உயிரினங்கள் ரத்தஓட்டத்தில் இயங்குவதுபோல
கணினிகளை இயங்க வைக்கும் 'எலக்ட்ரானிக் ரத்தம்' தயாராகி வருகிறது. கணினிகளின் யுகமான தற்காலத்தில் கணிப்பொறிகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. எனவே உருவில் சிறியதும், செயல்திறனில் பெரியதுமான கணினிகளின் தேவை அதிகரித்து வருகிறது.மிகச்சிறந்த அதிவேக கணினிகளான சூப்பர் கம்ப்யூட்டர்கள் மலைக்க வைக்கும் திறன் கொண்டவை என்றாலும் அதில் சில பிரச்சினைகளும் உள்ளன. சூப்பர் கம்ப்யூட்டர்கள் மிக அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும், ஏராளமான மின்சாரத்தை பயன்படுத்தும், மேலும் சீக்கிரமே அதன் பாகங்கள் சூடாகி செயல்திறன் குறையும்.
அதன் வெப்பத்தை தணிக்க மாற்று வழிகளை கையாளவும் நிறைய மின்சாரம் தேவைப்படும். கணினிகள் அதிகம் சூடாகாமல் தடுக்கவும், அதிகப்படியான மின்சாரத்தை வீணாக்காமல் கணினிகளை இயக்கவும் புதுமையான வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள் கணினி உலகின் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம். நிறுவனத்தினர்.
அவர்கள் 'எலக்ட்ரானிக் பிளட்' எனப்படும் வழவழப்பான திரவத்தை உருவாக்கி வருகிறார்கள். உடலில் ரத்தம் அவ்வப்போது சுத்திகரிக்கப்பட்டு மூளை மற்றும் உடலுறுப்புகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுபோல இந்த எலக்ட்ரானிக் ரத்தம் கணினிகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
மேலும் அதன் புராசஸர்கள் எளிதில் சூடாகமலும் தடுக்கிறது. 'எலக்ட்ரானிக் பிளட்' தயாரிப்பு குழுவிலுள்ள விஞ்ஞானி புருனோ மைக்கேல் இதுபற்றி கூறுகிறார். "அமெரிக்காவில் டேட்டா சென்டர்கள் மட்டும் பயன்படுத்தும் மின்சாரம் நாட்டின் மொத்த மின்பயன்பாட்டில் 2 சதவீதமாகும். உலக அளவில் அதிக மின்சாரம் நுகரும் நாடுகளில் அமெரிக்கா 5வது இடம் வகிக்கிறது.
கணினிகளில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் மிக அதிக மின்சாரத்தை உறிஞ்சக்கூடியவை. உதாரணமாக பீட்டாபிளாப் என்ற சூப்பர்கணினி கால்பந்து மைதானத்தில் பாதி அளவு உருவம் கொண்டது. இது வினாடிக்கு குவாட்ரிலியன் பைட் வேகம் கொண்டது. (அதாவது ஒரு வினாடி நேரத்தில் கோடிஜ்கோடி பைட் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடியது).
அதிக மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் இந்தக் கணினியின் 'சிப்'கள் விரைவிலேயே சூடாகிவிடும். ஆனால் எலக்ட்ரானிக் பிளட் திரவத்தை ஆற்றல் வழங்குவதற்காக பயன்படுத்தினால் மிக அதிக மின்சாரத்தை மிச்சம் பிடிக்கலாம். அத்துடன் சிப்களை குளிர்ச்சியாக வைப்பதிலும் இந்த திரவம் பயன்படும். இதனால் எதிர்காலத்தில் சூப்பர் கம்ப்யூட்டர்கள்கூட மேஜை கணினியின் உருவத்தை அடையும். அந்த அதிசயம் இருபது ஆண்டுகளுக்குள் நிறைவேறும்" என்கிறார் அவர்.