப்பும், 'இப்பவும் நல்லது நடக்கலைனா, திரும்பவும் ஃபேன் தலையில விழும். இது நமக்குத் தேவையா?’ என்ற வி.எஸ்.ராகவன் பன்ச் அடிப்பதும் செம செம! ஓட்டமும் நடையுமாக சென்னை வீதிகளில் விரையும் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம்.
ஐடியா சுவாரஸ்யமாக இருந்தாலும் 'அய்யய்யோ மூணாவது தடவையா..!?’ என இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீட்டி முழக்கியதில்... ஆவ்வ். இந்தக் கதைக்கு சிவன், பிரம்மா, விதி என ஆன்மிக லெக்சர் அவசியமா?
ஆனாலும், களவாணிகளின் 'ரிலே ரேஸ்’ ஓட்டம்... ஜாலிக் கொண்டாட்டம்!