ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவிக்கும். அதற்கு முன்னர் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வூட்டும் பணிகளை இன்றிலிருந்து கூட்டமைப்பின் உள்ளூராட்சி, மாகாண சபை உறுப்பினர்கள் ஆரம்பிப்பார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.
மக்கள் பிரதி நிதிகளுடநான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது, எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பன குறித்து பிரதேச ரீதியாக வடக்கு, கிழக்கில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து பொதுவான முடிவொன்றை கூட்டமைப்பின் தலைமை அறிவிக்கும். இந்த அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும். இதன்போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவிக்கும். அதேசமயம், நாம் தேர்தலைப் புறக்கணித்தால் எமது எதிர்கால இலட்சியம் கேள்விக்குறியாகிவிடும்.
எனவே நாம் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையே நாம் கோரி நிற்கிறோம். இதன்படி அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உள்ளூராட்சி, மாகாண சபை உறுப்பினர்களும், கட்சிப் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று முதல் வாக்களிக்க வலியுறுத்தும் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பார். என தெரிவித்தார்