பெங்களூரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது சென்னை
சூப்பர் கிங்ஸ் அணி. ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதின. இதில், நாணயசுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் டோனி பந்து வீச்சை தெரிவு செய்தார். இதையடுத்து றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக அணித்தலைவர் விராட் கோஹ்லி 49 பந்துகளுக்கு 73 ஓட்டங்கள் எடுத்தார்.யுவராஜ் சிங் 24 பந்துகளுக்கு 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை எடுத்திருந்தது. சென்னை அணியில் நட்சத்திர வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், மோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனை அடுத்து 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 14 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 17.4 ஓவர்களிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை தோற்கடித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டுபிளெச்சிஸ் 54 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 49 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.