இராணுவ வெற்றியை பெரும் நிகழ்வாக அரசாங்கம் கொண்டாடும் அதேநேரம்
இறுதி யுத்தத்தில் பலியான மக்களை நினைவு கூர்வது தடுக்கப்படுவது பெரும் அராஜகச் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதுடன், இது குறித்து ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தை கொண்டு தான் தோன்றித் தனமாக செயற்படக்கூடாதென தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;
கடந்த இரு மாதமாக அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பாரதூரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. புலிகள் மீள ஒருங்கிணைக்கின்றனர் எனக் கூறி மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டு பெண்கள் முதியவர்கள் உட்பட 65 பேர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் மூதூர், வெருகல் பகுதிகளில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன. சுற்றிவளைப்பில் 15 முதல் 50 வயது வரையானவர்கள் அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் 10 பேர் அண்மையில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். தற்போது அரசாங்கம் இராணுவ வெற்றியை பெரும் நிகழ்வாகக் கொண்டாடுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளது. 40 ஆயிரத்துக்கும் 70 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவிக்கும் அதேவேளை நாம் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாமென கூறுகின்றோம். இவ்வாறான நிலையில் பலியான மக்களை நினைவு கூர்வது சட்டப்படி குற்றமாகவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும்.
இராணுவம் யாழ். பல்கலைக்கழகத்தை பூட்டச் சொல்கின்றது. மாணவர்களையும் ஆசிரியர்களையும் அச்சுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்படுகின்றன. அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து பேசும் அதேநேரம் மறுபக்கம் தமிழ் மக்களை அடக்கியாள்கின்றனர். உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கான பொதுக் கூட்டத்தை நடத்துவதை கூட தடுத்து அடக்குகின்றது. இவ்விவகாரம் குறித்து தமிழ் அரசியல் தலைவர்களை ஜனாதிபதி அழைத்து கூடிப் பேசி முடிவெடுத்திருக்க வேண்டும். இதை விடுத்து இராணுவத்தை கொண்டு தான்தோன்றித் தனமாக செயற்படுகின்றது.
இராணுவ ஆட்சியே இடம்பெறுகின்றதென வடக்கில் ஜனநாயகமில்லை நாம் கூறியுள்ள நிலையில் வடக்கை இராணுவத்திடம் கையளித்திருப்பது குறித்து நிரூபிக்கும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இந்த நேரம் முல்லைத்தீவிலிருந்து 50 பேர் அகதிகளாக அவுஸ்திரேலியா செல்வதற்கு புறப்பட்டுள்ளனர். இதேநேரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சுமார் ஆயிரம் பேர் நிம்மதியாக வாழ முடியாது துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமையை மாற்றி அமைத்ததாக அரசாங்கம் கூறுகின்றது. ஜனாதிபதி டுவிட்டர், பேஸ்புக்கில் வடக்கு இளைஞர் தொடர்பில் அரசு சாதித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
ஆனால் அங்கு நடப்பதே எதிர்மாறாகவுள்ளது. ஜனாதிபதித் தமிழ் தலைமைகளோடு பேசி கையாள வேண்டுமே தவிர இராணுவம் இவ்விடயத்தில் செயற்படுவதக்கு அனுமதிக்கக்கூடாது. இராணுவ வெற்றியை கொண்டாடலாம். என்றால் இறுதி யுத்தத்தில் பலியானவர்களை நினைவு கூர்வது தடுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. புலிகளை தமிழ் மக்கள் விடுதலை வீரர்களாக கருதுகின்றனர். மறுபக்கம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் மக்களை வீட்டில் நினைவு கூருமாறு சொல்லிவிட்டு இராணுவ வெற்றியை டாம்பீகமாக கொண்டாடுவது சரியன்று ஜனாதிபதி நல்லுறவு பற்றி பேசுகின்ற நிலையில் இந்த நிலைப்பாட்டை கைவிட வேண்டும் என்றார்.