பொதுவேட்பாளர் விவகாரம் - விக்கியை நிராகரிக்கும் சிங்களக் கட்சிகள்! - TK Copy பொதுவேட்பாளர் விவகாரம் - விக்கியை நிராகரிக்கும் சிங்களக் கட்சிகள்! - TK Copy

  • Latest News

    பொதுவேட்பாளர் விவகாரம் - விக்கியை நிராகரிக்கும் சிங்களக் கட்சிகள்!

    வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிக்க எந்தவித தேவையும் இல்லை.
    அவசியமிருப்பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை. எனினும் பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவையுள்ளது என்று ஜே.வி.பி. தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர்.

    இது குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் வினவிய போதே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர். 

    கயந்த கருணாதிலக

    இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பிலோ அல்லது வேறு ஒருவரை பொது வேட்பாளராக நியமிப்பதா என்பது குறித்து நாம் இதுவரையில் முடிவெடுக்கவில்லை. அதற்கான அவசியம் இப்போதைக்கு இல்லையென்றே நாம் நினைக்கின்றோம். அரசாங்கம் எவ்விதமானதொரு தேர்தலை நடாத்தும் என்பது இன்னமும் முடிவான நிலையில் இவ்வாறான கேள்வி எழுவது பொருத்தமற்றதொன்றாகும். 

    விக்னேஸ்வரன் மட்டுமல்ல யார் வேண்டுமென்றாலும் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படலாம். ஆனால் தெரிவு செய்யப்படுபவர் பெரும்பான்மை இன சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வெறுமனே சிறுபான்மை தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்து வெற்றி பெற முடியாது. எனவே காலத்தின் தேவைக்கேற்ப நாம் தீர்மானங்களை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார். 

    சரத் பொன்சேகா 

    இது தொடர்பில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவிக்கையில்:- ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனைய தேர்தல்களைப் போல் அல்ல ஜனாதிபதி தேர்தலென்பது நாட்டின் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலே இது. இதன்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பொது வேட்பாளருக்கான தேவை இருக்கும். எனவே ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் எம்முடன் இணைய விரும்பும் சிறு கட்சிகள் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய பின்னரே சரியானதும் உறுதியானதுமொரு வேட்பாளரை நியமிக்க முடியும். 

    எனவே இது தொடர்பில் முடிவுகளை எடுக்க காலம் உள்ளது. விக்னேஸ்வரன் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் வந்துள்ளதே தவிர சரியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. அனைத்து இன மக்களையும் கவரக்கூடிய வகையில் ஒருவரை நியமிப்பதே சரியானதாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். 

    ரில்வின் சில்வா

    இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நியமிப்பது தவறில்லை. அவருக்கு அதற்கான உரிமையும் தகுதியும் உள்ளது. ஆயினும் மூவின மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலின் போது அவசியமானது எனவே தமிழர்களின் முழுமையான வாக்குகள் அவசியம் என்பதைப் போலவே சிங்கள மக்களின் வாக்குகளும் அவசியம். 

    பிரதான எதிர்க்கட்சியாகவோ அல்லது பொது எதிர்க்கட்சியாகவோ இணைந்து தேர்தல் போட்டியிட்டாலும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறவேண்டியதொரு தேவை உள்ளது. எனவே அதற்கு ஏற்றாற் போலவே வேட்பாளரையும் நியமிக்க வேண்டும். எனினும் மக்கள் விடுதலை முன்னணியினரைப் பொறுத்த மட்டில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுபவர் அரசியல் கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தாதவராகவே இருக்க வேண்டும். எந்தவொரு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டாலும் அதற்கு நாம் ஆதரவு தெரிவிக்கமாட்டோம். 

    மேலும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைத்தாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் யாரும் ஆட்சியமைப்பதனாலோ நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்பட போவதில்லை. தத்தமது சுயநலத்திற்காகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தவுமே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது என்றார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பொதுவேட்பாளர் விவகாரம் - விக்கியை நிராகரிக்கும் சிங்களக் கட்சிகள்! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top